Spread the love

அமெரிக்காவில் மசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி (Massachusetts Institute of Technology -MIT) தயாரிக்கும் புதிய வகையான முகக் கவசம் முன்னணி சுகாதார சேவைகள் பணியாளரிடம் நிலவும் பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

லேசர் மூலம் வெட்டப்பட்டு, மடித்து வைத்து பெட்டிகளில் அடுக்கி வைக்கக்கூடியதாக வடிவமைக்கப்படும் இக் கவசம் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணாகாகச் சிறு பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட முடியுமெனக் கூறப்படுகிறது.

மசச்சூசட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் பொறியியலாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் இணைந்து இப் புதிய வகையினதான முகக் கவசத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

கொறோனாவைரஸ் கொள்ளை நோய் காரணமாக அமெரிக்காவின் மருத்துவமனைகளில் பணியாளர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்களின்றி அவதிப்படுகின்றார்கள். நோய்த் தடுப்பு விடயத்தில் முகக்கவசங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன எனவும், அவை கிருமியகற்றப்பட்டபின்னர் மீண்டும் மீண்டும் பாவிக்கப்படக் கூடியனவெனவும் நோய்த்தொற்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

மசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் பொறியியற் பேராசிரியரான மார்ட்டின் கல்பெப்பெர் இதன் தயாரிபுக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார்.

Print Friendly, PDF & Email
Related:  ஜோர்ஜ் ஃபுளோய்ட் கொலை | நான்கு பொலிசாரும் கைது