பொன்மான் (Ponman – மலையாளம்)
கதை பாதி – திரை மீதி
பரம் ஜி.

அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் பொதுவாக வரக்கூடிய பிரதான பிரச்சனைகளில் ஒன்று திருமண காலத்தில் பெண்ணுக்குத்தர வேண்டிய வரதட்சணைக்காக அல்லல் படுவது.
நகை போடுவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, கடனாக வாங்கிய நகையை திரும்ப கொடுப்பதில் நடைபெற்ற குழப்பத்தை வெகு யதார்த்தமாக திரையில் சொல்கிறது “பொன்மான்”.
மலையாள திரையுலகில் யதார்த்தமாக கதாபாத்திரங்களை சிறப்பாக சித்தரிக்க வல்லவர்களில் பசில் யோசேப், லிஜாமோல் ஜோஸ் போன்றவர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை.
திரைக்கதை, நகைச்சுவை இளையோட ஆரம்பமானாலும் நகைக்குரிய பணம் கையில் வராமல் போகவும் கதை ஒரு தீவிர திருப்பம் எடுத்து செல்கிறது. பேசப்படும் வசனங்களை மிஞ்சும் வகையில் சகல கதாபாத்திரங்களின் உடல் மொழியும் யதார்த்த நடிப்பும் நடைபெறும் கதையை நேரடியாக பார்த்து அனுபவிப்பதுபோல உணர வைக்கிறது.
கதை நிறைவு பெறுகையில் சொல்லப்படும் அபத்தமான அடிதடிகள் திரைக்கதையை விறுவிறுப்பாக்கும் நோக்கத்திற்காக புனையப்பட்டிருப்பது சுவாரஸ்யத்தை சற்று குறைக்கின்றது.
ஒரு மொழிமாற்று திரைப்படம் என எண்ண வைக்க முடியாத வகையில் பொன்மானை தந்த திரைப்பட குழுவினரை பாராட்டலாம்.
வாழ்த்துகள்!



[இப்பதிவை பரம் ஜி. யின் முகநூல் பக்கத்திலும் பார்க்கலாம்]
