Columnsஜெகன் அருளையா

மகளிர் தினம்: ஒற்றுமை மூலம் அறிவும் பலமும்

வளரும் வடக்கு

ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா
Jekhan Aruliah

“மார்ச் 8 ‘மகளிர் தினம்’ என்பது உனக்குத் தெரியுமா? என்று யாழ்ப்பாணத்திலிருந்து தொலபேசி மூலம் கொழும்பிலுள்ள எனது நண்பி ஒருவரைக் கேட்டேன். “ஒவ்வொரு நாளுமே மகளிர் தினம் தான்” என எரிச்சலுடன் அவள் கூறினாள். அவள் கூறியது சரி. தாய்மார், சகோதரிகள், மகள்கள் அனைவருமே அதையேதான் கூறுவார்கள் – மகளிர் தினத்துக்கு முடிவு என்று ஒன்றில்லை. முன்னாலிருக்கும் கடமை எதுவோ அதைச் செய்வதே பெண்ணினது கடமை. வரையறுக்க முடியாத கடமையும், ஓய்வில்லாத நாட்களும் அவளுக்குப் பாதுகாப்புத் தரப் போவதில்லை எனவே ஒவ்வொரு நாளும் அவளதுதான், ஒவ்வொரு கடமையும் அவளதுதான்.

பெண்களின் பொறுப்புக்கள் எதுவுமில்லாத நான், மிதமிஞ்சிய எனது நேரத்தில் கூகிள் தேடலில் இறங்கினேன். பெண்ணுரிமைச் செயற்பாட்டளாரான சில்வியா பாங்கேர்ஸ்ட் மார்ச் 8, 1914 அன்று லண்டனில் கைதுசெய்யப்படுகிறார். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவேண்டுமெனக் கோரி ஊர்வலம் போன அவரைக் கைதுசெய்ய ஆண்களிட்ட ஏவலை நிறைவேற்ற ஆணகளே அனுப்பப்படுகிறார்கள். பெண்களுக்கான உரிமைகளை வழங்க மறுக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன. உரிய கெளரவம் வழங்கப்படாது உலகெங்கும் வாழும் பெண்களுக்குரிய நாளாக மார்ச் 8 குறிக்கப்படுகிறது. ஏனையோரால் மட்டுமல்ல தம்மைத் தாமே கெளரவித்துக்கொள்ளும் நாளாகவும் அது உருவெடுத்துக்கொள்கிறது.

அணமைத் தசாப்தங்களில், வட-கிழக்குப் பெண்கள் ஏனையோரை விட அதிக சுமைகளைச் சுமந்திருக்கிறார்கள். இலங்கை இனப்போரின் கொடுமைகளிலிருந்து, கைகளில் பைகளையும், குழந்தைகளையும் சுமந்தபடி ஒரு ஊரிலிருந்து இன்னொன்றுக்கு அவர்கள் தப்பி ஓடவேண்டி இருந்தது. அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நீரில்லாத, கழிப்பறை வசதிகளற்ற, தலைகளுக்கு மேல் கூடாரங்கள் ஏதுமற்ற தரிசு நிலங்களில் எதுவுமில்லாது அவர்கள் தமது வாழ்வை மீள ஆரம்பிக்க வேண்டியிருந்தது. போர் முடிந்து சில வருடங்களில் வன்னியில் அவர்களது பரிதாப நிலைகளை நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அதிர்ஷ்டம் கொண்ட சில குடும்பங்கள் தர்ம ஸ்தாபனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், இந்திய வீடமைப்புத் திட்டம் ஆகியவற்றின் உதவிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் பலருக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டவேயில்லை.

போரின் உக்கிரம் கடந்து பல வருடங்கள் ஆகியும் கிராமப்புறங்களிலும் புறநகர்பகுதிகளிலுமுள்ள பெண்கள் வறுமையிலிருந்து தம்மை மீட்டு வாழ்வை முன்னெடுத்துச் செல்ல ஆதாரங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆண்களற்ற குடும்பங்களில் முழுக்குடும்பப் பொறுப்பும் பெண்கள் மீதே விழுகிறது. சில குடும்பங்களில் ஆண்கள் தினக்கூலியை நம்பி வாழவேண்டியிருக்கிறது. வருமானம் இவர்களுக்கு வெகு அருமையாகவே கிடைக்கிறது.

