போராட்டம்
திரை அலசல்
மாயமான்
நீண்டதொரு இடைவேளைக்குப் பிறகு நேற்று (செப்டம்பர் 27, 2026) மார்க்கம் யோர்க் சினிமாவில் இப்படத்தைப் பார்க்கும் பாக்கியம் கிட்டியது. கனடாவில் இது முதல் தரமாக வெளிடப்பட்ட premiere show. நண்பர் கனடா மூர்த்தியின் காருண்யத்தால் VIP எனப் புகழ் பொறிக்கப்பட்ட ஒரு சீட்டு. அப்படியொன்றும் சோஃபா வில் அமர்த்தி முன்வரிசையில் வைத்துப் படமெடுக்கும் நிகழ்வல்ல. விருப்பத்திற்கமைய ஒரு ‘நடுச்செண்டர்’ இருக்கையைப் பிடித்து அமர்ந்தோம். இலவச சோளப்பொரி, மென், சுடு பானங்கள் அதற்கும் மேலாக இருக்கையில் வைத்து சிற்றுண்டிப் பொதி வேறு.
இப்படத்தை பாஸ்கரன் கந்தையா தயாரித்திருந்தார் என்பதை விட வேறெதையும் நான் அறிந்திருக்கவுமில்லை, அறிய முற்பட்டிருக்கவுமில்லை. காரணம் இதர விமர்சகர்களின் கருத்துகளினால் முற்சாய்வு (bias) எதுவுமேற்படாமல் அப்படத்தை நான் பார்க்க விரும்பியதே. இயக்குனர் ராஜ் சிவராஜ் என்பது முதல் சில ஃபிரேம்களில் வந்துவிட்டது. அவரது பெயரை நான் முன் பின் கேள்விப்பட்டிருக்கவில்லை.
ஈழத்தமிழரின் உரையாடல்களுடன் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் ‘ஆகா ஒகோ’ வகையறாக்களில் மாட்டுப்படுவது வெகு குறைவு. இது எங்கள் இலங்கைத் தயாரிப்புகளான கறுப்பு / வெள்ளை முயற்சிகளிலிருந்து தொடர்ந்து வருவது. எழுபதுகளில் வெளிவந்த யோகா தில்லைநாதனின் ‘குத்து விளக்கு’ படத்தின் படப்பிடிப்பைப் பார்க்கவென ஒருநாள் நானும் யோகாவின் சகோதரர் ரவி சொக்கநாதனும் போயிருந்தோம். நான்கு செயற்கைச் சுவர்களுடன் கூரையில்லாத ‘வீடு’. “இஞ்சேருங்கோப்பா யாழ்ப்பாணத்து நல்லெண்ணையை” என்ற வசனத்தை யோகா பேசுவார். மூன்று நான்கு தடவை retake. அன்றிலிருந்து கசத்துப்போனது இந்த ‘யாழ்ப்பாண உரையாடல்’ (திரையில் மட்டும்!). ‘போராட்டமும்’ முற்று முழுதாக யாழ்ப்பாண உரியாடல் மொழியில்தான் இருந்தது. ஆனால் என் செவிகளால் அதைப் பிரித்துணர முடியவில்லை. காரணம் என் கவனமெல்லாவும் காட்சிகளிலும், பாத்திரங்களிலும், கதையிலும் ஒன்றிவிட்டதே. இதுவே இப்படத்தின் பெரு வெற்றியென்பேன்.
கதை மிகவும் எளிமையானது. ஒரு மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் உதைபந்தாட்ட நாயக கனவை அடையும் போராட்டம் தான் கதை. ஆனாலும் அதன் வெற்றிக்கான காரணம் இவ்விளைஞனைப் (மில்லர்) போன்றோரைப் பெருவாரியாகக் கொண்ட உண்மையான சமூகங்கள் இன்னும் இலங்கையின் பல இடங்களிலுமுண்டு. கடற்தொழில், தேவாலயம், சீட்டாட்டம், உதைபந்தாட்டம், கரபந்தாட்டம் எனச் சிறியதொரு வடத்தினுள் வாழும் சமூகங்கள் இலங்கையிலுண்டு. பாசையூர் பெயர்ப்பலகைகளுடன் சில காட்சிகள் இப்படத்தில் வருகின்றன. எழுபதுகளின் போராட்டட்டங்களாலோ, எண்பதுகளின் வெளிநாட்டுப்பயணங்களாலோ அல்லது இரண்டாயிரங்களின் ‘புலம் பெயர்’ முதலீடுகளாலோ அசைக்க முடியாமல் நூறு வருடங்களாக frozen time இல் அதே கிராமங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் சில இப்படத்தின் களங்கள். மலையாளப் படங்களில் காட்டப்படும் தேனீர்க்கடை, வாழைக்குலை, அரிதாரம் பூசாத பாத்திரங்கள் எனக்கு அடிக்கடி என்னூரை ஞாபகப்படுத்துவதுண்டு. அந்த வகையான nostalgia வை மீண்டும் எனக்குத் தந்த முதல் ஈழத்தமிழ்ப் படம் இதுவெனவே நான் சொல்வேன். யாழ்ப்பாணத்து நகர வீதிகளில் கதறித்திரியும் மோட்டர் சைக்கிள்களின் காலத்தில் ஆலமரத்தின் கீழமர்ந்து சீட்டாடுவதும் அருகே ரலி சைக்கிள்கள் காத்திருப்பதையும், கடற்கரையில் தோணிகள் மெதுவாக தமக்குள் ஸ்பரிசங்களை ஏற்படுத்திக்கொள்வதையும் பார்க்க பொறாமையாக இருக்கிறது.
