பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அதிகாரப் பகிர்வுக்குத் தயார், இன, மத காரணங்களுக்காக அல்ல -சிறீலங்கா பொதுஜன பெரமுன
“மக்கள் தாம் வாழும் பிரதேசங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே அதிகாரப் பரவலாக்கம் உபயோகிக்கப்படுமானால் அதற்கு ஆதரவளிக்க நாம் தயார். இன, மத அடையாளங்களைப் பேணுவதற்காக அல்ல” என ஆளும் பிரதான கட்சியான சிறீலங்க பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் தெரிவித்துள்ளார்.
“அதிகாரப் பரவலாக்கத்துக்கு எமது கட்சி எப்போதுமே தயாராக இருந்துவருகிறது. ஆனால் அது மக்களின் அபிவிருத்திக்காக மட்டுமே பாவிக்கப்பட வேண்டும். இப் பரவலாக்க அலகுகள் இனம் அல்லது மதம் சார்ந்ததாகவோ இருக்கக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மேலான அதிகராப் பரவலாக்கத்துக்கு தாம் தயார் என கடந்த வார்ம் மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தில் பேசியிருந்தது குறித்து ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, “ரணில் விக்கிரமசிங்க அழைத்தால் நாம் பேச்சுவார்த்தைக்குத் தயார். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவே எமது கட்சியின் தலைவர். அவர் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக எதையும் கூறமாட்டார்” என அவர் தெரிவித்தார்.
“ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வந்ததும் எமது கட்சி கூடி இதுபற்றித் தீர்மானிக்கும். சுதந்திரக் கட்சியாக இருந்த காலத்திலிருந்தே நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருக்கிறோம். அதிகாரப் பகிர்வு ஆகச் சிறிய அலகு மட்டும் செல்ல வேண்டும். ஆனால் அது இன, மத ரீதியில் இருக்கக் கூடாது. இவ்விடயத்தில் நாம் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருக்கிறோம். ஒருவருடைய மொழி அல்லது மதம் காரணமாக அதிகாரம் பரவலாக்கப்படுவது உலகத்தில் எங்கேயுமே நடைபெறவில்லை. அது பொருளாதாரத்தை முன்னேற்றினாலும் எதிர்காலத்தில் அது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவும் கூடும்” என காரியவாசம் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே 13 ஆவது திருத்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றிக் கேட்டபோது “அது பற்றி ஆழமாக உரையாடப் படவேண்டும். முன்னர் நிலைமை வேறு. அப்போது பிரிவினைவாத இயக்கம் நாட்டைக் கூறுபோட முயற்சித்தது. அப்போது இவ்வதிகாரங்களை நாம் அனுமதிக்கவில்லை. இப்போது நிலைமை வேறு. இதை நாம் ஆராய்ந்து முடிவுகளை எட்டவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்க இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொருட்டு சர்வ கட்சிப் பேச்சுவார்த்தைக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அதே வேளை புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் மூலம் சமஷ்டி முறையிலான தீர்வொன்றுக்கு தாம் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. (தி மோர்ணிங்)