ப.த.சட்டத்தை அகற்றுவதாக 5 வருடங்களுக்கு முன்னர் ரணில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – சுமந்திரன்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“2017 இல் அப்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பிரஸ்ஸெல்ஸுக்கு பயணம் செய்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கபோவதாகவும் அதுவரை அச்சட்டம் பிரயோகப்படுத்தப்படமாட்டாது என்று உத்தரவிடப்போவதாகவும் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்தே ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீளத்தந்தது. ஐ.நா. மற்றும் பல சர்வதேச அமைப்புகளின் முன்னிலையில் இவ்வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தாலும் ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் இச் சட்டம் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது.
இந்த மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டம் மீண்டும் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரியும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இச் சட்டத்தைப் பாவித்து மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடுப்புக்காவல் உததரவுக்கான ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறார். இந்தத் தடவை அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக அல்ல அமைதிவழியிலான போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக. தற்போது இந்நாட்டில் பயங்கரவாதம் இல்லை. எனவே பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் ஒன்று இந்நாட்டுக்குத் தேவையில்லை. புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவரப் போவதாக அரசாங்கம் சொல்கிறது. அது கொண்டுவரப்படும்வரை அதுபற்றி எம்மால் கருத்துக்கூற முடியாது” என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.