Sri Lanka

மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்ற 19 வது திருத்தம் அகற்றப்பட வேண்டும் – கோதாபய ராஜபக்ச

டிசம்பர் 30, 2019

மக்களின் எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்தும் ஒரு நாட்டை உருவாக்கும் வகையில் செயற்படுவது பிரதிநிதிகளின் பொறுப்பு எனவும், இன் நோக்கத்தை நிறைவுபடுத்த நகர, பிரதேசிய சபைகள் ஒழுங்காகச் செயற்படுவது அவசியம் எனவும் ஜனாதிபதி ராஜபக்ச தெரிவித்தார்.

மாநகர், நகர, பிரதேச சபைத் தலைவர்களைக் டிசம்பர் 28 ம் திகதியன்று சந்தித்தபோதே அவர் அதைத் தெரிவித்தார்.

இச் சந்திப்பின்போது, கிராமிய மட்டத்தில் அயராது உழைத்ததன் மூலம் தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உறுதுணை புரிந்ததற்காக, உள்ளூராட்சிச் சபைப் பிரதிநிதிகளுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.

“பெருமைபடத்தக்க வெற்றியைத் தந்த மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்துவைப்பது மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் முன்னால் உள்ள பொறுப்புள்ள சவால். அது உங்கள் ஒவ்வொருவருக்குமுள்ள அர்ப்பணிப்புடனான பாரிய கடமை” என அவர் குறிப்பிட்டார்.

“குப்பை அகற்றுவது முதல் பொருளாதார முன்னேற்றம் வரை, நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நாளாந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்கள் சிரமப்படக் கூடாது. மக்கள் விருப்பங்களுக்கிணங்கிய, திறமையான சேவையை வழங்குவது மக்கள் பிரதிநிதிகளாகிய உங்களின் கடமை. அது எப்போதும் ஊழலற்றதாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“2015 இல், நாடு அபிவிருத்திப் பாதையில் நகர்ந்துகொண்டிருந்தது, பொருளாதாரம் வலுவாக இருந்தது. அப்படியிருந்தும் மக்கள் அப்போதைய அரசாங்கத்தைத் தோற்கடித்தார்கள். அப்போதய அரசை மக்கள் ஏன் தோற்கடித்தார்கள் என அறிந்துகொள்ளாது இப்போதைய அரசினால் வெற்றிகளை ஈட்ட முடியாது.

இழுத்து மூடப்பட்ட வணிக நிறுவனங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும், முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும், இழந்துபோன வேலைகளைத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதனாலேயெ பொருளாதாரத்தைச் சீராக்கலாம்.

2015 க்கு முன்னர், முதலீட்டாளர்கள் வைத்திருந்த நம்பிக்கையை மீட்டுக்கொடுக்க வேண்டும். இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நிபுணர்களினதும், தொழில் வல்லுனர்களினதும் பங்களிப்பு அத்தியாவசியமானது.

விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியால் கமக்காரர்கள் அனுகூலங்களைப் பெறுகிறார்களெனினும், வரிக்குறைப்பு போன்ற இதர செயற்திட்டங்களால் நாட்டின் மொத்த குடிமக்களும் பலன்பெற வேண்டும்.

நாட்டின் ஆட்சிக்குப் பெருந்தடையாகவிருப்பது 19 வது திருத்தமமே. ஒரு பலமான பாராளுமன்றத்தாலேயே அதை அகற்ற முடியும். மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்து வைப்பதற்கு அதுவே முக்கியமானது.” என அவர் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கூன், அமைச்சர்கள் பவித்திரா வன்னியாராய்ச்சி, ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோ மற்றும் பிரசன்னா ரணதுங்க ஆகியோரும் இக்கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.