போதி மரத்துக் கோதாபய, அல்லது புதிய ஏமாற்று வித்தை?

சிவதாசன்

கொழும்பிலிருந்து சமீபத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் புதிர் நிறைந்தனவாகவுள்ளன. உலகத்துக்கே புதிய நீதி, நியமங்களைப் போதித்து வரும் கோவிட் யுகத்தில் யார் எப்படி எப்போது ஞானம் பெறுவார்கள் அல்லது புதிய திரிபுகளாக மாறிக்கொள்வார்கள் என்பதை ஊகிக்க முடியாமலிருக்கிறது.

ஜூலை 21 இல் ஜனாதிபதி கோதாபய செய்திருந்த ருவீட் செய்தி பலரது ஆச்சரியத்துக்கும் நகைப்புக்கும் இடமாகியிருந்தது. சொல்வதைச் செய்வதில் சிங்கள அரசியல்வாதிகள் பொதுவாக விண்ணர்களாக இருப்பதில்லை. ஆனால் கோதாபய இன்னும் இராணுவ வீரர் என்ற உருவிலிருந்து அரசியல்வாதியாக முற்றாக மாறவில்லை என்பதனால் சிலவேளைகளில் அவர் சொல்வதைச் செய்துவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கை இன்னும் சிலர் மனதில் இருக்கிறது. அவர்களில் பல தமிழர்களும் இருக்கிறார்கள்.

ஜூலை 21 இல் ஜனாதிபதி செய்த ருவீட்டில் இருக்கும் செய்தி இதுதான்:

“We are committed to work with the @UN to ensure accountability & human dev. to achieve lasting peace & reconciliation. We are dedicated to resolving the issues within the democratic & legal frame to ensure justice & reconciliation by implementing necessary institutional reforms”.

இதை அவர் செய்தாரா அல்லது அவரைக் கையாள்பவர்கள் செய்தார்களா என்பது தெரியாது. இருப்பினும், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து பல மூன்றுகால் முயல்களைக் கொண்டு திரிகிறார். எனவே இதையும் இன்னுமொரு முயலாக வைத்துக்கொண்டுவிடுவாரோ என்ற நப்பாசையும் எழாமலில்லை.

செப்டம்பர் 21 இல் ஐ.நா. மனித உரிமைகள் சபை கூடும்போது, ஆணையாளர் மிஷெல் பக்கெலெ மேலும் புதிய பிரம்புகளுடன் வந்துவிடப்போகிறாரோ என்பதற்காக அவர் வழக்கமான ராஜபக்ச அரசியல் செய்கிறார் எனச் சிலர் எண்ணலாம். ஐ.நா. வின் தலையில் இலகுவாக முக்காடு போட்டுத் தப்பிவிடலாம் என்பது அண்ணன் ராஜபக்ச கற்றுக்கொடுத்த வித்தை. ஆனால் இந்த தடவை அவர் அந்த வித்தையைக் கையாள்வார் என்பதில் எநக்குச் சந்தேகமிருக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு இனப்பிரச்சினையே மிக முக்கியமான தடைக்கல் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் போல எனது உள்ளுணர்வு சொல்கிறது.

வழக்கமான ராஜபக்ச அரசியல், நாட்டை எதிர்பார்த்த மாதிரி சொர்க்கபுரியாக மாற்றவில்லை ஆனால் அரசியல்வாதிகள் ஊதிப்பருத்து வருகிறார்கள் என்பது அவரைச் சங்கடப்படுத்தும் ஒன்றாக இருக்கலாம். எல்லா ராஜபக்சக்களிலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொள்பவர் கோதாபய என்றொரு கருத்தும் உண்டு.

நாட்டில் நடக்கும் காரியங்களைப் பார்க்கும்போது ஜனாதிபதி இன்னும் தனது இராணுவ மனநிலையிலிருந்து வெளிவரவில்லை எனவே படுகிறது. இதுவரை காலமும் அவர் delegation of duties என்ற கடமைகளைப் பகிர்ந்தளித்துவிட்டு அவற்றை உரியவர்கள் முறையாக நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கும் ஒருவராக இருந்தார் என நான் எண்ணுகிறேன். வழக்கமான ‘அரசியல்’ ஜெனெரல்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நாளாந்த ஆட்சியில் தலைப்போடுவதில்லை என்ற மனநிலையோடு இருந்திருக்கலாம். இரசாயன உர இறக்குமதி விடயத்தில் மட்டும் அவரது நேரடி தலையீடு இருந்தது. அதற்குக் காரணம் சிறுநீரக வியாதிகளினால் பலலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதும் அதற்கு இரசயான உரம் ஒரு காரணமென்பதும் அவரது நியாயம். அவர் பிடித்துவைத்திருக்கும் முயல்களில் இதுவுமொன்று.

