• Post category:SRILANKA
  • Post published:October 23, 2020
Spread the love

20 வது திருத்தம் நாட்டில் எதேச்சாதிகாரத்துக்கு வழிவகுக்கும்

“இந் நாட்டின் மக்கள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு ஆட்சியதிகாரத்தைக் கொடுத்தது தவறுகளைக் கொண்ட 19 வது திருத்தத்தை நீக்குவதற்காகவே தவிர, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் பலப்படுத்தவல்ல. தவறுகள் அடையாளம் காணப்பட்டு அவை திருத்தப்பட்டிருக்க வேண்டும். மாறாக, ஜனநாயகத்துக்கு எதிர்த் திசையில் சென்று எதேச்சாதிகாரக்கு வழிவகுப்பது முற்றிலும் தவறு. 20 வது திருத்தம் அதையேதான் செய்திருக்கிறது. அதனால் தான் நாம் அதை எதிர்க்கிறோம்” எனப் பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

“இந்த அரசியலமைப்பைச் செப்பனிடுவதற்காக இச் சபையில் 20 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அவற்றில் இரண்டு 200 வாக்குகளுக்கு மேல் பெற்று நிறைவேற்றப்பட்டிருந்தன. 17 வது திருத்தம் ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்ததன் மூலம் நிறைவேறியிருந்தது. 19 வது திருத்தம் ஒரு உறுப்பினரது எதிரான வாக்குடன் நிறைவேறியது. சரத் வீரசேகரா அதற்கு எதிராக வாக்களித்திருந்தார். அவரது நிலைப்பாட்டுடன் எனக்கு அப்போதும் இப்போதும் உடன்பாடில்லையெனினும், அவர் தொடர்ந்தும் ஒரே நிலைப்பாட்டில் அப்போதும், இப்போதும் இருப்பது குறித்தௌ அவரை நான் மதிக்கிறேன். ஏனையவர் அப்போது கைகளை உயர்த்திவிட்டு இப்போது முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்தது அவர்களது பரிதாப நிலையையே காட்டுகிறது. 17, 19 வது திருத்தங்கள் சபையில் ஏறத்தாள ஒட்டுமொத்தமான உறுப்பினர்களிந் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை, இந்நாட்டு ஒட்டுமொத்த மங்களின் ஆங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்பட வேண்டும். அதன் கருத்து இந் நாடு ஜனநாயக பாரம்பரியத்தைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே. இப்போது கொண்டுவரப்பட்ட திருத்தம் அவ்விருப்பத்தை நிறைவேற்றுவதாக இல்லை.

“ஜனநாயகம் குழப்பம் நிறைந்தது. ஜனநாயகம் அதிக செலவீனத்தைத் தருவது, விவாதங்கள் கால விரயத்தை ஏற்படுத்துவது. ஆனால் அதுவேதான் சரியான பாதை. அதையேதான் நாம் பின்பற்ற வேண்டும். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. நாங்கள் பல விவாதங்களை சபையிலும், வெளியிலும் செய்திருந்தோம். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச நள்ளிரவிலும் சட்ட வரைவை எங்களுக்கு விளங்கப்படுத்துவார். எதிர்க்கட்சியிலிருந்து தினேஷ் குணவர்த்தன, பேரா. திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களால் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.இறுதியில் ஒருவரைத் தவிர ஏனையோரது சம்மதத்துடன் அத் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.



“19 வது திருத்தம், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான முதற் படி மட்டுமே. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு இந் நாட்டில் 1990 களிலேயே இணக்கப்பாடு காணப்பட்டது. கால் நூற்றாண்டாக மக்கள் மீண்டும் மீண்டும் அதற்கான ஆணையைக் கொடுத்துவந்துள்ளார்கள். 19 வது திருத்தம் இரண்டு அதிகார மையங்களை உருவாக்கியதன் மூலம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை வெகுவாகக் குறைத்திருந்தது. அது, ஜனநாயகத்தை நோக்கி நகரும் ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே” என சுமந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email