ColumnsOpinion

பொறிஸ் ஜோன்சன்: பிரித்தானியாவை உடைக்கப் போகும் பிரதமர்?

‘போஜோ’ என்று செல்லமாக அழைக்கப்படும் பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் புதிய பிரதமராகியிருக்கிறார். அவரது மஞ்சள் தலைமுடி தொடக்கம் வலதுசாரி முழக்கங்கள் வரை அவரை ‘ஐரோப்பாவின் ட்ரம்ப்’ என அழைப்பதற்கு ஏற்றவர் எனப் பல அரசியல் விமர்சகர்களும், கார்ட்டூனிஸ்ட்டுகளும், இடதுசாரிகளும் துளாவி எடுக்கின்றனர். துரும்பர் என்று நான் செல்லமாக அழைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜானாதிபதியாவதற்கு முதல் இதைவிட மோசமான விமர்சனங்களால் தாக்கப்பட்டவர் மட்டுமல்ல அவர் தேர்தலில் வெல்லவே மாட்டார் என்று பல பண்டிதர்களும் எதிர்வுகளும் கூறியிருந்தனர். அதையும் மீறி 53 மில்லியன் அமெரிக்க வாக்குகளினால் அவர் ஜனாதிபதியாக்கப்பட்டார். இரண்டாவது தடவையும் அவர் ஜனாதிபதியாவார் எனப் பலரும் நம்புகிறார்கள்.

யாரிந்த ஜோன்சன்?

ஜோன்சன் லண்டனின் அக்ஸ்பிரிட்ஜ் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர். மிகவும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து பல மில்லியன் டாலர்களுக்கு அதிபதியாக இருப்பவர். லண்டனின் பிரபல பத்திரிகையான ‘த ரெலிகிராப்’ பத்திரிகையில் பத்தி எழுத்தாளராகப் பணியாற்றியபோது அவரது சம்பளம் 250,000 பிரிட்டிஷ் பவுண்ட்டுகள். அதையே ‘கோழித் தீன்’ என்று அவர் பரிகசித்தவர். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதை எதிர்ப்பவர். ரெலிகிராப் பத்திரிகையின் பிரசல்ஸ் செய்தியாளராக இருந்தபோது ஐரோப்பிய ஒன்றியத்தைப் பற்றிப் பொய்யான தகவல்களைத் தந்ததாக ரெலிகிராப் பத்திரிகையின் ஆசிரியரே அவரைப் பற்றிக் கூறியிருந்ததாகச் செய்திகளுண்டு. ஜோன்சன் லண்டன் நகரத்தின் மேயராகவும், பின்னர் பாராளுமன்றம் சென்றவுடன் வெளியுறவு மந்திரியாகவும் பணியாற்றியவர்.

ஒரு கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினருக்குரிய அத்தனை குணாம்சமும் அவருக்கு இருக்கிறது எனச் சக அரசியல்வாதிகள் கூறுவார்கள். ஐக்கிய ராச்சியத்தின் இராணுவம் வெளிநாடுகளில் போர்களில் ஈடுபடுவதை எப்போதுமே ஆதரித்து வந்தவர்; 2002 -2003 ஈராக் போருக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் வாக்களித்து வந்தவர்; பிரித்தானியாவின் ஆயுதங்களை அணுவாயுதங்களால் மாற்றீடு செய்யவேண்டும் என்று அயராது குரலெழுப்பி வருபவர்; ஐசிஸ் க்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதற்காகத் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் வாக்களித்து வந்தவர்; தொழிலாளர்கள் நோயுற்றிருக்கும்போது வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டாமென்பதற்கு ஆதரவாக வாக்களித்தவர்; ஏழைகளுக்கான உதவி மானியத்தைக் குறைக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டவர்; வங்கிகளின் வரியை உயர்த்துவது, லாபங்களின் மீதான வரியை உயர்த்துவது, நிறுவனங்களின் வரியை உயர்த்துவது போன்ற விடயங்கள் வரும்போது அவற்றுக்கு எதிராக வாக்களித்தவர்; இறுக்கமான குடிவரவுச் சட்டங்களைக் கொண்டுவர வேண்டும், அகதி கோரிக்கை விடயங்களில் மிகவும் இறுக்கமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முன்வைத்தவர்; மக்களின் தொடர்பாடலைக் கண்காணிக்க வேண்டுமென்பதற்கு ஆதரவாக வாக்களித்தவர்.

