• Post category:LIFE
  • Post published:October 14, 2020
Spread the love

துரத்தும் துரதிர்ஷடம் காரணமாம்

கி.பி. 79 இல், இத்தாலியின் தென் பகுதியிலுள்ள வெசுவிசியஸ் என்னும் எரிமலை வெடித்ததால் புகைந்துபோன நகரம் பொம்பே. வெசிவியஸ் மலையடிவாரத்திலுள்ள பொம்பே தொல்பொருட் பூங்காவில் இதன் இடிபாடுகளைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். இதைப் பார்வையிட வருடா வருடம் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாவாசிகள் வந்து போகிறார்கள்.

நிக்கோல் என்னும் பெயரால் அறியப்பட்ட கனடியப் பெண்ணொருவர் 2005ம் ஆண்டு பொம்பேயைப் பார்க்க இத்தாலிக்குப் பயணம் செய்திருக்கிறார். அப்போது அவர் அழிந்துபோன பொம்பேயின் சாட்சியாகச் சில பொருட்களைத் திருடிக்கொண்டு வந்துள்ளார்.

15 வருடங்களுக்குப் பிறகு, இந்த வருடம், ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் இணைத்து, அவர் அப் பொருட்களை வெசூவியஸ் பொம்பே தொல்பொருள் பூங்காவிடம் திருப்பிக் கொடுத்துள்ளார். அவற்றைத் தான் கொண்டுவந்த நாள் முதல் தந்னைத் துரதிர்ஷ்டம் துரத்தத் தொடங்கி விட்டது என்கிறார் நிக்கோல்.

பொம்பேயிலுள்ள ஒரு பயண முகவருக்கு அனுப்பப்பட்ட இப் பொருட்கள் உள்ளூர் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுப் பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“அப்போது நான் இளவயதுக்குரிய முட்டாள் தனத்துடன் சில காரியங்களைச் செய்துவிட்டேன். வரலாற்றின் ஒரு பகுதியை நான் என்னுடன் வைத்திருக்க விரும்பினேன். இப்போது எனக்கு வயது 36” என்கிறார் நிக்கோல்.

“இப் பொருட்களைத் திருடியதிலிருந்து எனக்கு துர்சம்பவங்களே நிகழ்ந்து வருகின்றன. இரண்டு தடவைகள் மார்புப் புற்றுநோய், பின் இரு மார்புகளிலும் அறுவைச் சிகிச்சை, எனது குடும்பம் மிக மோசமான நிதிப்பிர்ச்சினைக்கு உள்ளாகியிருக்கிறது. நாங்கள் நல்ல மனிதர்கள். இந்த கெட்ட சாபத்தை நான் எனது குடும்பத்திற்கோ பிள்ளைகளுக்கோ கொடுக்க விரும்பவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் நான் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நான் கடவுள்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” என நிக்கோல் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிக்கோலின் இரண்டு நண்பர்களும் இதே போன்று பொம்பே இடிபாடுகளைத் திருடியிருந்தார்கள். அவர்களும் தாம் திருடிய கற்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். “நானும் எனது மனைவியும் 2005 இல் பொம்பேயிற்கு வந்தபோது திருடிய கற்களைத் திருப்பி அனுப்புகிறோம்” என அவர்களும் தமது மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.



“வெசுவியஸ் எரிமலை வெடித்தபோது அதனால் இறந்த உயிர்களின் வலிகளை நாம் அப்போது உணர்ந்திருக்கவில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள்” என அலஸ்ரெய்ன், கிம்பெர்லி ஆகிய இருவரும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கனடிய தொலைக்காட்சியான சீ.டி.வி. நியூஸ் பொம்பே தொல்பொருட் பூங்காவைத் தொடர்புகொண்டபோது, “அனுப்பப்பட்ட பொருட்களை நாங்கள் சரியான இடங்களுக்குக் கொடுத்துவிட்டோம். நிக்கோல் போன்றவர்களைப் போல் ஏராளமானவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். திருடிய பொருட்களால் தமக்கு துரதிர்ஷ்டங்கள் ஏற்பட்டதாக அவர்கள் தமது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட நூற்றுக்கும் மேலான கடிதங்கள் எம்மிடமுள்ளன” என பூங்காவின் தொடர்பாடல் அதிகாரி தெரிவித்ததாக அத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email