அவரதி இந்த hands off அணுகுமுறையால் தான் அரசாங்கத்தில் ஏகப்பட்ட உளறுவாயர்கள் மகாவித்வான்களாக அலைகிறார்கள். அரசாங்கம் ஒரு காட்டுத் தர்பாராக மாறுவதற்கு அவரின் இந்த அணுகுமுறையே காரணம். ஒருபக்கத்தில் வியத்மக என்னும் குழு (சிங்கள தலிபான்கள்) மற்றப் பக்கத்தில் சுருட்டு மன்னர்கள், இடையில் கையெழுத்து வைக்கத் தெரியாத ஆனால் கையுயர்த்த மட்டும் தெரிந்த மூடர் கூட்டம். இவையெல்லாம் சேர்ந்து கோதாபயவை போதிமரத்தின்கீழ் கொண்டுபோய் விட்டிருக்கிறது. அல்லது அவரை பசில் இழுத்துக்கொண்டுபோய் போதி மரத்துக்குக் கீழ் வைத்து உபதேசம் செய்திருக்கிறார். இல்லை, அவர் ஐ.நா.வுக்கு ‘சூ’ காட்ட திரிபடைந்திருக்கிறார் என நம்புபவர்கள் அந்த நம்பிக்கையையும் இப்போது விட்டுவிடத் தேவையில்லை.

கோதாவின் ருவீட்டுக்குப் பிறகு வேறு சில காரியங்கள்ம் நடைபெற்றுள்ளன. அவையும் கோதா பெற்ற ஞானம் பற்றிய எனது சந்தேகத்துக்குக் காரணம்.

முதலாவது: பசில் ராஜபக்சவின் வருகை. மஹிந்த ஒரு compulsive lier மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பேசிவிட்டு அடுத்த கணம் மறந்துவிடும் ஒரு பக்கா அரசியல்வாதி. பசில் ஒரு ஊழல் பேர்வழி என முன்னாள் அமெரிக்க ராஜதந்திரி றொப்ர்ட் பிளேக் அநுப்பிய கேபிள் செய்திகளில் கூறப்பட்டிருந்தாலும் அவர் தனது ஊழலுக்கும் கணக்கு வைத்திருக்கும் வியாபாரி. அவரது ஊழல் ஒரு வகையில் Americanized corruption; அண்ணனின் ஆட்சியில் ஒரு lobbyist ஆகவிருந்தார். இப்போது அவரிடம் ஆட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. திருடனிடம் கஜானாவின் சாவியைக் கொடுத்தது போல.

மஹிந்தவைப் போலவல்லாது, பசில் பின்னணியிலிருந்து இயக்குபவர். அவர் ‘ஆட்சியேற்றதும் ‘ பின்னணியில் பல விடயங்கள் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான ஒன்று ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் ‘வியத்மக’ குழுவிடமிருந்து அவரை அன்னியப்படுத்தி வருவது. அது இன்னும் நிறைவு பெறவில்லை. அதன் முதல் படிதான் அமைச்சர் சரத் வீரசேகரவிடமிருந்து சில பொறுப்புக்களைப் பறித்தது. குறிப்பாக ஊர்காவல் படையின் கட்டுப்பாடு. இனங்களுக்கிடையேயான ந்ல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் பல மோசமான நடவடிக்கைகளின் பின்னால் இருப்பது அமைச்சர் வீரசேகரா. அதே போல அமைச்சர் வீரவன்ச, கம்மன்பில போன்றோரையும் அவரவர் இடங்களில் இருத்தியமைக்கு பசில் தான் பொறுப்பு. சிங்கள தேசிய சக்திகளைத் தேர்தலில் வெற்றிகரமாகப் பாவித்த பசில் இப்போது அவர்களை நைசாகக் கழற்றிவிட்டு அமெரிக்கன் ஸ்டைல் ஆட்சியைக் கொண்டுவருகிறார் என நான் எண்ணுகிறேன்.

இறுதிப் போரின்போது அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான அமெரிக்காவின் சமரச முயற்சியில் பசில் ஒரு முக்கிய பங்காளி. தமிழர்களுக்கான நியாயமான தீர்வைக் கொடுப்பதற்கு அவர் இணக்கமானவர் எனவே கூறப்படுகிறது.

