• Post category:SRILANKA
  • Post published:November 25, 2020
Spread the love

நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இனங்களுக்கிடையேயான நல்லிணக்க முயற்சிகளை துணிச்சலாக முன்னெடுக்க வேண்டுமென மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. நடராஜா ரவிராஜ் அவர்களது மனைவி சசிகலா ரவிராஜ் திறந்த கடிதமொன்றை எழுதியுள்ளார்.

நடந்து முடிந்த போர் இரு பகுதியினரும் தமது அனுபவங்களூடு பல கசப்பான பாடங்களைக் கற்றுக்கொள்ள வழிசெய்திருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு பகுதியினர் மட்டும் தொடர்ந்து துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருப்பதைப் பார்க்க மனம் வருந்துகின்றது என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்கள் அவர்கள் மிகவும் நேசிக்கும் உயிர்நீத்த புதல்வர்களையும், புதல்விகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும் நினைவுகூரமுடியாமல் தடுப்பது புண்ணில் உப்பைத் தடவுவது போலானது. நாங்கள் சிங்கள மக்களை நேசிக்கிறோம். அவர்களுக்குத் துன்பம் விளைவிக்க நாம் ஒருபோதும் விரும்பியதல்ல. அம் மக்களுக்கு எதிராக தீய எண்ணங்களையும் நாம் எமது இதயங்களில் சுமந்துகொண்டிருக்கவோ அல்லது அவர்களை அச்சப்படுத்தவோ, ஆத்திரமூட்டவோ நாம் விரும்பவுமில்லை” என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பொருளாதாரத்தில் சுபீட்சமடையவேண்டுமென்றால் தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர் ” எமது மக்களின் விருப்பத்துக்கெதிராக அவர்களை அடக்குமுறைகளுக்குள் வைத்திருப்பது நாம் பேசும் நல்லிணக்கத்தைக் கொண்டுவராது. நாட்டின் பெரும்பான்மை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவராகிய நீங்கள், நாட்டின் சுபீட்சத்தை முன்னிட்டு நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் வகையில் துணிகரமான முன்னகர்வை மேற்கொள்ளுங்கள். போரின் காரணமாகத் தங்கள் இன்னுயிர்களை இழந்த எங்கள் சகோதர சகோதரிகளை நினைவுகூர அன்பு கூர்ந்து எங்களுக்கு அனுமதி தாருங்கள். அது இலங்கைவாழ் தமிழர்களின் இதயங்களை வெல்வதற்கு வழைவகுக்கும்” என உருக்கமாக வேண்டுகோளை விடுத்துள்ளார்.


Print Friendly, PDF & Email
Related:  "பிரபாகரனை நாய் மாதிரிக் கொன்றேன். அதே மனிதனாக நான் மீண்டும் மாறலாம்" - கோதாபய எச்சரிக்கை!