Spread the love
சூழலுடன் இசைபடும் தொழில்நுட்பம்!
PhD student Rajshree Biswas in a lab coat and goggles stands in front of a vial of fryer oil and 3D-printed butterflies
ராஜ்சிறீ பிஸ்வாஸ் , ரொறோண்டொ பல்கலைக்கழக PhD மாணவி படம்: டொன் கம்ப்பெல்

மக்டோணல்ட் உணவகத்தில் பாவிக்கப்பட்டபின் கழிவாக எறியப்படும் எண்ணையைப் பாவித்து 3 தொழில்நுட்பத்திற்குப் பாவிக்கும் ஒரு வகையான பிசினை (resin) ஸ்காபரோவிலுள்ள ரொறோண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் அவரது மாணவர்களும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நவீன தொழில்நுட்பமாகிய 3D ப்றிண்டிங் தொழில்நுட்பத்தில் பாவிக்கப்படும் மை ஒருவித பிசின் வகையைச் சேர்ந்தது. மக்டோனல்ட்ஸ் உணவகங்களில் பாவிக்கப்பட்ட பின்னர் குப்பையில் வீசப்படும் எண்ணைக் கழிவுகளப் பிசினாக மாற்றும் தொழில்நுட்பத்தை இப் பல்கலைக்கழக இளம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இப் பசையைச் சாதாரண 3D ப்ரிண்டர்களில் பாவித்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குப்பைக் கிடங்குகளில் இலகுவாக உக்கி மண்ணுடன் கலந்து போகவல்லன (biodegradable) என்பதால் சூழலுக்கு இது மிகவும் இசைவானதாக இருக்குமென இக் குழு தெரிவிக்கிறது.

""
மக்டோணல்ட்ஸ் எண்ணையிருந்து உருவாக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சி – படம் டொண் கம்ப்பெல்

“3D ப்றிண்டர்களில் தற்போது பாவிக்கப்படும் பிசின் மனிதரால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இவற்றின் மூலம் உற்பத்தியாகும் பொருட்கள் பிளாஸ்டிக்காகவே இருக்கின்றன. இவற்றை அழித்து மண்ணோடு மண்ணாக மாற்றும் வகையில் இயற்கை இன்னும் இசைவாகவில்லை. இயற்கை தான் உற்பத்தி செய்த பொருட்களை மட்டுமே மீளப் பெறும். மக்டோணல்ட்ஸ் எண்ணை இயற்கையிலிருந்து பெறப்பட்டது” என்கிறார் இவ்வாராய்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் ரொறோண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்றே சிம்ப்ஸன்.

படத்தில் காணப்படுவது மக்டோணல்ட்ஸ் கழிவு எண்ணையிலிருந்து உற்பத்தி செய்த பிசின் மூலம் 3D ப்றிண்டர் மூலம் செய்த வண்ணத்துப் பூச்சி. இப் ப்றிண்டர் மூலம் 100 மைக்கிரோமீட்டர் சிறிய (100/1000000 மீட்டர்) சிறிய பகுதிகளையும் துல்லியமாகவும் பலமுள்ளதாகவும் இப் பொருட்கள் இருக்கின்றன.

மூன்று வருடங்களுக்கு முன்னர் 3D ப்றிண்டர் ஒன்றை வாங்கியபோது தனக்கு இந்த யோசனை உதித்ததாக பேராசிரியர் சிம்சன் தெரிவித்தார். அதில் பாவிக்கப்படும் மை ஒருவகை பிளாஸ்டிக் ரகத்தைச் சேர்ந்தது. அதன் மூலக்கூறுகளின் ஒழுங்கமைப்பிற்கும் (molecular structure) மக்டோணல்ட்ஸ் எண்ணையின் மூலக்கூறுகளின் ஒழுங்கமைப்பிற்குமிடையில் காணப்பட்ட ஒற்றுமையைக் கண்டு நான் அதிசயித்தேன். அதன் விளைவாகப் பிறந்ததே இந்தக் கண்டுபிடிப்பு என்கிறார் பேராசிரியர் சிம்ப்சன்.

""
ரொறோண்டோ பல்கலைக் கழகப் (UTSC) பேரசிரியர் ஆண்ட்றே சிம்ப்சன்

“இதில் ஆச்சரியமென்னவென்றால், பாவிக்கப்பட்டபின் வீசப்படும் எண்ணையைப் பெற்றுக்கொள்வதில் நாம் பட்ட சிரமம்தான். பல உணவகங்களை நாம் தொடர்புகொண்டிருந்தபோதும் ஸ்காபரோவிலுள்ள மக்டோணல்ட்ஸ் உணவகம் ஒன்றுதான் எங்களுக்கு உதவிக்கு வந்தது” என்கிறார் அவர்.

சிம்சனும் அவரது குழுவினரும் கண்டுபிடித்த முறைப்படி முதலில் 1 லீட்டர் மக்டோணல்ட்ஸ் கழிவு எண்ணையிலிருந்து 420 மி.லீ. பிசினை உருவாக்கினார்கள். அதன் மூலம் அவர்கள் உருவாக்கிய வண்ணத்துப் பூச்சிதான் மேலே கணப்படுவது. இது மிகத் துல்லியமானதாகவும், பலமுள்ளதாகவும் அதே வேளை வெப்பத்தால் சிதைவடையாததாகவும் இருக்கிறது.

Related:  விற்பனைக்கு: 'ஸ்பொட்' - றோபோ நாய் - US$ 74,500 மட்டுமே!

உணவகங்களிலும், வீடுகளிலும் பாவிக்கும் எண்ணைக் கழிவுகள், குழாய்களிலும், கழிவுக் கால்வாய்களிலும் கொழுப்பாக மாறி, ஒட்டிக்கொண்டு நீரோட்டத்தில் தடைகளை ஏற்படுத்துவதன்மூலம் பாரிய சூழற் பிரச்சினைகளுக்குக் காரணமாயுள்ளன. தாம் கண்டுபிடித்த இத் தொழில்நுட்பம் சூழல் பாதுகாப்பிறுகு மிகவும் உதவியாகவிருக்கும் என்கிறார் ஸ்காபரோ, ரொறோண்டோ பல்கலைக்கழகத்தின் NMR மையத்தின் பணிப்பாளர், பேராசிரியர் சிம்ப்சன்.

3D ப்றிண்டர்களில் தற்போது பாவிக்கும் பிசின் பெற்றோலிய மூலத்திலிருந்து உருவாக்கப்படுகிறது. இது பிளாஸ்டிக் வகையைச் சேர்ந்தது. ஒரு லீட்டர் பிசின் US$ 525.00 அளவில் விற்பனையாகிறது. சிம்ப்சனிந் கண்டுபிடிப்பின் மூலம் 1 தொன் பிசினைத் தயாரிக்க US$ 300.00 மட்டுமே செலவாகிறது. வப்பமாக்கிகள் கூடத் தேவையில்லை, சூரிய வெளிச்சத்திலேயே அவை காய்ந்து பதமாகிவிடுகின்றன என்கிறார் பேராசிரியர்.

இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், இப் பிசின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் குப்பைபில் வீசப்படும்போது இரண்டே வாரங்களில் அதன் இருபது வீதமான நிறையை இழந்துவிடுகின்றன. இவை வெறும் கொழுப்பினால் செய்யப்பட்ட பொருட்களாகையால், மண்ணினால் மூடப்பட்டிருக்கும்போது நுண்ணுயிர்களுக்கு இவை எளிதில் இரையாகப் போய்விடுகின்றன என்கிறார் அவர்.

Print Friendly, PDF & Email