“சிவில் உடைகளில் வரும் பொலிஸ்காரர்களாள் பொதுமக்கள் கைதுசெய்யப்படுவது இந்நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீரற்றுப் போய்விட்டன என்பதையே காட்டுகிறது. ஏன் அவர்கள் வெள்ளை வான்களில் வர வேண்டும்? இப்படித் தான் நாம் முன்னரும் செய்தோம், இனியும் செய்வோம் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துவதற்காகவா?” என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் நேற்று கேள்வியெழுப்பினார்.
கொத்தலாவெல பல்கலைக்கழகச் சட்டம் தொடர்பாக மாணவர்களும், செயற்பாட்டாளர்களும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பாராளுமன்ற முன்றலில் இப்படியொரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த பல்கலைக்கழக மாணவர்கள் ஒந்றியத்தின் தலைவர் வசந்தா முதலிகே மற்றும் சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அமீலா சந்தீப ஆகியோர்ஆகஸ்ட் 5 இல், சிவில் உடைகளில் வந்தவர்களால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய பா. உ. சுமந்திரன் ” மாணவர்களும், செயற்பாட்டாளர்களும் பட்டப் பகலில் வெள்ளை வானில் வரும் சிவில் உடை தரித்த பொலிசாரினால் கைது செய்யப்படும்போது இலங்கையில் பொதுமக்கள் பாதுகாப்புக்கென ஏன் அமைச்சர் ஒருவர் இருக்கிறார்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை நோக்கி சபையில் கேள்வி எழுப்பினார்.
“பொதுமக்களை, அதுவும் வெள்ளை வானில் வரும் சிவில் உடை தரித்தவர்களால், கைதுசெய்யப்படும் சம்பவங்கள், அவற்றை பாதாள உலக குண்டர்களும் செய்வதற்கு உதாரணமாக ஆகிவிடக்கூடும். மக்கள் மனங்களில் பீதியை ஏற்படுத்துவதற்காகவே இக் கைதுகள் மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.