போர்நிறுத்தத்தை அறிவித்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார் – செலென்ஸ்கி
18 ஆவது நாளை அண்மிக்கும் ரஷ்ய – யூக்கிரெய்ன் போரில் ரஷ்யப் படைகள் முன்னேற்றத்தைக் கண்டுவருவதோடு யூக்கிரெய்ன் தலைநகரான கீவைச் சுற்றிவளைத்துள்ளதாகவும் அறியப்படுகிறது. அத்தோடு யூக்கிரெய்ன் படைகளுக்கு மேற்கு நாடுகள் ஆயுத உதவிகளைச் செய்தால் தாம் அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்கவேண்டிவருமென நேற்று ரஷ்ய உதவி வெளிவிவகார அமைச்சர் எச்சரித்திருந்ததைத் தொடர்ந்து இன்று (மார்ச் 13) போலந்து எல்லையிலுள்ள யூக்கிரேனிய பயிற்சி முகாம்கள் மீது ரஷ்யா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. இத் தாக்குதலின் பின்னான சேத விபரங்கள் தெரியவில்லை.
யூக்கிரெய்ன் அதிபர் வொலோமிடிர் செலென்ஸ்கி இன்று விடுத்திருக்கும் அறிக்கையில் ரஷ்யா போர் நிறுத்தத்துக்கு இணங்கினால் தான் ரஷ்யாவுடன் பேசுவதற்குக் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளார். இதே வேளை இரு தரப்புக்குமான மத்தியஸ்தத்தை வகித்து இஸ்ரேலிய பிரதமர் ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் போரை நிறுத்தும்படி யூக்கிரெய்னுக்கு அவர் ஆலோசனை செய்துள்ளதாகவும் இன்னுமொரு செய்தி தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சிலர் அதிபர் புட்டினோடு பேசியபோது போரைத் தொடர்ந்து நடத்துவதிலேயே அவர் ஆர்வம் காட்டிவருவதாகத் தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் போலந்து போன்ற நேட்டோ நாடுகளினூடாக யூக்கிரெய்ன் படைகளுக்குப் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் நேட்டோவும் அமெரிக்காவும் கொடுத்து வருவது தொடர்பாக ரஷ்யா கடும் எச்சரிக்கை செய்துள்ளது.
தற்போது ரஷ்யப் படைகள தலைநகர் கீவிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டிருப்பதாகவும் விரைவில் தலைநகர் வீழ்ந்துவிடுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. போர் ஆரம்பித்ததிலிருந்து தமது தரப்பில் 1,300 இராணுவத்தினர் கொல்லப்ப்ட்டிருக்கிறார்கள் என செலென்ஸ்கி அறிவித்துள்ளார்.