LIFEObituary

மகா மனிதர் டாக்டர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (1934-2024)

உலகப் பரப்பில் பொறிக்கப்பட்ட ஈழத்தமிழரின் அடையாளக்குறிகளில் ஒருவரும் ஒலிம்பிக் வீரரும் சிறந்த சமூக சேவையாளருமான டாக்டர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் மறைவு குறித்த துயர் அனைத்து தமிழர் நெஞ்சங்களையும் வருத்துவது. மூன்று நாட்களுக்கு முன்னர் ரொறோண்டோவிலுள்ள தமிழர் ஐக்கிய விளையாட்டுக்கழக மெய்வல்லுனர் பயிற்சியாளர் தேவராஜன் சின்னத்துரை அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் “75 வருடங்களுக்கு முன்னர் எதிர்வீரசிங்கம் அவர்களால் தடம்பதிக்கப்பட்ட ஒலிம்பிக் திடலில் 2020 இல் இன்னுமொரு தமிழர் கால் பதிக்கவேண்டுமென முயற்சித்தோம் அது சாத்தியமாகவில்லை. 2028 இல் அதை நிச்சயம் சாத்தியமாக்குவோம்” என அறைகூவல் விடுத்தமை அவரது ஞானச் செவிகளுக்குக் கேட்டிருப்பின் அவர் நிச்சயம் மகிழ்ந்திருப்பார். சாதனையாளர்களின் உயரம் வாழும் விழிகளுக்குள் அகப்படுவது குறைவு என்பது வருத்தம் தருவது.

எதிர்வீரசிங்கம் அவர்கள் தனது 89 ஆவது வயதில் சுகவீனம் காரணமாக அவரது லொஸ் ஏஞ்சலிஸ் இல்லத்தில் காலமாகியிருக்கிறார். 24 ஆகஸ்ட் 1934 அன்று பெரிய விளான் என்னும் கிராமத்தில் ஒரு அறையை மட்டுமே கொண்ட பனை ஓலைக் குடிசையில் பிறந்த அவர் இளவயது முதல் கல்வியிலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டியவர். முறையான மெய்வல்லுனர் பயிற்சிகளைப் பெற வசதியற்றிருந்த காலத்தில் அவர் பழைய வாகன உதிரிப்பாகங்களைப் ( weights) பாவித்து தனது மெய்வலுவை மெருகுபடுத்தினார். பின்னர் 1951 இல் கொழும்பில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் பங்குபற்றியதன் பின்னரே அவர் பி.ஈ.ராஜேந்திரா என்னும் பயிற்சி ஆசிரியரிடம் ஒழுங்கான பயிற்சிகளைப் பெற்றார். யாழ் மத்திய கல்லூரியில் தான் அவர் முதன் முதலாக உயரப்பாய்ச்சலுக்கான சாதனையை உடைத்து தனது மெய்வல்லுனர் போடிக்கான முதல் பரிசைப் பெற்றிருந்தார்.

1948 இல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளை யழ்ப்பாணத் தியேட்டர் ஒன்றில் செய்தியாகப் பார்த்தபோது அவர் தனது மனதுக்குள் வரித்துக்கொண்ட கனவே பின்னர் சாதனை வீரனாக அவரை மாற்றியது. இதன் வெளிப்பாடாகவே 1952 இல் ஹெல்சிங்கியிலும் பின்னர் 1956 இல் மெல்போர்ணிலும் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 1954 (மணிலா), 1958 (ரோக்யோ), 1962 (ஜாகர்த்தா) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார். 1952 இல் ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு அவர் கப்பல் மூலம் ஒரு மாதப் பயணத்தை மேற்கொண்டு பின்லாந்து சென்றிருந்தார். இவற்றில் ரோக்யோவில் நடைபெற்ற போட்டிகளில் அவர் பெற்ற தங்கப் பதக்கமே இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப்பதக்கமாகும். 1961 இல் ஜாகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் அவர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றிருந்தார். யாழ் மத்திய கல்லூரியில் கல்வி கற்றபோது அவர் கிரிக்கெட் விளையாட்டில் திறமையாக ஆடிய போதும் மெய்வல்லுனர் போட்டிகளிலேயே அவரது திறமை மிக வீரியமாக இருந்தது. 1959, 1960 களில் கலிபோர்ணியா பல்கலைக்கழக கொன்ஃபெறன்ஸ் சம்பியன்ஷிப் போட்டிகளில் உயரப்பாய்தல் போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.

எதிர்வீரசிங்கம் தனது க.பொ.த உயர்தரக் கல்வியை கொழும்பு செயிண்ட் ஜோசெஃப்ஸ் கல்லூரியில் கற்றார். 1956 இல் அவருக்கு கலிபோர்ணியா UCLA பல்கலைக்கழகம் முழு மெய்வல்லுனர் புலமைப் பரிசிலை வழங்கித் தனது மாணவனாக ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து கலிபோர்ணியா பொலிரெக்னிக் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் 1971 இல் கோர்ணெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

1958 இல் ஆசிய போட்டிகளில் உயரப் பாய்ச்சலுக்கான சாதனையாளராகவும். இலங்கையில் சாதனையாளராகவும் இருந்தும்கூட யப்பானில் நடைபெற்ற ஆசிய போட்டிகளுக்கு அவர் தெரிவுசெய்யப்படவில்லை. பின்னர் அப்போதைய டெய்லி நியூஸ் ஆசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகளின் அழுத்தத்தினால் தெரிவுக்குழு அவரை ரோக்யோ அணியில் இணைத்துக்கொண்டது. இவ்வணியில் பிந்தி இணையப்பெற்றதால் ரோக்யோவிற்குச் செல்வதற்கான பயணச் செலவை எதிர்வீரசிங்கமே பொறுப்பேற்கவேண்டுமென தெரிவுக்குழு கூறிவிட்டது. இதை அறிந்த டொனோவன் ஆண்ட்றே எனும் நல்மனம் கொண்ட மனிதர் இப்பயணத்திற்காக US$ 5,000 த்தை போட்டிகளுக்குகுச் சிலநாட்களின் முன்னர் அன்பளிப்புச் செய்திருந்தார். இதனால் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னரே அவரால் ரோக்யோ வர முடிந்தது. அப்போது அவருக்கான சீருடையை வழங்க இலங்கை மறுத்திருந்த காரணத்தால் அவர் தனது UCLA சீருடையில் இலங்கையின் சின்னத்தை ஊசியால் குத்தி வைத்துக்கொள்ளவேண்டியிருந்தது. இலங்கை அணியினர் பின்னர் அவரைத் தமது அணித்தலைவராக ஏற்று மனவலிக்கு நிவாரணம் தந்ததாக அவர் காணொளியொன்றில் குறிப்பிடுகிறார். இப்போட்டியில் அவர் 2.03 மீட்டர்கள் உயரம் பாய்ந்து புதிய இலங்கை சாதனையை உருவாக்கினார். 1989 ஆம் ஆண்டு வரை இந்த சாதனை மீறப்படவில்லை.

1958 இல் அவர் ரோக்யோவில் போட்டிகளில் பங்குபற்றிக்கொண்டிருந்தபோது இலங்கையில் இனக்கலவரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. அமெரிக்காவிற்குத் திரும்பிய பின்னர் அவர் இலங்கையிலுள்ள தனது சகோதரருடன் தொடர்புகொண்டபோதே விடயம் தெரிய வந்தது.

இலங்கையின் இப்புறக்கணிப்பு அவரை எப்போதுமே தொடர்ந்தது. ஆசிய, இலங்கை சாதனைகளைகளுடன் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதற்கான தகமையை அவர் வைத்துக்கொண்டிருந்தும்கூட 1960 இல் மெக்சிக்கோ சிற்றியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தெரிவாகவில்லை. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மேற்கொண்ட அழுத்தங்கள் காரணமாக 1962 இல் ஜாகர்த்தாவில் நடைபெற்ற ஆசியன் போட்டிகளில் பங்குபற்றி வெள்ளிப் பதக்கத்தை இலங்கைக்கு அவர் பெற்றுக் கொடுத்தார்.