அவுஸ்திரேலிய தொண்டு நிறுவனமான “அவுஸ்திரேலிய உதவி” (Australian Aid) என்னும் திட்டத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்திலுள்ள அரச சார்பற்ற நிறுவனமான சுவடி, “வடக்கை ஊட்டு” (Nourish North) என்னுமொரு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2010 முதல் வடக்கில் இருந்து இயங்கிவரும் இவ்வமைப்பு “புதுமை, ஆராய்ச்சி, உரையாடல்” என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து செயற்பட்டு வருகிறது. ‘சுவடி’ அமைப்பின் இயக்குனர்களை பல வருடங்களாக எனக்குத் தெரியும். இவர்களில் மருத்துவர் பிரபு நடராஜா, மருத்துவர் சிறீபவன் ஆகியோர் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கல்விகற்றுத் தேறியவர்கள். மருத்துவத் தொழிலைத் தேர்வு செய்யாது சமூக மேம்பாட்டிற்காக உழைக்க முன்வந்தவர்கள். சமூகத்தின் நலத்தைப் பேணுவதில் அவர்கள் முன்னின்று உழைக்கிறார்கள். வறுமையே நோய்களுக்கான முன்னணிக் காரணமாக இருக்கிறது.

மார்ச் 2023 ஆரம்பத்தில் ‘சுவடி’ யாழ்ப்பாணத்தில் மூன்று-நாள் நிகழ்வொன்றை நடத்தியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சித்த வைத்தியத்தில் பட்டம் பெற்று தனியார் சிகிச்சை நிலையமொன்ற நடத்திவரும் மருத்துவர் கிரிஷாந்தன் தலைமையில் இந்நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. கோலாலம்பூர், மலேசியாவைச் சேர்ந்த முனைவர் செல்வகுமார் ஐயாத்துரை அவர்களின் வழிகாட்டுதலில் வடமாகாணம் முழுவதிலுமிருந்து 35 பெண்கள் தொழில் முனைவோர் மற்றும் தலைமைத்துவத் திறன்களுக்காக் இங்கு பயிற்சியளிக்கப்பட்டனர். இம்மூன்று நாள் நிகழ்வுகளின்போதும் பெண்கள் தமது பண்டங்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

வடக்கிலுள்ள பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்கள் பல விளக்குமாறுகள், வடை, பப்படம் போன்றவற்றைத் தயாரித்தும், அயலவர்களுக்கு ஆடைகளைத் தைத்துக்கொடுத்தும் தமது வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கிறது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இதில் உண்மை இருக்கிறது என்றாலும் பலர் பரந்த இலட்சியங்களுடனும் அவற்றைச் சாத்தியப்படுத்தும் திறமைகளுடனும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் உதாரண வாழ்க்கை மூலம் தலைமைதாங்கிச் செல்லவும் காத்திருக்கிறார்கள்.

பிரியா நடேசன், பி.என்.எஸ். தொழிலகம், கிளிநொச்சி (Priya Nadesan, PNS Entrepreneurship (Pvt) Ltd, Killinochchi)

PNS என்பது பிரியா, நடேசன் (தந்தை), சியாமளா (தாய்) ஆகியோரது முதலெழுத்துக்கள். பிரியா பிறந்த இடம் கிளிநொச்சி. பிரியாவே அவரது குடும்பத்தின் முதன்மை உழைப்பாளி. அவரது க.பொ.த. உயர்தரக் கல்வி பொறியியல் தொழில்நுட்பத்தைக் குறியாகக் கொண்டிருந்தாலும் பத்திரிகை, வெகுஜன ஊடகம் மற்றும் தொழில் கல்வியில் தான் அவர் தனது டிப்ளோமாவைப் பெற்றார். அறுவடைக்குப் பின்னான தொழில்நுட்பம் (Post Harvest Technolgy), மகிமைப்படுத்தல் (Branding), விளம்பரப்படுத்தல் (Advertising) ஆகிய துறைகளிலும் அவர் இணையவழிக் கல்வியைப் பெற்றிருந்தார்.

