கருணா விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தைக்கூடக் காட்டித்தரவில்லை – சரத் பொன்சேகா

கருணா விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தைக்கூடக் காட்டித்தரவில்லை – சரத் பொன்சேகா

Spread the love

செய்தி அலசல்: சிவதாசன்

கருணா அம்மான் அரசாங்கத்திடம் சரணடைந்த போது அவரால் இராணுவத்துக்கு எந்தவித உதவியும் கிட்டவில்லை. புதுக்குடியிருப்பு உட்பட வடக்கில் அவர் பலதடவைகள் தங்கியிருந்திருக்கிறார். அப்படியிருந்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது இருப்பிடத்தைக்கூட அவர் காட்டித்தரவில்லை என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரித்திருக்கிறார்.

“இராணுவத்திற்கு பலத்தைச் சேர்ப்பதில்கூட அவரால் உதவ முடியவில்லை. அவரோடு சரணடைந்தவர்கள் 150 பேர் தான். அவர்களில் 80 பேர் மட்டில் 13 வயதுக்கும் குறைந்தவர்கள். அப்படியான கருணா அம்மான் இப்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவுச் சமரில் தான் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொன்றேன் எனக் கருணா, சில நாட்களுக்குமுன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு நேற்று (24) அவர் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதே வேளை, இன்று காலை கருணா குற்ற விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலம் கொடுப்பதற்காக வந்துள்ளார் எனவும் அறியப்படுகிறது.பொதுஜன பெரமுனவுக்குள் கருணாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

ஆனையிறவுச் சமர் தொடர்பாக கருணா வெளியிட்டுள்ள கருத்துக்கள் பொதுஜன பெரமுன கட்சி, அதன் பங்காளிகள் கட்சி, இராணுத்தினர், சிங்கள பெளத்த தேசியவாதிகள் எனப் பலதரப்பினராலும் மிகவும் விசனத்தோடு பார்க்கப்படும் ஒரு விடயமாக மாறியிருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்து ஜனாதிபதி கோதாபய தலைமையில் அமைக்கவிருக்கும் அரசாங்கத்தில் கருணாவுக்கு எந்தவித பதவியும் கொடுக்கப்படமாட்டாது என அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றுத் தெரிவித்திருக்கிறார்.

“நாங்கள் அவரை நிராகரித்திருப்பது மட்டுமல்ல, அவரை வன்மையாகக் கண்டித்துமுள்ளோம். அவர் தெரிவித்த கருத்துக்கள் பற்றி நாங்கள் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளோம். அவரது கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை. அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க அது போதுமானது” என அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

Good cop / bad cop நடைமுறை

எவ்வளவு எதிர்ப்புக்கள் இருப்பினும் கருணாவின் தேவை ராஜபக்ச தரப்புக்கு இன்னும் இருக்கிறது. ஆகஸ்ட் 15 பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சியை அமைக்கும் சந்தர்ப்பம் பொதுஜன பெரமுன மற்றும் அதன் பங்காளிக்களுக்கு இருக்கிறது. இச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்பதற்காக, ராஜபக்ச தரப்பு எந்த ஒரு துரும்பையும் பாவிக்கவே செய்யும்.

வாக்காளர் மத்தியில் கருணா ஒரு வெறுக்கப்படும் ‘தமிழனாக’ காட்டப்படுவது ஒரு உத்தி. 2000 -3000 இராணுவத்தினர் இறந்தது தென்னிலங்கைச் சிங்கள மக்களுக்குப் புதிய செய்தியல்ல. அதற்குப் புத்துயிர் ஊட்டப்படுவது வாக்குகளைப் பெறுவதற்கான உத்தி. சொல்லப்பட்ட விடயத்தில் உண்மை இருந்தாலும், அதை வேண்டுமென்று நினைவுபடுத்துவது கருணாவின் உள்நோக்கமாக இருந்திருக்கும் என நான் நம்பவில்லை. ஆனால் இந்தச் செய்தியை தென்னிலங்கை மக்களிடம் எப்படி விற்றுக்கொள்ளலாம் என்பதை ராஜபக்ச தரப்பு மிகத் திறமையாகக் கையாளுகிறது. அமைச்சர் அமரவீரா, விமல் வீரவன்ச போன்றோர் இதில் எடுப்பது ஒரு bad cop role தான்.

இதே வேளை மஹிந்த ராஜபக்ச கருணாவை அரவணைத்து ஆறுதல் சொல்வதன் மூலம் ஒரு good cop role ஐ எடுப்பதும் தெரிகிறது. தேர்தல் முடியும்வரை கருணாவின் வாயைக் கட்டிப் போடவேண்டும் அல்லது சிறையில் அடைக்க வேண்டும் அல்லது அணைத்து அரவணைத்து அவர் மூலம் எதிர்க்கட்சியினரது இரகசியங்களை அம்பலப்படுத்த வேண்டும். ராஜபக்ச இந்த மூன்றாவது தேர்வையே எடுத்திருக்கிறார் போலத் தெரிகிறது. சில வேளைகளில் தேர்தல் முடிந்தவுடன் கருணா சிறையிலடைக்கப்படலாம்.“முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கருணாவின் வரலாறு எல்லோருக்கும் தெரிந்தது தான் அதில் எந்தவித இரகசியமுமில்லை” என குளியாப்பிட்டியில் நேற்று நடைபெற்ற தேர்தல் கூட்டமொன்றில் பேசும்போது ராஜபக்ச தெரிவித்துள்ளார். கருணாவைப் புறக்கணித்து வெளியில் விடுவதால் தமக்கு இழப்பு என்பதை அவர் நன்றாக உணர்ந்திருப்பதால் அவர் இந்த good cop போன்ற நடிப்பைச் செய்ய வேண்டியவராக இருக்கிறார்.

