Sri Lanka

போரில் உயிர்நீத்தவர்கள் நினைவு : மே 17, 18 திகதிகளில் சர்வமத நிகழ்வுகள்

போர் முடிவுற்று 15 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக, போரில் உயிர்நீத்த அனைத்து மக்களையும் நினைவுகூரும், அனைத்து இனமக்களும் பங்கேற்கும் சர்வமத நிகழ்வுகளாக நடைபெறவுள்ளது. உலகத் தமிழர் பேரவை, சிறந்த இலங்கைக்கான மன்றம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வுகள் மே 17ம் திகதியன்று விகாரமாதேவி பூங்காவிலுள்ள புத்தர் சிலை முன்பும் மே 18ம் திகதியன்று வவுனியா நகரசபை முன்றலிலும் நடைபெறவுள்ளன.

2022 ல் காலிமுகத் திடலில் நடைபெற்ற அரகாலயா மக்கள் எழுச்சியின்போது சகல இன மக்களும் தாமாக முன்வந்து முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்தமை நினைவிலிருக்கலாம்.

‘போரினால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு’ என்னும் பெயரில் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வு மே 18, 2024 மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்வு வன்னி மக்கள் ஒன்றியம், வன்னி மாவட்ட காணாமலாக்கப்பட்டோர் சங்கம், சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் (SBSL), தர்ம சக்தி அமைப்பு, உலகத் தமிழர் பேரவை (GTF) ஆகிய அமைப்புக்களின் கூட்டினால் ஒழுங்குசெய்யப்படுகிறது. இந்நிகழ்வில் சுமார் 2000 பேர் வரையில் கலந்துகொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகிறது.