NewsWorld

போரை முடிவுக்குக் கொண்டுவரும்படி நெட்டன்யாஹுவுக்கு ட்றம்ப் உத்தரவு

தனது பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ட்றம்ப் இஸ்ரேல் அதிபர் நெட்டன்யாஹுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகமான ரைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ட்றம்பின் ஃபுளோறிடா விடுமுறை வதிவிடமான மார்-ஏ-லாகோவில் நெட்டன்யாஹுவைச் சந்தித்தபோது இப்படிக் கூறியிருந்ததாக ட்றம்பின் முன்னாள் ஊழியரை மேற்கோள் காட்டி இவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சந்திப்பிற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் ஹயோம் நியூஸ் ஊடகத்திற்கு ட்றம்ப் கொடுத்த பேட்டியொன்றின்போதும் ” நீங்கள் உங்கள் போரை விரைவில் முடித்துக்கொள்ள வேண்டும். காசாவில் பொதுமக்களின் வாழிடங்களை அழிப்பது உலககத்திற்கு நல்லதாகப் படவில்லை” எனத் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் பேசும்போது நெட்டன்யாஹுவுக்கு எவ்வித காலக்கெடுவையும் விதிக்காவிட்டாலும் தனிப்பட்ட ரீதியில் போரை மிகவிரைவில் முடித்துவிடும்படி அழுத்தம் கொடுத்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் காசா பகுதியின் முழுமையான பாதுகாப்பு தமது கைகளில் வரும் வரை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் இராணுவ நடவடிக்கைகளை தான் நிறுத்தப் போவதில்லை என நெட்டன்யாஹு சூளுரைத்து வருகின்றார். இதே வேளை இஸ்ரேலிய படைகள் காசாவிலிருந்து முழுமையாக வெளியேறினால் தாம் பணயக் கைதிகளை முழுமையாக விடுவிக்கத் தயாராக இருப்பதாக கடந்த வாரம் ஹமாஸ் இட்ட நிபந்தனையைத் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார். அதே வேளை ஹமாஸுடன் எந்தவித உடன்படிக்கையைச் செய்தாலும் தாம் நெட்டன்யாஹுவின் கூட்டணி அரசிலிருந்து விலகி அரசைக் கவிழ்த்துவிடத் தயாராக இருப்பதாக கூட்டணிக் கட்சிகள் கூறி வருகின்றன. எனவே நெட்டன்யாஹுவுக்கு இது மிகவும் இக்கட்டான நிலையைக் கொண்டுவந்திருக்கிறது. இதுவரை ஏறத்தாள 100 பணயக் கைதிகள் இன்னும் ஹமாஸ் வசம் இருக்கின்றனர்.


இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக கூறிவரும் ட்றம்பிற்கு சமீப காலங்களில் அரபு அமெரிக்கர்களின் ஆதரவு வெகுவாகப் பெருகி வருகிறது. “இப்போருக்குக் காரணம் பைடன் – ஹரிஸ் அரசு தான்” ” என ட்றம்ப் மேற்கொண்டுவரும் பிரசார உத்தி அரபு அமெரிக்கர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

இறுதியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் ட்றம்ப், ஹரிஸ் இருவரும் ஏறத்தாழ சமமான வாக்காளர் ஆதரவைக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (Image credit: Times of Israel)