இப்படியான குணாம்சம் கொண்டவரை ஒரு கன்சர்வேட்டிவ் காரராகவும், துரும்பருக்கு இணையாகவும் வர்ணிப்பதில் தவறில்லை எனவே நினைக்கிறேன்.

 அமெரிக்காவில் ‘துரும்பர்’ ஆட்சிக்கு வருவதற்கு முன் அவரது வெற்றி நிச்சயம் என்றும் புதிய உலக ஒழுங்கின் நிர்ப்பந்தங்களின் வெளிப்பாடே அவர் என்றும், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட, கடந்தகால அமெரிக்காவின் போக்கில் நிகழ வேண்டிய திருத்தத்தின் (corrective action) ஆரம்பமே அவரின் வருகை என்றும் இதற்கு முன்னர் எழுதிய சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.  பொறிஸ் ஜோன்சனின் வருகையும் துரும்பர் வருகையைப் போன்றதொரு முன் தீர்மானத்துக்குரியது தான் என்பதை நம்புவதற்கேற்ற காரணங்கள் பல உள்ளன.

தற்போதய உலக ஒழுங்கில் இரண்டு விசைகள் உலகைத் தம்வசம் இழுக்கும் பலப்பரீட்சையில் இறங்கியிருக்கின்றன. சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த இரு துருவ ஒழுங்கு போன்றதல்ல இது. இரு துருவ ஒழுங்கு நடைமுறையில் இருந்த போது இந்த இரண்டு விசைகளும் ஒன்றாகவே தொழிற்பட்டன. அவைகளின் பொது எதிரியாக இருந்த கம்யூனிசத்தின் தேவை இப்போது இல்லை. எனவே அவை தத்தம் போக்கில் பிரிந்துகொண்டுள்ளன.

இந்த இரண்டு விசைகளில் ஒன்று – ‘நவ தாராளவாத முகத்துடன்’ ஒரு குடைக்கீழ் உலகை ஆள நினைக்கிறது. மற்றது ‘இனவாத முகத்துடன்’ காலனித்துவ மனப்பான்மையுடன் உலகை அடக்கியாள நினைக்கிறது. உலகமயமாக்கல், எல்லைகளற்ற வர்த்தகம் போன்ற அணுகுமுறைகளினால் உலகில் எந்தவொரு நாடும் பலமுள்ளதாகிவிடாது பார்த்துக்கொள்ளுதல் முதலாவது விசையின் தந்திரம். இன மேன்மையையும் இனத் தூய்மையையும் தக்கவைத்துக் கொள்ளுதல் மூலம் இழந்த பெருமையையும் அதிகாரத்தையும் பேணுவதற்காய் நாடுகளிடையே எல்லைகளை மீள்நிர்மாணம் செய்து நாடுகளைப் பிரித்தாண்டு கொள்வது இரண்டாவது விசையின் தந்திரம். துரும்பரின் வருகை இந்த இரண்டாவது விசைக்கு கிடைத்த முதல் வெற்றி.

நவதாராள நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பணம் ஒன்றே சகலதையும் தீர்மானித்து வந்தது. இனங்களின் தனித்துவம், கலாச்சாரம், தொன்மை என்பனவெல்லாம் அடிபட்டுப் போவதையோ நாடுகள் எல்லைகளை இழந்து மக்களைப் பரிமாறிக் கொள்வதையோ நவதாராளம் சகித்துக் கொண்டது. முதலாளித்துவ கோட்பாடுகளின் வெற்றிக்குக் காரணமான தொழிலாளர் தேவைகளைச் சமாளிக்கவே எல்லைகள் தளர்த்தப்பட்ட அல்லது எல்லைகள் அகற்றப்பட்ட நாடுகளின் கூட்டு. ஐரோப்பிய ஒன்றியம், ஆபிரிக்க ஒன்றியம், அமெரிக்க நாடுகளின் ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் என்று பல ஒன்றியங்களின் தோற்றமும் இந்த நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தான். இரண்டு உலகப் போர்களின் பின்னர் இது அவசியமாக இருந்தது. இது பொதுவாக உலக மக்களின் கூட்டு விடுதலைக்குக் காரணமாயிருந்தாலும் பெரும்பாலான தெற்குலக மக்களின் வடக்கு நோக்கிய புலப்பெயர்வுக்கும் அது வித்திட்டது. இது  வெள்ளை இன மக்களின் கலாச்சாரத் தனித்துவத்தை மாசுபடுத்திவிட்டது எனச் சிலர் எண்ணத் தொடங்கியபோதுதான் இந்த இரண்டாவது விசை உருக்கொண்டது. தீவிர வலதுசாரிச் சிந்தனைகளுடன் தற்போது உலகெங்கும் புறப்பட்டிருக்கும் ‘ஜனரஞ்சக’ (populist) அரசியல் தலைவர்கள் ஆட்சி பீடம் ஏறுவது இப் புதிய விசையின் தொழிற்பாட்டால்தான். பிரித்தானியாவின் புதிய பிரதமர் போஜோ துரும்பரின் நேரடி வாரிசு. பிரேசில் நாட்டின் தலைவர் ஜெயைர் பொல்சனாறோ, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைவர் டுட்டார்ட்டே, ஒன்ராறியோ மாகாணத்தின் முதலமைச்சர் போர்ட், சிறீலங்காவில் ஆட்சியமைக்க எத்தனிக்கும் ராஜபக்ச எல்லோரும் இந்த ஜனரஞ்சக அரசியலின் விளைவுகளே.

