மங்கள சமரவீரவை குற்ற விசாரணைப் பிரிவு 5 மணித்தியாலங்களுக்கு விசாரணை!

தேர்தல் பிரசார காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையிலடைக்க அரசு தீர்மானம்?

நவம்பர் 2019 ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்தில் இடம்பெயர்ந்திருந்த வடமாகாண மக்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வாக்களிக்க வைக்க முனைந்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று (வியாழன்) குற்ற விசாரணைப் பிரிவினால் 5 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரிக்கப்பட்டார்.

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவதற்குத் தேவையான செலவும் பணத்தை, நிதியமைச்சராகிய அவர் அங்கீகரித்திருந்ததை ஒப்புக்கொண்டதோடு அதை அவர் நியாயப்படுத்தியதாகவும், அதே வேளை இச் விசாரணை ஒரு அரசியல் பழி வாங்கல் மட்டுமே எனவும் அவர் தெரிவித்திருந்ததாகத் தெரிகிறது.

“இவ் விசாரணை, வருகின்ற பாராளுமன்றத் தேர்தல்களைக் குறிவைத்தே மேற்கொள்ளப்படுகின்றன, இது தான் ராஜபக்சவின் வழமையான பாதை” என ஊடகவியலாளரிடம் பேசும்போது சமரவீர தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ராஜபக்ச ஆட்சியிலிருந்தபோது, சமரவீர மூன்று தடவைகள் குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டிருந்தார். “அவர்கள் என்னை உளவியல் ரீதியாக அழித்துவிட எத்தனிக்கிறார்கள். அவர்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை, ‘நீங்கள் பிழையானவரோடு மோதுகிறீர்கள். உங்கள் தாக்குதல்களைத் தொடுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் என்னைத் தாக்குகிறீர்களோ அவ்வளவுக்கு நான் பலம் பெறுவேன்” என அவர் ராஜபக்சக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

வடமாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களது வாக்காளர் அட்டைகள் யாழ்ப்பாண விலாசங்களையே கொண்டிருந்தன. அவர்கள் அங்கு சென்று வாக்களிக்க பண உதவி செய்யும்படி வடக்கு புனர்வாழ்வுத் திணைக்களம் கேட்டிருந்ததற்கமைய அதற்கான நிதியைத் தருவதற்கு நான் இணங்கியிருந்தேன். இவிவிடப்பெயர்வாளர்கள் கடந்த 30 வருடங்களாக புத்தளத்திலுள்ள முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் 1990 ஆண்டு விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள். அவர்கள் தமது இடங்களில் வாக்களிக்கும் உரிமையுண்டு” என ஊடகவியலாளருக்கு அவர் தெரிவித்தார்.

“தனது அரசு ஆட்சியில் இருந்தபோது பசில் ராஜபக்சவும் இதையே தான் செய்தார். நாங்கள் ஒருவரும் அதுபற்றி முறைப்பாடு எதுவும் செய்யவில்லை” என்றார் அவர்.

ஐந்தே கால் மணித்தியாலங்கள் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, வருகின்ற செவ்வாயன்று விசாரணைக்காக மீண்டும் வரும்படி கட்டளையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை, முன்னாள் அமைச்சர்களான, ராஜித சேனாரட்ண, மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க ஆகியோர் சிறைகளில் தள்ளப்பட்டால் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசார பலத்தைக் குறைக்கலாம் என ஆட்சியாளர் நம்புவதாகப் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். சோடிக்கப்பட்ட கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ராஜித சேனாரட்ண மே 27 வரையில் அடைக்கப்படவேண்டுமென உயர்நீதி மன்ற நீதிபதி மஞ்சுளா திலகரட்ண உத்தரவிட்டுள்ளார். சம்பிக்க ரணவக்க தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.