1956 இல் ‘தனிச்சிங்களச் சட்டத்திற்கு’ எதிராக காலிமுகத் திடலில் தமிழரசுக் கட்சியால் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தைப் பார்க்க அவர் தனது நண்பர்களுடன் சென்றிருந்தபோது மயிரிழையில் அவர் உயிர் தப்பிய சம்பவமுமுண்டு. இவரையும் நண்பர்களையும் தாக்க வந்த காடையர்களில் ஒருவர் டெய்லி நியூஸ் பத்திரிகை இவருக்கு வழங்கிய “Sports Star of the Year’ விருது சம்பவத்தின் படத்தில் இவரைப் பார்த்திருந்தபடியால் அவரை ஒரு மருந்தகத்தினுள் அழைத்துச் சென்று அங்கு பாதுகாப்பாக வைத்திருக்கும்படி உரிமையாளரிடம் ஒப்படைத்திருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு, விளையாட்டிலும் அசுர சாதனைகளுடன் மகிழ்ச்சியோடு நாடு திரும்பிய அவருக்கு அவர் கற்ற விவசாயக் கல்விக்கேற்ற உரிய வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பி முதுமாணிப் பட்டத்தையும் பெற்று மீண்டும் இலங்கை வந்தார். அப்போதும் அவரை இலங்கை வரவேற்று உபசரிக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சியெர லியோன் நாட்டிலுள்ள நிஜாலா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பிக்க ஆரம்பித்தார். இதன் பின்னர் அவர் அங்குள்ள இதர பல்கலைக்கழகங்களிலும் நைஜீரியா, பப்புவா நியூகினி பல்கலைக்கழகங்களிலும் பின்னர் யூனெஸ்கோவிலும் பணியாற்றினார்.

சியெற லியோன் நாட்டில் பணியாற்றியபோதுதான் 1965 இல், அவர் தனது வாழ்க்கைத் துணையான ஜூலியெட் ஆன் பவர் என்பவரைச் சந்திக்கிறார். அமெரிக்கரான அவர் தனது பல்கலைக்கழகப் படிப்பு முடிந்தவுடன் அமெரிக்க பீஸ் கோர்ப்ஸ் அமைப்பில் இணைந்து சியெற லியோனுக்குப் பணியாற்ற வந்திருந்தபோதே இவர்களது சந்திப்பு நிகழ்கிறது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகளும் எட்டு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். மே 2024 இல் இத் தம்பதிகள் தமது 58 ஆவது திருமண நாளைக் கொண்டாடியிருக்க வேண்டும்.

தன் மண் தந்த வாழ்வுக்கு தனது சேவைகளை அர்ப்பணிக்கவென அவர் 1994 இல், தனது 60 ஆவது வயதில் மீண்டும் இலங்கை வந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய வளாகத்தில் பணிக்காக விண்ணப்பித்தார். போர் உச்சமடைந்திருந்த ஆபத்தான காலத்திலும் பொருளாதாரத் தடையால் எரிபொருள், மின்சாரம், மருந்து ஆகியவற்றின் பற்றாக்குறையால் வட மாகாணம் மிகவும் நலிந்துபோயிருந்த நிலையிலும் அவர் வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தில் ஒரு வருட ஒப்பந்தத்துடன் பணியாற்ற இணங்கினார். அக்டோபர் 1995 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வன்னிக்கு இடம்பெயர்க்கப்பட்ட 500,000 பொதுமக்களின் நலன்களைக் கவனித்து அவர்களுக்கு உணவு, உறவிடங்களை வழங்கும் குழுவில் அவர் ஊதியமற்ற தொண்டராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அதுவே அவரது இறுதிக்காலப் பணியாக மாறியது. விழிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் விளையாட்டு விடயங்களில் அவர் தனது பணிகளை ஆற்றினார். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் வாழ்நாள் முழுவதும் போராடியவர் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். 1994 முதல் 2020 இல் கோவிட் பெருந்தொற்று பரவும்வரை வருடத்தில் 6 முதல் 10 மாதங்கள் வரை அவர் வடக்கு கிழக்கிலேயே தங்கியிருந்தார். செலவுகளை அவரது மனைவி யூலியெட்டும் புலம் பெயர் தமிழர்களும் பொறுப்பெடுத்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது அவர்க்கு கோவிட் தொற்று பீடித்த நிலையிலும் அவர் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வந்தார். அமெரிக்காவில் நீண்டகாலமாக வாழ்ந்தபோதிலும் அவரது 88 ஆவது வயதுவரை அவர் அமெரிக்க குடிமகனாக மாறாது தொடர்ந்தும் இலங்கை குடிமகனாகவே வாழ்ந்தார்.