Priya Nadesan, PNS Entrepreneurship

தனக்குத் தெரியாததைத் தேடிக் கற்றுக்கொள்ளும் தொழில்முனைவோருக்கான சிறந்த உதாரணம் பிரியா. நேரடியாக வகுப்புக்களுக்குச் சென்று கற்பது முதல் இணையவழி மூலம் பெறுவது வரை அவர் தனது முயற்சிகளை மேற்கொள்கிறார். தான் கற்றதைப் பிற முனைவோருக்குக் கற்றுக்கொடுப்பதையும் அவர் தனது தொழிலின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார். நேரடியாகச் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பகிர்ந்துகொள்வதோடு வருமானமீட்டுவதற்கெனத் தொழில்களை ஆரம்பிப்பவர்களுக்குத் தேவையான சிறிய வகுப்புக்களையும் அவர் நடத்துகிறார்.

தான் போதிப்பதை நிகழ்த்திக் காட்டுபவர் பிரியா. அதனால் எது எவருக்கு அவசியமானது என்பதை அவர் அறிந்துவைத்திருக்கிறார். உணவுப் பண்டங்களைத் தயாரிப்பது, சந்தைப்படுத்துவது, விற்பதுவே பிரியாவின் நிறுவனம் செய்வது. நிலக்கடலை லட்டு (இது மிகவும் ருசியானது என்பதை நான் உறுதி செய்வேன்), நிலக்கடலை மாவு, வறுக்கப்பட்ட நிலக்கடலை-மிளகுக் கலவை, பாற் கட்டி (milk toffee), ஊறுகாய், உள்ளூர்க் கோப்பி முதற்கொண்டு பல பண்டங்களைத் தயாரிக்கிறார் அவர். நிலக்கடலை, கோப்பி விதைகள், பால் மற்றும் தேவையான மூலப்பொருட்களை அவரே சந்தையில் கொள்முதல் செய்கிறார். 5 பணியாளர்கள் நிரந்தரமாக இருப்பினும் தேவையானால் மேலதிக பணியாளர்களை அவர் சேர்த்துக் கொள்கிறார். பி.என்.எஸ். நிறுவனத்தின் மாதாந்த விற்பனை: 100 கி. லட்டு, 50-100 கி. கோப்பி. பாற் கட்டிகளைச் செய்வதற்கு அவர் மாதம் 150 லீட்டர் பாலை வாங்கவேண்டியிருக்கிறது.

பி.என்.எஸ். நிறுவனத்தை ஒரு தேசிய, சர்வதேச நிறுவனமாக அடையாளப்படுத்த வேண்டுமென்பதே பிரியாவின் கனவு. தனக்கென ஒரு நிலத்தை வாங்கி அதில் நிலக்கடலையைப் பயிரிட்டு தனது உற்பத்தியை அதிகரிக்கவேண்டுமென்பதே அவரது விருப்பம். இது உகந்த மூலோபாயமாக இருக்குமா என்பது தெரியாது. தன்னுடையதும் மற்றவர்களினதும் அனுபவங்களை ஆசானாகக் கொண்டு மேலும கற்றுக்கொள்வதையே அவர் விரும்புகிறார்.

பிரியாவுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் pnsentrepreneurship@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நிவேதினி செல்லத்துரை, ஏ.என். பிளாண்ட்ஸ் (Nivethini Selladurai, AN Plants)

Nivethini Selladurai, AN Plants

23 வயதுடைய நிவேதினி, சில வருடங்களாக, அவரது பாடசாலைக் காலங்களிலிருந்தே, தாவரங்களை விற்று வருகிறார். ‘A’ என்ற அவரது மிகப் பிரியமான எழுத்து மற்றும் ‘N’ என்ற அவரது பெயரின் முதலெழுத்துடன் ‘Plants’ என்பதையும் சேர்த்து அவர் தனது நிறுவனத்துக்குப் பெயர் சூட்டியிருக்கிறார். இத் தாவரங்களை அவர் தனது சகோதரியின் தோட்டத்தில் பயிரிட்டு அல்லது அருகிலுல்ள முளையகங்களில் (plant nurseries) வாங்கி விற்பனை செய்கிறார். நிவேதினியின் நண்பர்களும், அவர் வாழும் திருநெல்வேலிப் பகுதியில் வாழ்பவர்களுமே அவரது வாடிக்கையாளர்கள். தனது விற்பனைச் சந்தையை விரிவுபடுத்துவதற்காக சமீபத்தில் அவர் தனது சகோதரி ஜஸ்மினியுடன் சேர்ந்து AN Plants என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். வியாபார சந்தைகளில் பங்குபற்றுவது மற்றும் வட்ஸப் சமூக வலைத்தளத்தைப் பாவிப்பது போன்றவையே அவரது விற்பனை முறைகள்.

‘சுவடி’ நிகழ்வுக்கு சமூகமளித்தது அவரது சந்தைப்படுத்தலுக்கு மிகவும் உதவியாக அமைந்தது. எனது கட்டிடத்தின் முன்னரங்கத்தை அழகுபடுத்துவதற்குத் தேவையான 50 தாவரங்களை நான் அவரிடம் வாங்கிக்கொண்டேன். எனது தேவைகளைத் தெரிவதை நான் அவரிடமே விட்டுவிட்டேன். எனது தேவை: தாவரங்கள் அழகாக இருப்பதுடன் பசுக்களுக்குத் தீனியாக மாறிவிடவும் கூடாது என்பதுதான். எனது முற்றத்துப் புல்லை இப்பசுக்கள் ‘மேய்ந்து’ நேர்த்தியாக வைத்திருப்பதை நான் வரவேற்றாலும் அழகான பல தாவரங்கள் அவற்றின் வயிறுகளை அழகுபடுத்துவதை நான் விரும்பவில்லை.

கலைப் பிரிவில் தனது க.பொ.த. உயர்தர வகுப்பை முடித்துக்கொண்ட நிவேதினி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் சேர்வதற்கான நேர்முகத் தேர்வில் தோற்றியிருக்கிறார். 6 முதல் 11 ஆம் அவகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொருளாதாரம் கற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே நிவேதினியின் விருப்பம். ஆசிரியராக வருவதே அவரது இலட்சியமாக இருந்தாலும் நேர்முகத் தேர்வின் பெறுபேறு வரும்பவரை காலத்தைச் செலவிட அவர் விரும்பவில்லை. ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்வாகினாலும் தாயாருக்கும், சகோதரிக்கும் உதவியாக இருந்து இத் தொழிலை முன்னேற்றவேண்டுமெனபதே அவரது ஆசை.

நிவேதினியுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் Niveajith8@gmail.com என்னும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

முனைவர் செல்வமலர் ஐயாத்துரை (Dr Selvamalar Iyadurai)

முனைவர் ஐயாத்துரை கோலாலம்பூர், மலேசியாவைச் சேர்ந்தவர். ‘சுவடி’ யால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வில் இரண்டு நாள் பட்டறை ஒன்றில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் வந்திருந்தார். 3 மாவட்டங்களிலுள்ள 7 கிராமங்களிலிருந்து 35 பெண்கள் இப்பட்டறையில் கலந்துகொண்டார்கள். இப் பெண்கள் தமது சமூகங்களில் தலைமைத்துவங்களை ஏற்று பல வழிகளிலும் சமூக மாற்றங்களியும் பொருளாதார அபிவிருத்திகளையும் மேற்கொண்டு வருபவர்கள். இக் கருத்தரங்கில் முனைவர் ஐயாத்துரை வருமானத்தை ஏற்படுத்தவல்ல வியாபார உத்திகள் மற்றும் தலைமைத்துவத் திறன்கள் ஆகிய விடயங்களில் போதனைகளை மேற்கொண்டார்.

