மட்டக்களப்பில் கைதிகளுக்கு ஆதரவாக கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளுக்குக் ஆதரவாக மட்டக்களப்பு மகசீன் சிறைச்சாலை முன்பாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அடையாள உண்ணாவிரதமொன்றை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தலைமையில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இப் போராட்டத்தில் சுமார் 40 பேர் வரை பங்குபெற்றுள்ளனரெனவும் இது தொடர்ச்சியாக 10 நாட்கள் வரை நடைபெறுமெனவும் தெரியவருகிறது.

“உண்ணாவிரதஹ்மிருக்கும் கைதிகளில் பலர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, எந்தவித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவோ அல்லது நீதிமன்றத்தின் முன் நிறுத்தவோ முடியாமல் பலவருடங்களாகச் சிறைகளில் அடைககப்பட்டுள்ளனர். இக் கைதிகளை உடனடியாக விடுதலைசெய்யுமாறு கோரி நாம் இவ்வடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளோம். எந்த வேளையும் 40 பேர் இப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டே இருப்பர்” என திரு ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.