International Medical Health Org. (IMHO)Sri Lanka

மட்டக்களப்பு பறங்கியாமடு மக்களின் அவலம் – அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO (USA))


மட்டக்களப்பு, கிரான் பிரிவில் வாழும் 150 குடும்பங்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (International Medical Health Organization (IMHO) USA) முன்வந்துள்ளது.

இங்கு வாழும் 150 குடும்பங்களில் 28 குடும்பங்கள் பெண் தலைமைத்துவத்தைக் கொண்டவை. 122 குடும்பங்கள் மீன் பிடித் தொழில் தெரிந்தவர்கள். இந்த 122 குடும்பங்களிலும், 40 குடும்பங்களிடம் ஓடங்கள் இருந்தாலும், மீன்பிடி வலைகள் போன்ற உபகரணங்கள் எதுவுமில்லை. 3 குடும்பங்களிடம் இயந்திரப் படகுகள் இருக்கின்றன, ஆனால் அவர்களிடமும் வலைகள் எதுவுமில்லை. 79 குடும்பங்களுக்கு படகுகள், இயந்திரங்கள், வலைகள் ஆகியன தேவை (5 குடும்பங்களுக்கு ஒரு படகு).

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட Assist RR எனப்படும் தொண்டு நிறுவனம், அனைத்துலக மருத்துவ நல அமைப்புடன் சேர்ந்து நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கிரான் குடும்பங்களுக்கு Assist RR அமைப்பு 10 படகுகளை வழங்குகிறது. மேலும் 6 படகுகள் தேவைப்படுகின்றன. ஒரு படகின் விலை $3,260, மொத்தமாக $19,560 டாலர்கள் மேலும் தேவைப்படுகிறது. இப் படகுகளின் மூலம் இக் குடும்பங்கள் தமக்குத் தேவையான வாழ்வாதாரங்களை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

இதை விட, இக் கிராமத்துக்கு குடிநீர் வசதியும் இல்லை. பிரித்தானியாவைச் சேர்ந்த இன்னுமொரு தொண்டு நிறுவனமான CHRF 35 கிணறுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.

அத்தோடு, இங்கு வாழும் 44 குடும்பங்களுக்கு உகந்த வாழிடம் இல்லை. குறிப்பாக எதிர்வரும் மழைக்காலத்தில் அவர்கள் உறைவிடங்களுக்காக அவதிப்படுவார்கள். ஒரு குடிசையை அமைக்க $1,630 டாலர்கள் செலவாகிறது. இன்னுமொரு தொண்டு நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட கழிப்பறைக் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் 43 கழிப்பறைகள் பூரணப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன. ஒரு கழிப்பறையை முடித்துக் கொடுக்க $271 டாலர்கள் தேவைப்படுகின்றது.

இப்படியான அவலங்களின் மத்தியில் வாழும் பறங்கியாமடு மக்களின் துயர் துடைக்க அனைத்துலக மருத்துவ நல அமைப்பு நலம் விரும்பிகளிடம் இயலுமான உதவிகளை எதிர்பார்க்கிறது. உதவி செய்ய விரும்புபவர்கள் பினவரும் இணைப்பின் மூலம் தங்கள் நன்கொடைகளை வழங்கிக்கொள்ளலாம்.

Donate IMHO USA