இப்படி இருக்க, கோதாபயவின் இரண்டாவது சமிக்ஞை – பா.உ. மனோ கணேசனின் ருவீட் செய்தி உண்மையானால் – நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக பா.உ. சுமந்திரனை பசிலோடு பேசும்படி ஜனாதிபதி கூறிய விடயம். 2019 இல் ஆட்சி மாற்றம் வந்ததிலிருந்து தமித் தேசியக் கூட்டமைப்பினர் கோதாபயவோடு பேசுவதை விரும்பியிருந்தனர். எதிர்க் கட்சியில் இருந்தாலும் சஜித் பிரேமதாசாயுடனோ அல்லது அவரது கூட்டணியுடனோ அதிக நெருக்கத்தை அவர்கள் பேணவில்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள தேசியவாத சக்திகளை எதிர்த்து தமிழர்களுக்கு நியாயமான தீர்வைக் கொடுக்க அவர்களால் முடியாது என அவர்கள் நிநத்திருக்கலாம். கோதாபய நினைத்தால் செய்வார் என்ற நம்பிக்கை அவர்களிடம் இப்போதும் இருக்கலாம். என்னவோ, கூட்டமைப்பின் தலைவர்கள் கோதாபயவைச் சந்திப்பதாக முன்னர் செய்தி வந்தது. இப்போது ‘தம்பி பசிலைச் சந்தியுங்கள்’ என கோதாபய சொன்னதாக மனோ கணேசன் தனது ருவீட்டில் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது ஆச்சரியமான சம்பவம், கோதாபய சமீபத்தில் சிவில்சமூக உறுப்பினர்களைச் சந்தித்தமை. நாட்டில் நடைபெற்றுவரும் பலவிதமான ஆர்ப்பாட்டங்கள், மக்களெதிர்ப்புகள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிவதற்கு ஜனாதிபதி முதன் முதலாக பற்சமூக மக்களையும் உள்ளடக்கிய ஒரு குழுவைச் சந்த்தித்திப் பேசியிருக்கிறார்.

மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 47 வது கூட்டத் தொடரில் இலங்கை மீது முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளில் ஒன்று சிவில் சமூக அமைப்புகளை மிரட்டுவது என்பது. எனவே 48 வது கூட்டத் தொடருக்கு முன்னர் அவர்களை அழைத்துப் பேசுவது ஒரு அவசியமான ராஜதந்திர நடவடிக்கை என வேண்டுமானால் வைத்துக்கொள்வோம். ஆனால் 47 வது கூட்டத் தொடரின் போதும், அதற்கு முதலும் பிறகும், வெளிவிவகார அமைச்சர் முதல் ஐ.நா.பிரதிநிதி வரையில் நடந்துகொண்ட முறைகளும், விடுத்த அறிக்கைகளும் கொஞ்சமும் புத்திசாலித்தனமாக இருக்கவில்லை என கொழும்பு பத்திரிகைகள் பல அப்போது விமர்சித்திருந்தன. 2009ல் நிறைவேற்றப்பட்ட் தீர்மானம் 11/1 இன் பிரகாரம், மகிந்த ராஜபக்ச செயலாளர் நாயகம் பான்கி-மூனுக்கு அளித்த வாக்குறுதிகளே இன்று வரையிலான மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கு அத்திவாரம். எனவே எல்லாவற்றையும் ‘நல்லாட்சி’ அரசின்மேல் தூக்கிப் போட்டுவிட்டுத் தப்பியோடிவிட முடியாது என்ற ஞானம் ஜனாதிபதிக்கு இப்போது வந்திருக்கிறது. எனவே 48 வது கூட்டத் தொடருக்கு முன்னர், வீரப்பிரதாப அறிக்கைகளை விட்டுவிட்டு கொஞ்சம் சமரச மனப்பான்மையுடன் விடயங்கள் அணுகப்படுகின்றனவா என நான் சந்தேகிக்கிறேன்.

48 வது கூட்டத் தொடரில் எப்படியான அதிர்ச்சி இலங்கையைக் காத்திருக்கிறது எனத் தெரியாவிட்டாலும், ஆணையாளர் மிஷேல் பக்கெலெ கத்தியைத் தீட்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பூகோள அரசியல் எப்போதும் எதிர்பாராத சூழலில் தனது எதிர்பார்த்த இயல்புகளைக் காட்டி விடுவதுண்டு. சீனாவுடனான அரசியல், வர்த்தகப் போட்டிகளில் இலங்கை இன்னமும் சுயம்வர மணப்பெண்ணாக இருப்பது அதற்கு இலாபமாகவே இருக்கிறது. குறிப்பாக மனித உரிமைகள் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் அமெரிக்கா திருகோணமலையைக் கொடுத்தவுடன் பேசாமல் இருந்துவிடும் என்பதோடல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஆவன செய்துவிடவும் வாய்ப்புண்டு. ‘அமெரிக்கா-முதல்’ வாதத்தில் பைடனும், ட்றம்பும் அண்ணன் தம்பியேதான். 2007ல், ‘நீலிக் கண்ணீர் புகழ்’ ஒபாமா பாதுகாப்பு அமைச்சர் கோதாபயவுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே 2009 இல் விடுதலைப் புலிகளையும் தமிழரையும் அழிக்க அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய லைசென்ஸ். பைடன் அப்போது உதவி ஜனாதிபதி. எனவே வழக்கம் போல அமெரிக்கா இந்த முறையும் எதையும் புடுங்கப் போவதில்லை என்பது உறுதி.