கதை மாந்தர்களில் தயாரிப்பாளர் பாஸ்கரனின் மகன் கதாநாயகனாக வருகிறார். மறைந்த பாடகர் சாந்தனின் மகன் கோகுலன் இடையில் வந்துபோகிறார். இவர்களைத் தவிர ஏனையோர் எனக்குப் பரிச்சயமில்லாத முகங்கள். இவர்களில் ஊர்ப் பெரியவராக வரும் ஐயா மிகவும் அனுபவஸ்தாரன நடிகராக இருக்க வேண்டும் அல்லது பிறவி நடிகராக இருக்கவேண்டும். கண்களும், புருவங்களும் மட்டுமே நடிக்கின்றன. கதாநநாயகி? கதாநாயகனின் மூத்த சகோதரி பாத்திரத்தில் வந்திருக்கலாம். கமரா சதிசெய்திருக்க வாய்ப்புண்டு. இறுதியில் அழுது குளறும் காட்சி மெச்சத்தக்கது. கதாநாயகனின் தோழர் நல்ல உருப்படி. ‘வால் கட்டையைக்’ கழற்றும் வயதல்ல அவருக்கு. நகைச்சுவைகெந புகுத்தப்பட்ட பாத்திரம் போலிருக்கிறது. ‘காக்கா’ பாத்திரம் நடிப்பு கொஞ்சம் ஓவர். இயக்குனர் கடிவாளத்தைக் கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்திருக்கலாம். இறுதிக்கட்டத்தில் வெந்து தணிந்துவிட்டார். இவர் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். வில்லனாக வருபவரும் இதே வகையறாதான். ‘முக்காப்லா’ பாத்திரமும் நம்பிக்கை தருவதொன்று. எல்லோரையும்விட எனது 5* choice பழக்கடைக்காரியாக வரும் பாத்திரம். Casting இல் இயக்குனரின் வெற்றி இதுதான். நடிப்பா அது? கதாநாயகன்? பொருத்தம் இருக்கிறது. நவரசங்களுக்கும் பழக இன்னும் கொஞ்ச அனுபவம் தேவை. சிங்கள பொலிஸ் அதிகாரிகள இடைக்கிடை ‘பாஷைக் குதறலுக்கு’ உள்ளாகிறார்கள். ஆனால் முகங்கள் அசலாலவே தெரிகின்றன. Again, casting is superb.
நகைச்சுவை முயற்சி வீண்போகவில்லை. வெற்றியென்று சொல்ல மாட்டேன். குத்துப்பாட்டு? அவசியாமான, தவிர்க்கமுடியாத இடைச்செருகல். தமிழ்நாட்டின் பாதிப்பு. பல பாத்திரங்கள் தம்மை நடிகர் sorry, முதல்வர், விஜயாகச் சித்தரிக்க முயன்றதாக நண்பர் மூர்த்தி கூறினார். இருக்கலாம். என்னை ஆகர்ஷிக்காத ஒருவர்
நடிப்பு பற்றி பிரித்தானிய நடிகர் மைக்கேல் கெயின் ஒரு விடயம் சொல்வார். “மதுபோதையில் நடிப்பவன் தனக்கு போதை என்று காட்ட முயலக்கூடாது. மாறாக, தனக்கு போதையில்லை என நிதானமாக நிற்க முயற்சிக்க முயல்வதே நடிப்பு” என. நடிப்பில் பலவிதம். என்னைப்பொறுத்தவரை ஒரு நடிகர் தனது நடிப்பால் அவனிருக்கும் சூழல், அவனது மொழியாழ்மை, இசை போன்ற இன்னோரன்ன விடயங்களிலிருந்து பார்வையாளன் ஒருவனது கவனத்தை மாற்றிவிடுவானேயாகில் அவனது நடிப்பு மெச்சும் ரகத்தினது என்பதை உறுதியாகச் சொல்வேன். இந்தப்படத்தில் அதைச் சாதித்தது அந்த பழக்கடைக்காரி. பதட்டமெதுவுமில்லாது இயக்குனரின் எதிர்ப்பர்ப்பை அப்படியே ஒப்புவித்திருக்கிறார்.
மொத்தத்தில், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான ஒரு சமூகத்தின் பின்புலத்தை காட்சிகளோ அல்லது மொழிவழக்கோ சிதையாமல் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் கதையைச் சொல்லி வெற்றிபெற்றிருக்கிறது இப்படம். பல வழிகளில் இது முன்னோடி.