அமெரிக்காவின் வெள்ளை நடுத்தரவர்க்கம், குறிப்பாக அமெரிக்க தெற்கு மாநிலங்களில் வதிபவர்கள் அடிமைக்கால சிந்தனைகளில் இருந்து முற்றிலும் விடுபடாதவர்கள். ஐரோப்பிய காலனித்துவ சிந்தனைகளுடன் உடன்படுபவர்கள். அதிக அரச கட்டுப்பாடுகளை வெறுப்பவர்கள். நவதாராள நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானவர்கள். நீண்ட காலமாக இந்த வெள்ளை நடுத்தரவர்க்கத்தின் குரல்கள் நவதாராள வர்க்கத்தால் கேட்கப்படாமலிருந்து வந்தது. அமெரிக்க குடியரசுக் கட்சி அவ்வப்போது இவர்களின் குரல்களை எதிரொலித்திருந்தாலும் அது தேர்தல் காலங்களைத் தாண்டி ஒலிக்கவில்லை. ‘ரீ பார்ட்டி’ என்ற குழுவாக இக் குரல்கள் குடியரசுக் கட்சியை அணுக முற்பட்டிருந்தாலும் நவதாராளத்தின் முதலாளித்துவ பிடியிலிருந்து குடியரசுக் கட்சியால் முற்றிலும் விடுபட முடியவில்லை.

ஸ்டீவ் பனன் வருகை

ஸ்டீவ் பனன் என்பவர் கோல்ட்மன் சாக்ஸ் என்ற பெரும் நிதி நிறுவனததில் பணி புரிந்தவர். பெரும் தனவந்தர். அதி பராக்கிரமசாலி. கோல்ட்மன் சாக்ஸ் ஒரு நவதாராளவாதத்தின் பின்னணி இயந்திரங்களில் ஒன்று. ஒரு குடை உலகக் கொள்கையின் சூத்திரதாரிகளில் ஒன்று. அருகிப் போகும் வெள்ளை இனத்தின் அதிகாரங்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற சிந்தனையுடன் இருப்பவர் ஸ்டீவ் பனன். தனது கனவுகளை மெய்ப்பட வைப்பதற்காக அவர் கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்திலிருந்து விலகி ‘ப்றைட்பார்ட் நியூஸ்’ (Breitbart News ) என்ற இணையத்தளத்தை உருவாக்கினார். தீவிர வலதுசாரிக் கொள்கைகளான முஸ்லிம் எதிர்ப்பு, முற்போக்காளர்் எதிர்ப்பு, உலகமயமாக்கல் எதிர்ப்பு, பெண்ணீய எதிர்ப்பு, இடதுசாரீய எதிர்ப்பு என்பவற்றை முன்னிலைப்படுத்திய ஒரு இயக்கத்தின் அடித்தளமாக ‘ப்றெயிட்பார்ட் நியூஸ்’ இருந்தது. தன் மனதுக்குப் படுவதைக்  கூச்சமின்றிப் பேசவல்லதோடு மற்றவர்களின் அபிப்பிராயங்களைக் கணக்கிலெடுக்காது துணிச்சலாக நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பவாதி துரும்பர் ஸ்டீவ் பனனின் கவனத்தை ஈர்த்தது தற்செய்லான சம்பவமல்ல. ‘ப்றைட்பார்ட் நியூஸ்’ மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமும் தீவிர வலதுசாரிகளை இணைத்து துரும்பரை ஆட்சியில் அமர்த்தியதன் பிரதான பங்கு ஸ்டீவ் பனனையே சாரும். தீவிர வலதுசாரி உணர்வுகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு ‘கேம்பிரிட்ஜ் அனலிற்றிகா’ என்ற இங்கிலாந்திலுள்ள கணனி நிறுவனமொன்று இவர்கள் பணிக்கு உதவியிருந்தது.

