மக்கள் நீதி மையம் தி.மு.க. . அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைக்கமாட்டாது – கமல் ஹாசன்
2021 இல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் எந்தவொரு ‘கழகத்துடனும்’ கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
செவ்வாயன்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது ” தேசிய கீதத்தில் ‘திராவிடம்’ என்ற பெயர் இருக்கும் மட்டும் கமல் ஹாசன் தமது கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் ஒரு திருத்தம். ‘கழகம்’ என்று பெயருள்ள கடசிகளுடன் நான் கூட்டணி வைக்கப் போவதில்லை” எனக் கமல் ஹாசன் தெரிவித்தார்.
அதே வேளை கமல் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைப்பாரா அல்லது மக்கள் சபைத் தேர்தலில் போலத் தனிதுப் போட்டியிடுவாரா எந்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை.
“சட்ட மன்றத் தேர்தல்களில் சில ஆயிரம் வாக்குகளே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் அவர் போட்டியிடுவதன் மூலம் பலரது வெற்றிவாய்ப்புக்களைத் தகர்க்க முடியும்” என்கிறார் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
‘பிக் பொஸ்’, புதிய படங்கள் எனப் பல விடயங்களிலும் கால்களைப் பதித்துள்ள நடிகர் கமல் ஹாசனுக்கு முழு நேரமாக அரசியலில் ஈடுபட முடியுமா என்பது சந்தேகமே. நகர் வாழ் மக்களிடையே வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தனது கட்சி ஒரு சக்தி எனபதை நிரூபிக்க அவர் முயலலாம், கிராமங்களில் கழகங்களை அசைக்க முடியாது எனவும் பல அவதானிகள் கருதுகிறார்கள்.
2019 பாராளுமன்றத் தேர்தலில் நகர்ப்புற மக்களிடையே மக்கள் நீதி மையம் 3.72% வாக்குகளைப் பெற்றிருந்தது. ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவது சந்தேகம் என்பது வலுவடைந்துவரும் நிலையில் கமல், பா.ஜ.க. வுடன் கூட்டணி வைப்பதற்காக விடும் ஒரு அழைப்பாகவும் இக் ‘கழகங்களின் நிராகரிப்பு’ பார்க்கப்படலாம். அதே வேளை ராஜ்ய சபா உறுப்பினர் பதவியில் அவர் கண் வைத்திருக்கிறார் எனவும் செய்தியொன்று உலாவுகிறது.
“கமல் ஹாசன் ஒரு சிறந்த நடிகர், அரசியல் வாதியல்ல. அங்குமிங்கும் தாவுவதால் அவர் தனது கட்சியை வளர்த்தெடுப்பார் என்ர நம்பிக்கை பலருக்கு இல்லை” என மக்கள் நீதி மையத்தின் முன்னாள் உறுப்பினர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.