Columnsகிருஷ்ணானந்தா

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை

யாரோ ஒருவர் செருமிக் கேட்டது. தேர்தல் கூட்டங்களுக்குப் போனதால அடைச்ச காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கத் தொடங்கியிருந்தன. திரும்பிப் பார்த்தால் வடிவேலர். சிவப்புச் சேட்டும் தொப்பியும் அணிந்திருந்தார். “என்ன அண்ணை இப்பத்தான் எலக்சன் முடிஞ்சது அதுக்குள்ள கட்சி மாறீட்டிங்கள் போல” என்றேன்.

“இஞ்ச பார், நான் எதுக்கும் தயார்” என்றபடியே ஒவ்வொரு பைகளுக்குள்ளுமிருந்து ஒவ்வொன்றாக எடுத்தார். மஞ்சள், பச்சை நிறங்களில் சால்வை. “இப்ப நான் எதுக்கும் ரெடியாத்தான் திரியிறது. இப்ப கழுத்தில மஞ்சள் சால்வையைப் போட்டா நான் ‘சங்கு’. பச்சையைப் போட்டா சஜித். இஞ்ச பார் இந்தப் பையுக்குள்ள முட்டை, செருப்பு” மீண்டும் செருமினார். இன்னும் ஏதும் கதைச்சால் அடிவிழும் போல இருந்தது.


“அது சரி, நவம்பர் பதினாலு சந்தியால திரும்பிட்டுது. ஆருக்கு வோட் போடுறதா தீர்மானம்?”

“ஆருக்கு நாங்க வோட்டுப் போடவேணுமெண்டு நான் என்ர மனிசியக் கேட்டன். அதுக்கு அவள் ‘நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன’ எண்டு என்ன நாய் எண்டெல்லோ சொல்லிப் போட்டாள். இப்பவெல்லாம் முந்தினமாதிரி கையைக் கால நீட்டேலாது தானே. விசரில வெளிக்கிட்டிட்டன்”

“உங்கட மனிசி நல்லா அவதானிக்கிறா போல. 500 வேட்பாளரத் திட்டப்போறா எண்டு நினைச்சா அவ பொதுமக்களை எல்லோ நாய்களெண்டு நக்கலடிக்கிறா. யோசிச்சுப் பாத்தா அவ சொல்லிறதிலயும் நியாயம் இருக்குத் தான். 30 வருசப் போர் இந்தச் சனத்தின்ர மண்டையளைக் கலக்கிப் போட்டுது போல”

“ஏன் அப்பிடிச் சொல்லிற?”

“இஞ்ச பாருங்கோ வடிவேலர். ஜனாதிபதி தேர்தலில ரெலிபோன் எண்டு நினைச்சு கல்குலேட்டருக்கு 5,000 வோட்டுகளை போட்டதுகள் தான் எங்கட சனங்கள். இத்தனைக்கும் அந்த சிங்கள வேட்பாளர் யாழ்ப்பாணத்திலயே கால் வைக்கேல்ல. இப்ப எலக்சனில நிக்கிறவங்களுக்கு இது நல்லாத் தெரியும். அதாலதான் போனவன் வந்தவனெல்லாம் எலக்சனில நிக்கிறான். செக்கென்ன சிவலிங்கமென்ன அதுகளுக்கு. நக்கு நக்குத்தான். பொலிகண்டி முதல் பொத்துவில் வரை இதுதான் நிலைமை”

“அதுதான் ஜனநாயகம்” வடிவேலர் கொலரைத் தூக்கினார்.

“ஜனநாயகம் வெளிநாட்டு ஆக்களுக்குத் தான் வடிவேலர். தேர்தல் சின்னத்தை ஏன் இன்னும் பாவிக்கிறாங்களெண்டு நினைக்கிறீங்க? வேட்பாளர்களின்ர பெயர்களை சனத்துக்கு வாசிக்கத் தெரியாதெண்டுதானே சின்னங்களைக் குடுக்கிறாங்க. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சா நாங்க இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டம்”

“சரி அதை விடு, யாழ்ப்பாணத்தில ஆரு வருவினமெண்டு நீ நினைக்கிற?”

“உள்நாட்டு, வெளிநாட்டு கள்ளக் காசுகள் வந்து கொட்டுண்டுதாம் எண்டு கேள்வி. 30 வருசத்துக்கு முன்னம் கொங்கிரஸ் காரர் சாராயப் போத்தில் குடுத்துப் பாத்தும் சனம் வீட்டை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டது. 1956 கலவரத்தில பாதிக்கப்பட்ட தமிழ் அகதியளைத் தன்ர கப்பலில கொண்டந்து இறக்கின அல்பிரட் தம்பிஐயாவையே சனம் தோற்கடிச்சது. இப்ப யாழ்ப்பாணம் தமிழ்நாடாய்ப் போச்சு. காசை வாங்கிக்கொண்டு கதிரையளை நிறப்புறதுக்கு சனம் ஆலாய்ப் பறக்குது. வெளிநாட்டுக் காசுதான் இதுக்குக் காரணம்”

“ஓமடா கிருசு. டொக்ரர் எண்டு உலவுகிற ஒரு காரியப் பைத்தியமும் எலெக்சனில நிக்குது. அதுக்கு அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து எண்டு வெளிநாடுகளில இருந்து காசு வந்து குவியுதாம். அதை அந்தாள் தன்ர பங்காளிகளுக்கே காட்டாம மறைச்சுப் போட்டுதாம்”