அவர் அறிமுகம் செய்த 7 வகையான வியாபார உத்திகள் பெண்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தொழில்முனைப்புகளில் ஈடுபட உதவி செய்யக்கூடியவை.

  1. ‘கூட்டு’ நிதியம்
  2. இணைந்த தொழில் முனைப்பு (Collective Entrepreneurship)
  3. கூட்டுறவு (Cooperative)
  4. ஒரு கிராமம் – ஒரு உற்பத்தி அல்லது பயிர் (One Village One Product or Crop)
  5. சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் வருமானமீட்டல் (INGO assisted income generation – FAO, WFP, OXFAM, UNDP, ILO)
  6. அரசாங்க உதவியுடன் வருமானமீட்டல் – சிறுதொழில் அபிவிருத்தி அலகு, கூட்டுறவுத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் (Government  Agency assisted income generation – Small Enterprise Development Unit,  Department of Cooperative, Department of Agriculture)
  7. உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் வருமானமீட்டல் (Local NGO assisted income generation – Viluthu, SUVADI, CFCD, Jaffna Social Action Centre)
Workshop delegates

வட மாகாணத்தில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உகந்த இரண்டு சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களின் முன்னெடுப்புகளை முனைவர் ஐயாத்துரை என்னுடன் பகிர்ந்துகொண்டார். ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் UNDP Sri Lanka’s Capacity Development of Local Governance (CDLG) Project மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் StartCOOP and Local Empowerment through Economic Development (LEED) Programmes by ILO (International Labour Organisation, a United Nations body) திட்டம்.

முனைவர் ஐயாத்துரையின் முக்கிய கருப்பொருள் பெண்கள் கூட்டாகப் பணிபுரிய வேண்டுமென்பதே. ஒவ்வொரு கிராமத்திலும் ஒழுங்கமைக்கப்பட்ட பெண்கள் அமைப்புக்களைத் தோற்றுவிப்பதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவிசெய்து அறிவையும் பலத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே அவரது எண்ணம். தனியாக முயற்சிகளை ஆரம்பிப்பதை விடுத்து கச்சேரி போன்ற அரச அலுலகங்களின் உதவியுடன் கட்டிடங்களையும் வருமானமீட்டலுக்கான உதவிகளையும் பெறுவது சாத்தியாமான ஒன்று என்பது அவரது கருத்து. கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதே முனைவர் ஐயாத்துரையின் பண்பு. கூட்டு முயற்சிகளின் மூலம் போட்டிகள் தவிர்க்கப்பட்டு, அனுபவங்கள் பகிரப்பட்டு ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள முடியுமென அவர் கருதுகிறார்.

இப்படியான குழுக்களை உருவாக்குவதன் மூலம் சமூக கூட்டுறவையும், தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் பண்பையும் வளர்த்துக்கொள்ள முடியும் என்பதே முனைவர் ஐயாத்துரையின் பயிற்சியின் அடிநாதம்.

“புதிய கருத்துக்களையும், செயல்முறைகளையும் கற்றுக்கொள்ள இப்பெண்கள் விரும்புகிறார்கள். தலைமைத்துவத்தையும், வழிகாட்டலையும் அவர்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள். இப்படியான சிறிய பட்டறைகள் போதாது. இப்பெண் தொழில் முனைவர்களுக்கு அவர்களது தேவைகளைப் புரிந்துகொண்டவர்களால் தொடர்ச்சியான ஆதரவும் வழிகாட்டலும் வழங்கப்படவேண்டும். இதையே ‘சுவடி’ போன்ற அமைப்புகள் தருவதற்கு முனைகின்றன” என்கிறார் முனைவர் ஐயாத்துரை.

முனைவர் ஐயாத்துரையுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் selvamalarayadurai23@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

‘சுவடி’ யைத் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் md@suvadi.org என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

( — இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் ஜெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். jekhan@btinternet.com – தமிழாக்கம்: சிவதாசன்)