என்ன இருந்தாலும் கோதாபயவின் கைகளில் இருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகளில் ஜி.எஸ்.பி. பிளஸ் ஒன்று மட்டும்தான். இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார பிர்ச்சினைக்கு நீண்டகாலத் தீர்வை வழங்கக்கூடியது இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம் மட்டுமே என ஜனாதிபதி இப்போது உணர்ந்திருப்பாரானால் – அதற்கு எது அல்லது யார் காரணமாகவிருப்பினும் – அதைச் சாதிப்பதற்கான சூழல், கோவிட்டின் புண்ணியத்தால், இப்போது கனிந்திருக்கிறது. சிவில் சமூகத் தலைவர்களுடனான ஜநாதிபதியின் சந்திப்பு, இதந் ஆரம்பமாகவும், மிக முக்கியமான ஒரு நிகழ்வாகவும் நான் பார்க்கிறேன்.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுடன் இணக்கம் காண்பதற்கான இலங்கையர்களின் கூட்டு (Sri Lankan Collective for Consensus with President Gotabaya Rajapaksa) எனற குடையின்கீழ், சமீபத்தில் சிலர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார்கள். ஜனாதிபதியோடு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தரா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே ஆகியோரும் இச்ச்ந்திப்பில் கலந்துகொண்டார்கள். சிவில் சமூக உறுப்பிநர்கள் குழுவில், வண.களுபஹான பியரட்ண, வண. அசிரி பி.பெரேரா, ஹில்மி அஹமட், விசாக தர்மதாச, றோஹன ஹெட்டியாராச்சி, வர்ணகுலசிங்கம் கமலதாஸ், பேரா. ரி.ஜெயசிங்கம், டாக்டர் தயானி பணாகொட, டாக்டர் ஜோ வில்லியம் மற்றும் சஞ்சீவ விமலகுணரத்ன ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இச் சந்திப்பைத் தொடர்ந்து சிவில் சமூக உறுப்பினர்கள் சார்பில் வெளிவிடப்பட்ட அறிக்கையில், சிவில் சமூக உறுப்பினர்களால் அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட குறைபாடுகளை ஜனாதிபதி செவிமடுத்து பல சாதகமான கருத்துக்களைத் தெரிவித்தார் எனவும், நல்லிணக்கம் தொடர்பாக தான் விடுத்த ருவிட்டர் செய்தியில் கூறப்பட்டதை நிஜமாக்குவேன் என அவர் வாக்குறுதி அளித்திருந்தார் எனவும், நல்லிணக்க விவகாரத்த்தில் தம்மோடு இணைந்து பணியாற்ற அவர் தயாராக உள்ளார் எனத் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, வடக்கிலும் இதர பகுதிகளிலும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டிருக்கும் காணிகள் தொடர்பாக ஒரு நடைமுறைத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அங்கு வாழும் சமூகங்களும் தாம் இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன்அமைதியோடும் சமாதானத்தோடும் வாழவேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் என அவ்வறிக்கை தெரிவிக்கிறது. மக்களது அரசியல் பேதங்களைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கத் தான் தயாராக இருப்பதாகவும், அடுத்த ஒரு வருடத்தில் விடுவிக்கக்கூடிய அனைத்துக் காணிகளையும் விடுவிக்கவும், முகாம்களினுள் இருக்கும் காணிகளில் உரியவர்கள் தமது விவசாயத்தை மேற்கொல்ள வழிசெய்வதாகவும், இராணுவத்துக்குத் தேவையான நிலங்களை முறையாக வாங்குவதற்கு தயாராகவுள்ளதாகவும், இறுதியாக, அதிகாரப் பகிர்வு தொடர்பாக, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு தான் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்துடன் பேசியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

“எங்களுக்கு வெளிநாடுகளால் திணிக்கப்படும் தீர்வு தேவையில்லை, எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்களே உள்ளக பொறிமுறையொன்றை உருவாக்குவோம்” என்ற முயலை அவர் இந்நமும் கொண்டு திரிவாராகில் அவர் மஹிந்த ராஜபக்சாவாகத் திரிபடைவதற்கு முன் தமிழருக்கு ஒரு சாதகமான பாதை திறக்கப்படச் சாத்தியமுண்டு. இலங்கையின் முன்னேற்றத்துக்குத் தடைக்கல்லாக இருப்பது இனப்பிரச்சினை மட்டுமே என்ற ஞானத்தை அவர் பெறுவதற்கு அமெரிக்காவோ, ஐ.நா.வோ, ஐரோப்பாவோ அல்ல நானே தான் காரணம் எனக் கோவிட் நிரூபித்திருக்கிறது என நம்புவதற்கு எனக்கு ஆசையாகவிருக்கிறது.