Real EstateUS & Canada

பொருளாதாரம் மந்தநிலை (recession) அடையும் – நிபுணர்கள் எச்சரிக்கை

வீடு வாங்குபவர்களின் கவனத்திற்கு – (1)

சிவதாசன்

அமெரிக்கா தனது கடன் வழங்கும் வட்டியை 0.75 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. 27 வருடங்களுக்குப் பிறகு இப்படிக் கனதியான உயர்வு மேற்கொள்ளப்பட்ட விடயம் பல விதமான சமிக்ஞைகளையும் அனுப்பி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ரஸ்ய – யூக்கிரேனிய போர் என அமெரிக்க ஜனாதிபதியும், திறைசேரி செயலாளர் ஜனெற் யெலெனும் கூறிவருகிறார்கள். ஆனால் பொருளாதார விடய்னக்களில் இவ்விருவரும் முன்னர் கூறிவந்த கருத்துக்கள் பொய்த்துப் போனதால் இந்தத் தடவையும் அவர்களது கூற்றுக்களை நம்பத் தயாரில்லை என மக்கள் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். அமெரிக்கா தும்மினால் கனடாவுக்கு தடிமன் வருமென்ற பழமொழி உண்மையானால் கனடியர்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

பண வீக்கம்

அமெரிக்க ஜனாதிபதி பைடனும், திறைசேரி செயலாளர் ஜனெற் யெல்லெனும் கூறிய ‘பொய்கள்’ எனக்கூறப்படுவது தற்போது நாடு எதிர்கொள்ளும் பணவீக்கம் தற்காலிகமானது என்பதும், அது விரைவில் கடந்துவிடும் என்பதும் தான். நாட்டில் வேலைவாய்ப்புகள் என்றுமில்லாதவாறு அதிகரித்திருந்தமையக் காரணம் காட்டி அவர்கள் இதைத் தெரிவித்திருந்தார்கள். ஆனால் அவரகளது எதிர்வுகூறல்கள் பொய்த்துப் போயின.

பணவீக்கம் அதிகரிக்கும்போது அதைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தை அதிகரிப்பது நீண்டகாலமாகப் பல நாடுகளாலும் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கை. பண்டங்களின் விலை அதிகரிப்பே பண வீக்கத்துக்குக் காரணம். கொரோணாப் பெருந்தொற்று காரணமாக சீனாவின் உற்பத்தித்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பண்டங்களின் தட்டுப்பாடு அதிகரிக்க வியாபாரிகளும் இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து விலைகளை அதிகரித்து தமது இலாபத்தைப் பெருக்கிக் கொண்டார்கள். இவ்விலை அதிகரிப்பு பணவீக்கத்தைக் கொண்டுவந்தது. இரண்டாவதாக ரஸ்ய-யூக்கிரேனிய போரினால் பெற்றோல், டீசல், எரிவாயு போன்றவற்றை ரஸ்யாவிடம் வாங்கக்கூடாது என மேற்குலக நாடுகள் தடை விதித்ததும் அமெரிக்க, கனடிய, அரேபிய எண்ணை நிறுவனங்கள் தமது பண்டங்களின் விலைகளையும் அதிகரித்மையால் ஏற்பட்ட பண வீக்கம். போர் சில நாட்களில் முடிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எடுத்த நடவடிக்கைகளினால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்குலக நாடுகள் பாவிக்கும், ஏற்கெனவே செயற்படுத்தப்பட்டு வெற்றிகாணப்பட்ட, ஆயுதமாக இருப்பது வட்டி வீத அதிகரிப்பு. இதன் மூலம் மக்களின் பைகளில் அதிக பணப்புழக்கத்தை அனுமதிக்க மறுப்பது. வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டால் ஒருவர் கடன் வாங்கத் தயங்குவார் அதனால் தேவையற்ற பொருட்களை வாங்க மறுப்பார். அதனால் அப்பண்டங்களின் விலைகள் குறையும், பண வீக்கம் குறையும் எனபது ஒரு கருதுகோள்.

விளைவுகள்

பல வருடங்களாக கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் தமது கடன் வழங்கும் வட்டி வீதத்தைஅது குறைந்த அலவில், ஏறத்தாழ 0%, வைத்துக்கொண்டிருந்தன. இதற்குக் காரணம் மக்கள் குறைந்த வட்டியில் கடனைப் பெற்று வீடுகளிலோ, புதிய வியாபாரங்கள், தொழில் துறைகளை ஆரம்பிப்பதிலோ செலவு செய்வார்கள். இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்; அதனால் கஜான வரிப்பணத்தால் நிரம்பும் என அரசாங்கங்கள் எதிர்பார்த்தன. இதே வேளை இப்படியான ‘குறைந்த வட்டி’ பொருளாதாரக் கொள்கை சரிப்பட்டு வராது; இதனால் பண வீக்கம் அதிகரித்து தேவையற்ற விளைவுகள் ஏற்படுமெனச் சில பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்தும் எச்சரித்து வந்தனர்.

