மங்கள சமரவீர தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்!

விருப்பு வாக்கையும் தனக்கு அளிக்கவேண்டாமென்று தொகுதி மக்களுக்கு அறிவிக்கிறார்

  • புதிய கட்சி ஆரம்பிப்பாரா?
  • தமிழ், முஸ்லிம் முக்கியஸ்தர்கள் இணையலாம்?
  • சமாஜி ஜன பலவேகய மாத்தற மாவட்ட புதிய அமைப்பாளராக புத்திக பதிரான?

கொழும்பு ஜூன் 09, 2020: முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். மாத்தற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக அவர், கடந்த 30 வருடங்களாக இருந்து வருகிறார்.

சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்ட புதிய கட்சியான ஜனபலவேகய கட்சியில், அவரது தொகுதியான மாத்தறயில் போட்டியிடுவதற்கான நியமனப் பத்திரங்களை ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த நிலையில் வாக்குச் சீட்டில் அவரது பெயர் தொடர்ந்தும் இருக்கும் என்பதால், விருப்பு வாக்கையும் தனக்கு அளிக்க வேண்டாமென அவர் தனது தொகுதி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இம் முடிவை அவர், ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜனபலவேகய கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கடிதங்கள் மூலம் அறிவித்துள்ளார்.

இன்று, மாத்தறயிலுள்ள அவரது இல்லத்தில் உள்ளூராட்சி அங்கத்தவர்களைச் சந்தித்துத் தனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.

“ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் திறமையற்ற, குறுகிய பார்வையுடனான ஆட்சியை இக் குறுகிய ஆறு மாதங்களுக்குள் பார்த்துவிட்டோம். அவரது ஆட்சியில் இன, மத பேதங்கள் விரிவடைந்து செல்கிறது, இராணுவ ஆட்சி விஸ்தரிக்கப்படுகிறது. அதே வேளை, நாடு மிகவும் பாரதூரமான சவால்களை எதிர்நோக்கியுள்ள இக்கட்டத்தில், எதிர்க் கட்சியும் ஒரு குறிக்கோளன்றி இருக்கிறது.



எமது நாடு மீளவும் நிலைநிறுத்தப்பட வேண்டுமாயின், ஐக்கிய தேசியக் கட்சியின் அடிப்படை விழுமியங்களும், கொள்கைகளும் செயற்படுத்தப்பட வேண்டும். இவ்வேளையில் எமது கட்சி சிதைவுண்டிருப்பத்து பற்றி நான் மிகவும் வேதனைப்படிகிறேன்” எஅன அவர் தனது கட்சியாளரிடம் தெரிவித்தார்.

“கடந்த 30 வருடங்களாக நான், ஒரு பாராளுமன்றக் கட்டமைப்புக்குள், இன் நாட்டின் சகல மக்களும் தரமான, இணக்கமான, மனிதாபிமானத்துடன் கூடிய நல்வாழ்வை அனுபவிக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு, கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதற்காகப் பணி புரிந்தேன். இக் காலகட்டததில், மாத்தற தொகுதிக்கும், நாடு முழுவதற்கும், நல்ல பல திட்டங்களைச் செயற்படுத்தியிருந்தாலும், இன்னும் பல செய்யப்படவேண்டி இருக்கிறது.

இந் நாட்டிடின் சகல இன, கலாச்சாரப் பாரம்பரியங்களை ஒன்றிணைத்து, ஒருவரையொருவர் வெறுக்காத ஒரு முற்போக்கு அரசியலியக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனம், மதம், கலாச்சாரம், சாதி, பாலினம் போன்ற பாசாங்குத்தன அடையாளங்களினால் பிரிந்து நிற்பதை விட்டு இந் நோக்கத்திற்காக நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும்” என அவர் மேலும் தெர்வித்தார்.