1994 முதல் 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்வரை அவர் சமாதான வழிகளில் போரை முடித்துவைக்க இயலுமான முயற்சிகளை எடுத்து வந்தார். அரச தலைவர்கள்,, மனித உரிமை அமைப்புகள், புலம் பெயர் தமிழர்கள், போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆகிய பலருடனும் அவர் பேசினார். 2009 இற்குப் பின்னான அவரது சேவைகள் பல காத்திரமானவை. விளையாட்டு சாதனைகள் மூலம் அவர் ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகள் மோதும் தரப்புகளிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியாகவிருந்தன எனக் கூறப்படுகிறது. 1997 இல் முன்னெடுக்கப்பட்ட Harvard Inititiative வெற்றிபெற்ற முயற்சிகளில் ஒன்று. போருக்குப் பின்னர் அவர் உருவாக்கிய SERVE அமைப்பின் மூலம் பல கல்வித் தரமுன்னேற்றத்திற்கான வலையொளிகள் வட-கிழக்கு பாடசாலைகள் எங்கும் விநியோகிக்கப்பட்டன. ஆசிரிய பற்றாக்குறை தீவிரமாக இருந்த கிராமப்புறங்களில் கோவிட் தொற்று காரணமாக மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலையில் கணிதம், இரசாயனவியல், பெளதீகவியல் போன்ற பல்வேறு பாடங்களில் தயாரிக்கப்பட்ட வலையொளிகள் மாணவர்களுக்கு உதவியாகவிருந்தன. அவரது உதவியுடன் 2014 இல் உருவாக்கப்பட்ட வடமாகாண கல்வி மீளாய்வு வடமாகாண கல்வி அமைச்சினால் உள்வாங்கப்பட்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இது பின்னர் நாடு தழுவிய ரீதியில் பரவலாக்கப்பட்டது. அவரது பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்பதுவும் உண்மை.

தனிப்பட்ட ரீதியிலும் எதிர்வீரசிங்கம் அவர்கள் இன, மத, மொழி வேறுபாடின்றிப் பலருக்கும் உதவிகளைச் செய்தவர். அவரது சேவைகளை மதித்து 1998 இல், அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவருக்கு ‘தேசபந்து’ விருதை வழங்கிக் கெளரவிக்க முன்வந்தபோது அதை மரியாதையுடன் மறுத்து “போர் தொடர்ந்துகொண்டிருக்கும்போது, எனது மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது இப்படியான விருதொன்றைப் பெறுவதற்கு எனது மனச்சாட்சி இடம்கொடுக்காது” எனக்கூறிய மகா மனிதர் அவர்.

2017 இல் ரொறோண்டோவில் கனடிய தமிழர் பேரவையால் நடத்தப்பட்ட வட-கிழக்கு அபிவிருத்தி மாநாட்டில் பங்குபற்றி சிறப்புரையாற்றியிருந்தார். அவரது சேவைகளை மெச்சி கனடிய தமிழர் பேரவை 2021 இல் அவருக்கு மாற்றத்திற்கான தலைவர்கள் என்ற விருதை வழங்கிக் கெளரவித்திருந்தது.