Sri Lanka

பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை இலங்கைமீது திணிக்கவேண்டும் – ஐ.நா. நிபுணர்கள் வேண்டுகோள்


இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் சபையும், சர்வதேச சமூகமும் மிகவும் அவதானிப்போடு இருக்கவேண்டுமெனவும் சர்வதேச பொறுப்புக்கூறல் நடைமுறைகளை அந்நாட்டின் மீது செயற்படுத்துவது தொடர்பாக அனைத்து பொறிமுறைகளையும் சர்வதேச சமூகம் ஆராயவேண்டுமெனவும் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பாகக் கடந்த சில வருடங்களாகப் பல சிரமங்களின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களைப் பின்நோக்கிக் கொண்டு செல்லவேண்டாமெனவும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதோடு சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் இந் நிபுணர்கள் கேட்டுள்ளார்கள்.

2015 முதல் 2019 வரை, 10 தடவைகள் இலங்கைக்கு சென்றுவந்த ஐ.நா. குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட 400 சிபார்சுகளின் மீது இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆராய்ந்த இச் சுயாதீன நிபுணர்கள் குழு தங்கள் அவதானங்களை இன்று சமர்ப்பித்திருந்தன. அந்நாட்டின் மீதான மனித உரிமைகள் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் கண்காணிக்குமாறும், முன்னர் புரியப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்களை மேற்கொள்வதற்கான அழுத்தங்களைத் தொடர்ந்தும் பிரயோகிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையை அது வேண்டிக்கொண்டிருக்கிறது.

“நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விடயத்தில் முன்னர் மேற்கொண்ட முன்னேற்றங்களைப் பிந்நோக்கிக் கொண்டு சென்றது, மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சாதனங்களை அகற்றுவது, குடிமக்களின் சுதந்திர நடமாட்ட வெளியைக் குறைப்பது போன்ற விடயங்களில் இலங்கை நடந்துவரும் முறைகள் பற்றி ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் எமக்குத் திகைப்பைத் தருகின்றன” என அந்நிபுணர்கள் குழு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், கோவிட் பெருந்தொற்று ஆகிய இடர்கள் நாட்டின் மீது மோசமான பாதிப்புக்களைக் கொண்டுவந்திருந்தும் அதற்குத் தீர்வாக தேசிய பாதுகாப்பை முந்நிறுத்தி நாட்டை இராணுவமயப்படுத்தல், பொதுச் சேவைகளில் போர்க்குற்றம் சாட்டப்பட்ட முன்நாள், இந்நாள் இராணுவத்தினரை நியமிப்பது போன்ற விடயங்கள் அச்சம் தருபனவாக உள்ளன. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 20 வது திருத்தம் மூலம் அகற்றப்பட்ட நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு பொறிமுறைகள், ஜனநாயகத்தையும், சட்ட ஒழுங்கையும் வழங்கும் நீத்துறைக்கான பாதுகாப்பை நீக்கிவிட்டன” என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் அந்நாட்டுக்குச் சென்றிருந்தபோது அவதானித்த குடிமைச் சமூகங்களின் செயற்பாடுகள் தற்போது அங்கு இல்லை. தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் இது செய்யப்பட்டது வருந்தத்தக்கது. குரலற்றவர்களின் குரல்களைக் கேட்பதற்கு வழிசெய்யும் இக் குடிமைச் சமூகங்களின் இருப்பு, ஜனநாயககத்தையும் அமைதியான வாழ்வையும் விரும்பும் ஒரு சமூகத்துக்கு அவசியம். 2019 இலிருந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆகியவர்கள் மீதான பாதுகாப்பு படகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்காணிப்புகளும், துன்புறுத்தல்களும் கிரமாமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன” என இந் நிபுணர்களின் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றுக் காலங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மீதான ஒடுக்குமுறைகளும், அவர்களுக்கு எதிரான துவேசங்களைக் கிளப்பும் பேச்சுக்களை அதிகாரிகள் கட்டுப்படுத்தாமையும், குறிப்பாக முஸ்லிம் மக்களின், கோவிட் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கான உரிமை மறுக்கப்படுவதும் இந் நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.“இலங்கையில் நடைபெற்ற மிக மோசமான காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக்கூடத் தெரிவிக்கவோ அவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகளை அடையாளப்படுத்தவோ அதிகாரிகள் தவறிவிட்டார்கள். காணாமற்போனவர்களுக்கான அலுவலகத்தின் எதிர்காலம் குறித்த அச்சமும் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

“பயங்கர்வாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல் உட்பட, துன்புறுத்தலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சிபார்சுகள் அனைத்தும் கவனிக்கப்படாலேயே உள்ளன. சிறைச்சாலைகள் சீர்திருத்தம் நடைபெறவேயில்லை. தடுப்புக்காவலில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதும் கைதிகள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது” என நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“12 வருடங்களுக்குப் பின்னரும் நிலைமைகள் அப்படியே இருப்பது எமக்கு மிகவும் மனவருத்தத்தைத் தருகிறது” என நிபுணர்கள் குழு தமது 2021 ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இக் காரணங்களை முன்வைத்தி இலங்கை மீது சர்வதேச சமூகமும், ஐ.நா.நிறுவனங்களும் மிகுந்த அவதானிப்பைச் செலுத்துவதுடன் பொறுப்புக்கூறல் விடயங்களில் அந்நாட்டின் மீது மேற்கொள்ளப்படக்கூடிய அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக இருக்குமாறு நிபுணர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.