இதுவரை கருணாவின் கருத்துக்கள் பற்றி பொதுஜன பெரமுன கட்சி முதல் அத்தனை எதிர்க்கட்சிகள் வரையும், தென்னிலங்கை ஊடகங்களுட்படச் சகலரும், மஹிந்த ராஜபக்ச ஈறாக, கருணா மீது ‘விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி’ என்ற முத்திரையை ஒட்டத் தவறவில்லை. இதன் மூலம் இச் செய்தி தென்னிலங்கை மக்களுக்கெனக் கவனமாகத் தயாரிக்கபட்டதெனத் துலாம்பரமாகத் தெரிகிறது.

உண்மையான தலைவர்கள் எந்தவொரு இக்கட்டான நிலையையும் எதிர்கொள்வதற்குத் தயாரானவர்களாக இருக்கவேண்டும். குறுகிய நோக்கங்களில்லாது மக்களின் நன்மைக்காக அர்ப்பணிப்போடு செயற்படும் தலைவர்களையே மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்

மஹிந்த ராஜபக்ச

இதில் ரணில் விக்கிரமசிங்க தவிர்த்த அனைவருமே பங்காளிகள் தான். ஏனெனில் இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் தான் மீன் பிடிக்க வேண்டும். அதைக் கலக்குவதற்கு அவர்கள் எல்லோருக்கும் இப்போது ஒரு மட்டை கிடைத்திருக்கிறது. அதை யார் திறமாகக் கையாள்வது என்பதுதான் போட்டி.

பிரேமதாச புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார் என்பது பழைய விடயமானாலும் அதை ராஜபக்ச தரப்பினர் இதற்கு முன் எடுத்துப் பெரிதாக ஊதியதாகத் தெரியவில்லை. கருணாவைப் பாவித்து அரசியல் இலாபம் பெறலாம் என நினைத்து அந்தச் சங்கையும் சஜித் தான் ராஜபக்சவுக்கு ஊதிக்காட்டியிருக்கிறார். “உண்மையான தலைவர்கள் எந்தவொரு இக்கட்டான நிலையையும் எதிர்கொள்வதற்குத் தயாரானவர்களாக இருக்கவேண்டும். குறுகிய நோக்கங்களில்லாது மக்களின் நன்மைக்காக அர்ப்பணிப்போடு செயற்படும் தலைவர்களையே மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று சஜித்தின் ஆயுதத்தைப் பூமராங்க் செய்திருக்கிறார் மஹிந்த. அவரிடம் இந்த வாக்கு வல்லமை இருக்கிறது என்பதைத் தெரியாமல் எதிர்க்கட்சிகள் போராடுவது தான் அபத்தம். விளைவு, சஜித்தின் கட்சி இத் தேர்தலில் படுதோல்வியடைவதன் மூலம் ராஜபக்சக்களின் கைகளில் கிரீடத்தைத் தூக்கிக் கொடுப்பதாகவே அமையும்.ராஜபக்சக்களின் வியூகங்கள்

ராஜபக்ச தரப்பு இத் தேர்தலில் ஆட்சியமைப்பது உறுதி; அது Plan A. ஆனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவது Plan B. இதற்காக எதிர்க் கட்சியை முற்றாக வாங்குவதோ அல்லது கணிசமான அங்கத்தவர்களை உருவி எடுப்பதோ தேவைப்படலாம் என்பதை ராஜபக்ச தரப்பினர் உணர்ந்து எதிர்க்கட்சிகளை அதிகம் சாடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். இதற்காக நிரம்ப வெளிநாட்டுப்பணமும் விளையாடுகிறது என்றும் கேள்வி. அதுவும் சரிவராத பட்சத்தில் த.தே.கூட்டமைப்பை உள்வாங்கி அரசியலமைப்பு மாற்றத்தின்போது ‘இதை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று ஏதாவதை எறிவது Plan C யாகவும் இருக்கலாம். எதை எறிவது என்பது கூட்டமைப்பின் வாகனத்தில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதைப் பொறுத்தது. இதில் ராஜபக்சக்களின் கெட்டித்தனம் என்னவென்றால் சிங்கள பெளத்த இலங்கையை அமைப்போம் என்று தென்னிலங்கை மக்களுக்கு positive story யைச் சொல்லும் தீவிரம், எதிர்க்கட்சிகளைத் தாக்குவதில் தமது ஆயுதங்கள் எதையும் பாவிக்காமல் இருப்பது. இதில் கருணா என்ற ஆயுதத்தை எதிர்க்கட்சிகள் எடுத்து ராஜபக்சக்களிடம் கொடுத்துள்ளன. இரக்கம் அவர்கள் மீதுதான் வருகிறது.

இவ் விடயத்தில் கருணாவின் நிலை திரிசங்கு சொர்க்கம் தான். ராஜபக்ச தரப்பைப் பகைத்துக்கொள்வதால் அவருக்குக் கிடைக்கப்போவது சிறை மட்டுமே. எனவே ராஜபக்சவின் சட்டையில் தொங்கிக்கொள்வதைத் தவிர அவருக்கு இப்போதைக்கு வேறு வழியில்லை.

இந் நிலைமையில் வடக்கில் தமிழ் வேட்பாளர்களது கள நிலவரங்களைப் பார்க்கும்போது, வரிசையில் பின்னால் ஒருவர் பலாப்பழத்துடன் நிற்பதைப் பார்த்து முன்னால் நிற்கும் கருணா சிரிப்பது மனக்கண்ணில் தெரிகிறது.

மஹாவம்சம் சிங்கள பெளத்தர்களுக்கு நிறையக்கற்கத் தந்திருக்கிறது.

Print Friendly, PDF & Email