Sri Lanka

“பொய்க் காரணங்களுக்காகக் கைதுசெய்யப்பட்ட இராணுவத்தினரை விடுதலை செய்வேன்” – கோதாவின் சூறாவளிப் பிரச்சாரம் ஆரம்பம்!

அக்டோபர் 9, 2019

தேர்தலில் வென்றதும், ‘பொய்க் காரணங்களுக்காகச் சிறையிலிருக்கும் அத்தனை இராணுவ வீரர்களையும் உடனடியாக விடிதலை செய்வேன்’ என்ற சூளுரையுடனும், கட்டுக்கணக்கான வாக்குறுதிகளூடனும், அனுராதபுரத்தில் வைத்துத் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்தார் கோதபாய ராஜபக்ச.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களும், பா.உ. ரத்தன தேரோ போன்றோரும் கலந்துகொண்ட இப் பிரசாரக் கூட்டத்தில் வைத்து அவர், விவசாயிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை எனவும் அவர்களுக்குத் தேவையான பசளைகள் இனிமேல் இலவசமாக வழங்கப்படுமெனவும் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

“கோதபாயா, ஏழை விவசாயிகளிடமிருந்து 350 ரூபாய்களைக்கூட நீ அறவிடக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னிடம் கூறினார். எனவே நான் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் உங்களுக்கு இலவச பசளையைத் தருவதோடு நீங்கள் வாங்கிய கடன்களை மீளப்பெறுவதையும் நிறுத்துவேன்” என அவர் முழங்கினார்.

“ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறு நாளே, பொய்யான காரணக்களுக்காகச் சிறையிலடைக்கப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிப்பேன். 20 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த சிவில் பாதுகாப்புப் படையினருக்கு ஓய்வூதியம் வழங்குவேன். விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இளைய தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபட ஊக்கப்படுத்துவேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வதோடு, கழிவைக் குறைத்து அதைச் சேமிப்பதற்குச் சிறந்த சேமிப்புக் கூடங்களைக் கட்டித் தருவதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம் எனவும் அப் பிராந்தியத்தில் பரவி வரும் சிறுநீரக வியாதிகளுக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதோடு ஒவ்வொரு வீடுகளுக்கும் சுத்தமான நீரை வழங்குவேன் எனக் கோதபாயா பேசும்போது தெரிவித்தார்.

யானைகளின் பிரச்சினை தொடர்பாக, விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளைக் கையாளுவேன் என்றும் யானைகளாலும், வரட்சியாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

“என்னை ஒரு இராணுவத்தினன் என்று எதிர்த் தரப்பு அரசியல்வாதிகள் கூறிவருகிறார்கள். இராணுவத்தினரை ‘ஹமுட காரயா’ என்றழைத்த காலத்தை நாம் முடித்து வைத்தோம். அதே வேளை இந்த ‘மிலிற்றறி காரயா’ வால் தான் புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது. ‘மிலிற்றறி காரயா’ தான் இந்த் நாட்டுக்கு சமாதானத்தைக் கொண்டு வந்தான்” என்று பேசினார் கோதபாய.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் தனக்கு ஆதரவு தருவதற்காக நன்றியைத் தெரிவித்த அவர் ராஜபக்சக்களுக்கு அவர்கள் ஒருபோதும் தமது முதுகுகளைக் காட்டியதில்லை எனவும் “உங்கள் எல்லோரது ஆதரவுடனும் நாம் இந்த தேர்தலை வெல்வோம் என்றும் ஒரு பாதுகாப்பான, ஒழுக்கமான, கவலையற்ற, செழிப்பான நாட்டை உருவாக்கவே எல்லோரும் விரும்புகிறோம் எனவும் மக்களுக்குத் தெரிவித்தார்.