மட்டக்களப்பு | புலனாய்வுப் பிரிவினால் தாக்கப்பட்ட இளைஞர் தடுப்புக் காவலில் மரணம்

புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு, கிழக்கு இருதயபுரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரான சந்திரன் விதுஷன், தடுப்புக் காவலில் மரணமாகியுள்ளதாக அறியப்படுகிறது.

கடந்த இரவு 10:30 மணிக்கு, கிழக்கு இருதயபுரத்திலுள்ள அவரது வீட்டுக்கு வெளியே வைத்து புலனாய்வுப் பிரிவினர் எனத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட சிலர் விதுஷனைக் கைதுசெய்திருந்தனர்.

சம்பவ இரவு வீட்டை விட்டு வெளியே வரும்படி நண்பர் ஒருவரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து விதுஷன் வீட்டுக்கு வெளியே வரும்போது வெளியே வீதியில் நின்ற பொலிஸ் அதிகாரிகள் அவரைப் பொல்லுகளால் தாக்கியதுடன் கைது செய்து கொண்டுபோனதாக விதுஷனின் சகோதரி தெரிவித்துள்ளார்.

இந்று (03) காலை விதுஷனின் இறந்த உடல் அவரின் குடுபத்தாரிடம் கையளிக்கப்பட்டது. சுகவீனம் காரணமாக விதுஷன் மரணமடைந்தாரென பொலிசார் விதுஷனின் பெற்றோரிடம் கூறியுள்ளார்கள்.

விதுஷன் கைதுசெய்யப்பட்டதை நேரில் பார்த்த அயலவர்களின் கருத்துப்படி கைதுசெய்தவர்கள் விதுஷனை மிக மோசமாகத் தாக்கினார்கள் எனக் கூறியுள்ளார்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமரசிறி, விதுஷனின் மரணம் குறித்து விசாரணைகளையும், ஏறாவூர் மஜிஸ்திரேட் நீதிபதி ஜீவராணி கருப்பையாபிள்ளை கொலை விசாரணையையும் ஆரம்பித்துள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.

விதுஷநிந் மரணம் தோடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள, ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்டபிள்யூ ஜயந்தாவின் தலைமையில் பொலிச் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணை அறிக்கை வெளியிடப்படும்வரை விதுஷனின் உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (தமிழ் கார்டியன்)

பிந்திய செய்தி: மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை வெளிவந்துள்ளதாகவும் அதில் மரணத்தின் காரணம் ‘ஐஸ்’ எனப்படும் போதிவஸ்துவின் பாவனையே எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.