குறைந்த வட்டியில் இலகுவாகப் பணம் கிடைத்ததால் பல புதிய வீடுகள் கட்டப்பட்டன என்பதும் மக்களால் வாங்கப்பட்டன என்பதும் உண்மையாகினும், கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட தடங்கல்கள் கட்டுமானப் பொருட்கள் முதல் இயந்திர உதிரிப்பாகங்கள் ஆகியவற்றின் விலைகளைத் திடீரென அதிகரிக்கச் செய்துவிட்டன. இதற்கு முக்கிய காரணம் பல அமெரிக்க நிறுவனங்கள் இலாபத்தைப் பெருக்குவதற்காகத் தமது உற்பத்தித் தளங்களை மேற்கு நாடுகளிலிருந்து சீனாவுக்கு மாற்றியமையும் ஐரோப்பிய நாடுகள் சூழல் மாசடைவதைத் தடுக்க தமது கரிப் பாவனையைத் தவிர்த்து, குறைந்த விலையில் வாங்கக்கூடிய ரஸ்ய எரிவாயுவில் தங்க முறபட்டமையுமேயாகும். அமெரிக்கா எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தாலும் இராணுவத் தளபாட உற்பத்தி போன்றவற்றை விட ஏனைய பண்டங்களை சீனா போன்ற நாடுகளிலிருந்து மிக மலிவாக வாங்கி வந்தன. இதன் விளைவுகளை மேற்கு நாடுகள் இப்போது எதிர்கொள்கின்றன.

குறைந்த வட்டி வீதம்

குறைந்த வட்டி வீதக் கொள்கையை இந் நாடுகள் நீண்ட காலத்துக்கு அனுமதித்து வந்தன. கோவிட் தொற்றினால் பொருளாதாரம் சரிவடையும் எனவும் இதனால் மக்க்ள் மீதான சுமைகள் அதிகரிக்குமெனவும் எதிர்ப்பார்த்த அரசாங்கங்கள் வட்டி வீதத்தைக் குறைத்து வைத்திருப்பதன் மூலம் உதவி செய்ய முன்வந்ததில் தப்பில்லை. ஆனால், இச் சந்தர்ப்பத்தைப் பாவித்து சாதாரண மக்கள் பலன் பெற்றதைவிட மோசடிக்காரர்களே கொள்ளை இலாபங்களை ஈட்டினர். வெளிநாட்டுக்காரர் சூதாட்ட நிலையங்களைப் பாவித்து தமது கள்ளப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றிப் பக்குவமாக முதலீடு செய்யும் ஒரே வழி வீடுகளை வாங்கி விடுவதுதான். கனடாவில் மத்திய மாநில அரசுகளுக்கு இது நன்றாகவே தெரிந்திருந்தும் அதைத் தடுக்க முயற்சிக்கவேயில்லை. மாறாக சாதாரண பொதுமக்கள் மீதே தமது கட்டுப்பாடுகளை அதிகரித்தன. வங்கிகளும் தாம் வழங்கும் கடன்களுக்கு அரசாங்கம் பொறுப்பு நிற்பதால் கண்களை மூடிக்கொண்டு பணத்தை அள்ளி இறைத்தன. அதே வேளை அரசாங்கம் எதிர்பார்த்ததுபோல் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க இக் குறைந்த வட்டி வீதம் அதிகம் பயன்படுத்தப்படவில்லை.

வீட்டிலிருந்து பணி புரிதல்

கோவிட் பெருந்தொற்றினால் அரசாங்கங்களும் அலுவலகங்களும் தமது பணியாளர்களை வீடுகளிலிருந்தே பணிபுரிய அனுமதித்தன. கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் இது எதிர்பாராதவாறு புதிய பிரச்சினைகளுக்குத் தோற்றுவாயாக அமைந்துவிட்டது. Zoom போன்ற தகவற் தொழில்நுட்பத்தின் அகன்ற பாய்ச்சல் தற்போது எல்லைகளைத் தாண்டி சேவைகளை மலிவாகப் பெறுவதற்கு வழிசெய்துவிட்டது. வீடுகளில் இருந்து பணிசெய்பவர்களில் கணிசமானவர்கள் அலுவலகங்கள் திறக்கப்பட்டதும் அங்கு திரும்ப மறுத்துவிட்டார்கள். பல எல்லைகடந்த நிறுவனங்கள் அவர்களது சேவைகளை அபகரித்துவிட்டன. இதனால் பல கனடியர்கள் இப்போது கிராமங்களில் வீடுகளை வாங்கிக்கொண்டு அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணியாற்ற ஆரம்பித்து விட்டார்கள். உடலுழைப்புடன் கூடிய பணியாளர்கள் இக்காலத்தில் வழங்கப்பட்ட அரச உதவிகளையும் பெற்றுக்கொண்டு ‘கைக்காசுக்கு’ பணிபுரியப் பழகிக்கொண்டுவிட்டார்கள். இதை ஊக்குவித்ததற்கு நிறுவனங்களுக்கும் பாரிய பங்குண்டு.

இதே வேளை வீடுகளிலிருந்து பணிபுரிந்த பலர் திரும்பாமையைக் காரணம் காட்டி நிறுவனங்களும் தமது அலுவலக அளவுகளைச் சுருக்கிக் கொண்டன. இதனால் பல அலுவலக கட்டிடங்கள் வெறுமையாகிக் கிடக்கின்றன.

தொடரும்…