News & AnalysisSri Lanka

மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கு குறைகிறது, அடுத்த தேர்தலில் வெல்ல முடியாமற் போகலாம் – அமைச்சர் நாளக கொடஹீவ

மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி தோன்றினால் அடுத்த தேர்தலில், ஆளும் கட்சியான சிறீலங்கா பொதுஜன பெரமுனவினால் வெற்றிபெற முடியாமற் போகலாம். உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டினாலேயேயன்றி இதுவே யதார்த்தம் என எண்ணிக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறார் ராஜாங்க அமைச்சர் நாளக கொடஹீவ.

“யதார்த்தத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாம் தேர்தலில் வென்றபோது இருந்த செல்வாக்கு இப்போது இருக்கிறதா? மக்களிடையே பிரச்சினைகளைப் போலவேதான் அதிருப்தியும் இருக்கிறது. எம்மால் இதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் எமது வீழ்ச்சிக்கு நாமே காரணமாகிவிடுவோம்” என கம்பஹாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது அமைச்சர் கொடஹீவ தெரிவித்தார்.

“அடுத்த தேர்தலில் எப்படி வெற்றிகொள்வதென்பதை இந்த அரசு யோசிக்க வேண்டும். எம்மிடையே ஒற்றுமை இல்லையெனில் அடுத்த் தேர்தல் எமக்கு இலகுவாக இருக்காது. நாம் எப்படி ஆட்சிக்கு வந்தோமென்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எமது கட்சியில் சிலர் அதை மறந்துவிட்டமை எனக்கு வருத்தம் தருகிறது. எமது கட்சியினர் சிலர் பிரச்சினையை ‘வியத் மக’ மீது போடுகிறார்கள். கழுத்துப் பட்டியுடன் (neck tie) காணப்படும் ஒருவர் வியத் மக எனப்படுகிறார். வியத் மக அப்படியானதல்ல. வியத் மக மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் மத்திய தர, கல்வி கற்றவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் என நினைக்கப்படவேண்டும். அவர்கள் ‘மிதக்கும் வாக்குகள்’. இவர்களை விட்டுவிட்டு நாம் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளப் போகிறோமா?” என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.