HealthWorld

“மக்கள் இறந்துபோகட்டும், பொருளாதாரத்தை முடக்க வேண்டாம்” – ரிஷி சூனாக்

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இரண்டாவது பொதுமுடக்கம் ஒன்றை அறிவிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் “மக்கள் இறந்துபோனாலும் பரவாயில்லை பொது முடக்கம் வேண்டாம்” என அப்போதைய நிதி அமைச்சர் ரிஷி சூனாக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் முடிவெடுத்திருந்ததாக பிரதம அரச ஆலோசகர் பற்றிக் வேல்லன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். கோவிட்-19 விவகாரங்கள் கையாளப்பட்டமை தொடர்பாக நடந்துவரும் விசாரணையில் அரச அதிகாரிகள் முன்னிலையில் சாட்சியமளித்த வேல்லன்ஸ் அவர்கள் திங்களன்று இப்படித் தெரிவித்திருக்கிறார்.

அரசுக்கு விஞ்ஞான விடயங்களில் ஆலோசனை வழங்கி வந்த பற்றிக் வேல்லன்ஸ் அவர்கள் கோவிட் பெருந்தொற்றின் காரணமாக மக்கள் படும் அவலங்களைச் சகிக்க முடியாது தனது உள்ளக்கிடக்கைகளை டயறி ஒன்றில் பதிந்து வந்திருந்தார் எனவும் அதில் அக்டோபர் 20, 2020 அன்று மேற்கொள்ளப்பட்ட பதிவில் “மக்களை இறந்துபோக விடுவதில் தப்பில்லை என ரிஷி எண்ணுகிறார். இது தலைமைத்துவத்தில் உள்ள மிகப்பெரிய குறைபாடு என நான் உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது பொது முடக்கத்தின் காரணமாக நாடு பாரிய பொருளாதாரச் சரிவைக் கண்டிருந்தது. இதனால் இரண்டாவது பொது முடக்கம் ஒன்று தேவையற்றது என சூனால், ஜோன்சன் மற்றும் அவர்களது மூத்த ஆலோசகர் டொமிநிக் கம்மிங்ஸ் ஆகியோர் தீர்மானித்து அதைப் பகிரங்கப்படுத்தும்படி கேட்டிருந்ததாக வேல்லன்ஸ் சாட்சியமளித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாது பெருந்தொற்றுக் கட்டுப்பாடு தொடர்பாக விஞ்ஞானிகளின் ஆலோசனைகளைப் பெறாது சூனாக் தன் சொந்த முடிவுகளை எடுத்துக்கொண்டார் என வேல்லன்ஸ் தெரிவித்துள்ளார். பெருந்தொற்றின் காரணமாக உணவகங்களில் வியாபாரம் குறைவடைந்தமை காரணமாக அவற்றின் வியாபாரத்தைப் பெருக்க “Eat Out to Help Out” எனும் சுலோகத்தை சூனாக் தன்னிச்சையாக அறிவித்தார் எனவும் வேல்லன்ஸ் குறிப்பிட்டுள்ளார். சூனாக்கின் இந்நடவடிக்கை காரணமாக அவருக்கு ‘Dr.Death’ என்னும் பட்டப் பெயரும் வழங்கப்பட்டிருந்தது.

முன்னாள் பிரதமர் ஜோன்சனால் 2021 இல் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 விசாரணை இவ்வருட ஆரம்பத்தில் ஆரம்பமாகி 2026 வரை செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது. பெருந்தொற்றுக்களை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு, பொது முடக்கம், தடுப்பு மருந்துக்கான கட்டளைகள், பொது வைத்திய நிர்வாகம், வீடு மற்றும் மருத்துவமனைப் பராமரிப்புகள், நிதி உதவி போன்ற பல்வகையான விடயங்கள் பற்றி இவ்விசாரணையின்போது ஆராயப்படுமெனக் கூறப்படுகிறது.

கடந்த கோவிட் பெருந்தொற்றின்போது பிரித்தானியாவில் 220,000 பேர் மரணமடைந்திருந்ததுடன் பொருளாதாரமும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.