World

பொலிவியா: சதியின் பின்னணி

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் ஜூன் 26, 2024 அன்று ஆட்சி மாற்றத்திற்கான இராணுவ சதியொன்று முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டிருக்கிறது. ஆபிரிக்காவைப் போல இப்பிரதேசமும் இராணுவச் சதி முயற்சிகளுக்குப் பெயர் போனது. இங்குள்ள வளங்களைச் சுரண்டும் நோக்கத்துடன் அல்லது தமக்குச் சார்பான ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்குடன் மேற்குநாடுகளின் தூண்டுதலின்பால் உள்ளூர் இராணுவ அதிகாரிகளாலேயே பெரும்பாலான சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாரம் பொலிவியாவில் நடைபெற்ற சதி முயற்சியின் பின்னாலும் அரசியற் காரணமே இருக்கிறததெனக் கூறுகிறார்கள்.

பொலிவியாவின் வருமானம் இயற்கை வாயு, துத்தநாகம் போன்ற கனிம ஏற்றுமதிகளால் கிடைக்கிறது. சென்ற வருடம் அதன் பொருளாதார வளர்ச்சி 4.9%; பணவீக்கம் 0.7%. ஒப்பீட்டளவில் இப்பிராந்திய நாடுகளில் பலவற்றைப் போல பொலிவியாவும் பொறாமைப்படும் விதத்தில் வளர்ச்சி கண்டுவரும் நாடு. இதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அதன் ஜனாதிபதி லூயி ஆர்சே.

பொலிவிய சோசலிச இயக்கத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான லூச்சோ என அழைக்கப்படும் லூயி அல்பெர்ட்டோ ஆர்செ கற்றகோரா வங்கியாளர் தொழிலிருந்து வந்த ஒரு பொருளாதார நிபுணர். நாட்டின் 67 ஆவது ஜனாதிபதியாக இருக்கும் இவர் 2020 இல் ஆட்சிக்கு வந்தார். 2006, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் இருந்து நிதி அமைச்சர், பொருளாதார அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்து இப்போது ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.

ஜூன் 26 அன்று முயற்சிக்கப்பட்ட சதியின் பின்னால் அந்நாட்டின் இராணுவத்தைச் சேர்ந்த ஜெனரல் ஹுவான் ஹோசே சூனீகா என்பவரே இருப்பதாகக் கூறப்படுகிறது. அன்றய தினம் சுணீகா தலைமையில் படைகள் நாட்டின் தலைநகர் லா பாஸிலிருக்கும் மத்திய சதுக்கத்திலுள்ள முறீயோ பிளாசாவைக் கைப்பற்றி அங்கிருந்து ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர் எனவும் அவ்வேளை ஜனாதிபதி ஆர்சே மாளிகயில் இருந்தார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக இச்சதிமுயற்சி வெற்றியளிக்கவில்லை.

ரஸ்ய அதிபர் புட்டின் உட்படப் பல உலகநாடுகளின் தலைவர்களும் இச்சதி முயற்சியைக் கண்டித்திருக்கின்றனர். “பொலிவியா உட்பட இதர நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் நாசகாரத் தலையீடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். லத்தீன் அமெரிக்க பிரதேசத்தின் நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் இப்படியான நடவடிக்கைகள் எத்துணை பாதகத்தைச் செய்தன என்பது நினைவில் இருக்கவேண்டும்” என ரஸ்ய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையொன்று கூறுவதிலிருந்து இச்சதியின் மூலம் எங்கிருக்கிறது என்பதை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம்.

மீளுருவாக்கம் பெற்றுவரும் இரு துருவ / பல்துருவ ஒழுங்கில் பல தென்னமெரிக்க நாடுகள் தம்மை ரஸ்யா சார்ந்த ‘பிரிக்ஸ்+’ கூட்டமைப்புடன் இணைத்து வருவது அமெரிக்க அணிக்கு தலையிடியைத் தந்து வரும் விடயமாகும். பிரேசில், கொலம்பியா, சிலி வரிசையில் பொலிவியாவும் பிரிக்ஸுடன் இணைவதற்கு சமீபத்தில் விருப்பம் தெரிவித்திருந்தது. இதே வேளை இஸ்ரேலின் பரந்த, தூரநோக்க திட்டங்களில் ஒன்றாக G7 மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் தமக்கு ஆதரவான அல்லது தமது இனம் சார்ந்தவர்களை ஆட்சியில் இருத்துவதற்கான முயற்சிகளும் வெற்றி பெற்று வருவதால் இச்சதியின் பின்னணியில் அமெரிக்க உடன்பாட்டுடன் இஸ்ரேலும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆர்ஜென்ரீனாவின் ஜனாதிபதி ஹார்வியே மிலே, மெக்சிக்கோவின் ஜனாதிபதி குளோடியா ஷைன்போம் ஆகியோரும் இவ்வரிசையில் வருகிறார்கள். தென்னமெரிக்க பிராந்தியத்தில் ஜனநாயக வழிகளில் தமக்கு சாதகமான ஆட்சி வராவிட்டால் இராணுவ சதிகளை உருவாக்குவதற்கென பயிற்றப்பட்ட ஐ.டி.எஃப். (முன்னாள் ?) நிபுணர்கள் பலர் தென்னமெரிக்காவில் நீண்டகாலமாகப் பணிபுரிந்து வருகின்றனர். கோஸ்ரா றீகா, குவாட்டமாலா, எல் சல்வடோர் போன்ற நாடுகளில் இவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அளித்து வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. பாலஸ்தீனியர்களுக்கு எதிராக காசாவில் நடந்துவரும் பிணக்கு தொடர்பாக பொலிவியா பாலஸ்தீன ஆதரவை வெளிப்படையாக எடுத்துக்கொண்டதுடன் இஸ்ரேலுக்கான தனது தூதுவரை மீள அழைத்தும் கொண்டது. இக்காரணங்களுக்காக இச்சதியின் பின்னணியில் பிரிக்ஸ் எதிர்ப்பு / இஸ்ரேல் ஆதரவு மூலங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கலாம்.

2019 இல் பொலிவியாவில் நடைபெற்ற சதியின் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொறாலெஸின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு செனட்டர் ஹீனைன் அனே ஆட்சியில் அமர்த்தப்பட்டிருந்தார். இதற்கு எதிராக வெடித்த மக்கள் புரட்சியின் காரணமாகவே ஆர்சே ஆட்சிக்கு வந்தார். இம்மக்கள் புரட்சியை மூர்க்கத்தனமாக அடக்க முற்பட்ட காரணத்தால் அனே தற்போது சிறைவாசம் அனுபவிக்கிறார்.

ஜூன் 26 இல் நடைபெற்ற சதி முயற்சியை ஐரோப்பிய ஒன்றியம் உட்படப் பல உலக நாடுகள் கண்டித்திருக்கின்றன. (Image Credit: Al Jazeera)