Sri Lanka

பொலிஸ் அதிகாரமற்ற 13 ஆவது திருத்தத்தை கூட்டமைப்பு முழுமையாக நிராகரித்தது

ஜூலை 18 அன்று வடக்கு – கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து ஜனாதிபதி முன்வைத்திருந்த பொலிஸ் அதிகாரமற்ற 13 ஆவது திருத்தத்தை த.தே.கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துவிட்டதாக கூடமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தியுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கம் என்ற பெயரில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட தீர்வுப்பொதி இன்னுமொரு வெற்று வாக்குறுதி என சென்னையிலிருந்து வெளிவரும் ‘தி இந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“அரசியல் யாப்பில் ஏற்கெனவே இருக்கும் அம்சங்களை நடைமுறைப்படுத்த அரசு தயங்குமானால் அங்கு உண்மையான அரசியல் நோக்கம் இருக்கவில்லை என்பதே உண்மை” என திரு சுமந்திரன் ‘தி இந்து’ பத்திரிகைக்குத் தெரிவித்தார்..

1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கரணமாக இலங்கை அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பொலிஸ், காணி அதிகாரங்களுடன் கூடிய முழுமையான அதிகாரப் பகிர்வு 9 மாகாணங்களுக்கும் சமமாக வழங்கப்பட்டது. இருப்பினும் 1987 க்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள் இத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாது இழுத்தடிப்புச் செய்துவந்தன.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டுமென்பதே இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடாக இருந்து வருகிறது. இதே வேளை நாளை (21) புதுடெல்ஹி செல்லவிருக்கும் இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜூலை 18 அன்று தமிழ்ப் பிரதிநிதிகளை அழைத்து “பொலிஸ் அதிகாரமற்ற 13 ஆவது திருத்தத்தை மட்டுமே எம்மால் இப்போது நடைமுறைப்படுத்த முடியும். இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் உங்களைப் பொறுத்தது” எனக் கூறியிருந்தார். இச்சந்திப்பைத் தொடர்ந்து தாம் ஜனாதிபதியின் இந்த முன்மொழிவை முற்றாக நிராகரிப்பதாக த.தே.கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூலை 18 நடைபெற்ற சந்திப்பின்போது அரசினால் தயாரிக்கப்பட்ட 16 பக்கங்களுடனான ஆவணமொன்று தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது. இதில் பெரும்பாலும் நல்லிணக்க முயற்சிகள் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேச அபிவிருத்தி பற்றியே குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் பொலிஸ் அதிகாரமற்ற அதிகாரப் பரவலாக்கம் பற்றி வெகு சொற்பமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது எனவும் கூறப்படுகிறது.

இதே வேளை ஜூலை 17 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் இலங்கை அரசியல் தலைவர்களால் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது இந்தியா மற்றும் சர்வதேசங்களுக்கு தொடர்ச்சியாக கொடுத்துவந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தான் இன்றைய ஆபத்தன நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது எனவும் இவ்விடயத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவைச் சந்திக்கும்போது காலம் தாழ்த்தாது தமிழ்மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கும்படி வற்புறுத்தும்படியும் பிரதமர் மோடியைக் கேட்டிருக்கிறார்.

வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் தனித் தனியாக பிரதமர் மோடிக்குக் கடிதங்களை அனுப்பியுள்ளனர். அதே வேளை ஒற்றையாட்சியின் கீழான 13 ஆவது திருத்தம் போதாது எனவும் சமஷ்டியை அடிப்படையாகக்கொண்ட அரசியல் தீர்வையே பிரதம்ர் மோடி வற்புறுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி பிரதமர் மோடியைக் கேட்டிருக்கிறது.