“இப்ப சொல்லுங்க யார் நாய் யார் சிவலிங்கம்?. எங்கட சனத்துக்கு தங்கட மூக்கு அறுந்தாலும் பறுவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைச்சா சரி, அவ்வளவுதான்”

“நேற்று கள்ளுக் கொட்டிலில கதைச்சாங்கள் தாங்கள் வெல்லாட்டாலும் பறுவாயில்லை சுமந்திரனை விழுத்தவேணுமெண்டு எல்லாக் கட்சியளும் சேந்து வேலை செய்யினமாம். அதுக்கு வெளிநாட்டுப் புதுப் பணக்காரர் அள்ளி எறியினமாம்”

“வடிவேலர், சுமந்திரன் ஒரு செருக்குப் பிடிச்ச ஆளதான். அது ஒரு வித்துவச் செருக்கு. அந்தாளின்ர கை சுத்தம். எத்தினை முட்டாள்களை வைச்சு அந்தாள் இயக்க வேணும். அந்தாளால ஒரு கட்சிக்குத் தலைவராக இருக்க ஏலாது. ஆனால் இப்ப இருக்கிற ஆக்களில அந்தாள் தான் சேனையை நடத்தக்கூடிய ஆள். அந்தாளுக்குத் தான் சிங்களவங்கள் பயப்பிடுவாங்கள். அந்தாள் இந்தமுறை தோத்தால் அரசியலை விட்டே ஒதுங்கிவிடும். அது தமிழ் ஆக்களுக்கு சாபக்கேடு”

“அப்ப புதுக்க வாற பெம்பிளையள், இளசுகளைப் பத்தி என்ன நினைக்கிற. அதுகள் கொண்டிழுக்காதுகளா?”

“அண்ணை எங்கட பிரச்சினையே இதுதான். யூனிவேர்சிட்டி போய் முதலாம் வருசத்திலேயே காற்சட்டைப் பொத்தான் பூட்டாமல் கொடிபிடிச்சுக்கொண்டு மக்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கத் தொடங்கிவிடுகிறாங்கள். இத்தனை வருசம் போராடிற ஹமாஸ் படையில தலைவர்களைப் பாருங்க. எல்லாம் தலை நரைச்சதுகள். எல்லா நாடுகளிலயும் இதுதான் நிலைமை. அரகாலயாவுக்கு நல்ல முதிர்ச்சியுள்ள தலைமை இருந்திருந்தா இப்ப நிலைமை வேற. பாருங்க 400, 500 எண்டு வந்தவன் போனவன் எல்லாம் எலெக்சன் கேட்டா எங்கட இனம் எங்க போகப் போகுது. முட்டாள்கள் கைகளில அதிகாரம் போயிட்டுது”

“சரி, நான் ஆருக்குப் போடுறது எண்டாவது சொல்லடாப்பா”

“அண்ணை இப்ப நாங்க லொஜிக்கைத் தான் பாவிக்கவேணும், உணர்ச்சியை அல்ல. தென்னிலங்கையில ஜே.வி.பி. ஆட்சி வந்திருக்கு. இதுவரை காலமும் சிங்களக் கட்சிகள் இனவாதம் எண்ட உணர்ச்சியைப் பாவிச்சே ஆட்சிக்கு வந்தாங்கள். ஜே.வி.பி. தான் முதல் முறையா மேற்கத்தைய மார்க்கெட்டிங்க் ரெக்னிக்ஸைப் பாவிச்சு வந்திருக்கிறாங்கள். அநுரகுமார எண்ட கவர்ச்சியான பண்டத்துக்கு மிதவாதம் எண்ட உறையைப் போர்த்தி தட்டில வைச்சவுடன் சனம் பறந்தடிச்சு வாங்கிச்சுது. ஆனால் விக்கிற கடை பழசுதான். அவங்களைச் சரியான பாதையில ஓட வைக்கிறதுக்கான எதிர்க்கட்சி இல்லாவிட்டால் வெளிநாடுகள் தான் அந்த வேலையைச் செய்ய வேணும். அதனால தமிழ்ப் பகுதிகளில இருந்து ஒரு பலமான எதிர்க்கட்சி பாராளுமன்றத்துக்குப் போகோணும். இப்ப இருக்கிற கட்சியளில தமிழரசுக் கட்சிக்குத் தான் அந்தத் தகுதி இருக்குது. இந்தியாவும் அந்தக்கட்சியோடதான் டீல் பண்ணும். அதைப் பலம் குறையாமப் பாத்துக்கொள்ளிறதுதான் தமிழர் பின்பற்றக்கூடிய லொஜிக். அது மட்டுமல்ல அநுர உட்பட ஜே.வி.பி. கட்சி மதிப்பு வைச்சிருக்கிற ஒரு தமிழர் சுமந்திரன் மட்டும்தான். மிச்சத்தை நீங்க விளங்கிக்கொள்ளுவீங்க எண்டு நினைக்கிறன்”

“சரி என்ர ஹமர் ட்றக்கை அங்கால பாக் பண்ணியிருக்கிறன், நான் வாறன்”

“எப்ப அண்ணை இது, சொல்லவே இல்லியே?”

“பாவ்ம் அந்தாள் இந்தமுறை கேக்கேல்ல. பெற்றோல் அடிக்கக் காசில்லை எண்டு சும்மா தந்திட்டுது” சிரித்த படியே தனது சைக்கிளில் ஏறினார் வடிவேலர். அதன் மட்கார்டில் ‘ஹமர்’ என எழுதப்பட்டிருந்தது. (Image Credit: Global Tamil News)