‘பிறெக்சிட்’

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்ற வேண்டுமென்பது போஜோவின் விருப்பங்களில் ஒன்று. ஆனாலும் அதற்கான விதையை அவர் விதைத்திருப்பார் என நான் நம்பவில்லை. 2016 இல் ‘பிறெக்சிட்’ வாக்கெடுப்பு நடைபெற்றபோது அதற்கு ஆதரவான பிரச்சாரத்தில் பின்னணியிலிருந்து தரவுகளைத் தந்தது கேம்பிரிட்ஜ் அனாலிற்றிக்கா. துரும்பர், ஸ்டீவ் பனன், கோடீஸ்வரர் றொபேட் மேர்செர் போன்றவர்கள் ‘பிறெக்சிட்’ தரப்பிற்கு ஆதரவை வழங்கினர். போஜோவின் பிரதமர் கனவுக்கு துரும்பர் ஆதரவளித்தார். ஸ்டீவ் பனன் ஆலோசனைகள் வழங்கினார். போஜோவின் பிரதமர் பதவிக்கான போட்டிக்கெனத் திரட்டப்பட்ட பணம் இதுவரை காலமும் எந்தவொரு பிரித்தானிய அரசியல்வாதியாலும் திரட்டப்படவில்லை என ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெரும்பாலான பணம் நாட்டுக்கு வெளியே வரிப்பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் நிறுவனங்களிலிருந்து என்கிறது ‘ராய்ட்டர்ஸ்’.

போஜோ நெளியுறவு மந்திரியாகவிருந்தபோது அவரது அமைச்சில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானவர்கள் அவரை வெறுத்தார்கள். அவர் தனது பதவியைத் துறந்தபோது அன்றய நாளை ‘விடுதலை நாள்’ எனப் பணியாளர் கொண்டாடியதாகக் கேள்வி. இப்போது அவர் பிரதமராக்கப் பட்டிருக்கிறார். அவரது கட்சி அங்கத்தவர்களது வாக்குகள் மக்களது வாக்குகளின் 0.3 வீதம் தான். ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரக்கூடாது என்று குரலெழுப்பிய ‘இரும்புப் பெண்’ மாகிரெட் தட்சரை எப்படி நவதாராளவாதத்தின் சதி பதவியிறக்கியதோ அதே போலத்தான் நவ காலனித்துவவாதிகள் தற்போது தெரேசா மே யைப் பதவியிலிருந்து இறக்கியிருக்கிறார்கள்.

துரும்பர் எப்படி அமெரிக்காவின் உலகச் செல்வாக்கை இழக்கச் செய்வாரோ அதேபோல போஜோவின் பிரித்தானியாவும் ஐரோப்பாவிலிருந்து தனிமைப்படுத்தப்படும் என்று பலரும் நம்புகிறார்கள். அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க விரும்பும் வட அயர்லந்தும், ஸ்கொட்லாந்தும் பிரித்தானியாவிலிருந்து பிரிந்து போவதற்கு ‘பிறெக்சிட்’ வழிவகுக்கும். ‘பிறெக்சிட்’ டுக்குப் பின்னான பிரித்தானியா அமெரிக்காவின் நட்பில் மட்டுமே தங்கியிருக்க வேண்டி ஏற்படும். போஜோவின் காலத்தில் பிரித்தானியா நலிவுறும் அதனால் கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து ஜெரெமி கோபினின் தொழிற் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என நம்புபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உடைந்து தனி நாடுகளாகப் போகும் ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்துகளின் நிலைமை ஐரோப்பிய நிலப்படத்தை மீண்டும் வரையச் செய்யுமா என்பதுதான் பெரிய கேள்வி.

‘Make Great Britain Small Again’

எல்லாப் ‘புகழும்’ துரும்பருக்கே!

சிவதாசன்