Arts & EntertainmentColumnsமாயமான்

‘பொன்னியின் செல்வி’ – விமர்சனம்

மாயமான்

‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்தவர்களை விட எழுதப்பட்ட விமர்சனங்கள் அதிகம் என்று வடிவேலரின் கருத்துகணிப்பு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து, பாலியற் சமத்துவம் (gender equality) கருதி ‘பொன்னரின் செல்வி’க்கான இவ்விமர்சனம் வருகிறது.

3022 ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாகத் தெரிவுசெய்யப்படவுள்ள இப்படம் 1000 ஆண்டுகளுக்கு முன்வந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஒரு reenactment எனக் கருதப்பட்டாலும் காலத்தின் தேவை கருதி நவீன கருவிகளின் துணை கொண்டு படமாக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தீவிற்கு- மன்னிக்க வேண்டும் ஈழத் தீவிற்கு (ஏன் பிரச்சினைகளோடு ஆரம்பிப்பான்?) தமிழ்நாட்டிலிருந்து வரும் பிரமாண்டமான கடற்கோட்டையை ஒத்த மிதவைப் படகொன்றிலிருந்து இயந்திரப் பறவையொன்று (drone) வந்து தொண்டமானாற்றில் இறங்குவதோடு விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது படம். இவ்வானூர்தியில் வந்திறங்கிய வந்தியத் தேவி (ருவிஷா) யாழ்ப்பாணத்தின் நிலையை பார்த்துக் கண்கலங்கி விடுகிறார் (படம் பார்க்கப் போபவர்கள் நிறைய கிளீனெக்ஸ் கொண்டுபோவது நல்லது). மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வனில்’ காட்டுவதுபோல மலைகள் ஒன்றும் அங்கில்லை. அத்தனை பாறைகளும் வெட்டப்பட்டு கிரெனைட் தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சான்றுகள் எதுவுமில்லாது துடைத்தெடுத்திருந்தமை தெரிகிறது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் கமெரா நிலைகுத்தி நிற்கிறது. திறந்து கிடந்த பெட்டிக்கருகில் தாலிக்கொடிகள் உட்படப் பல தங்க நகைகள் சிந்தியபடி கிடக்கின்றன. அருகே இன்னுமொரு இனம் தெரியாத உலோகத்தினாலான பொருள். வந்தியத் தேவியின் கருவி அதை ‘ஜொனி கண்ணிவெடி’ என இனம் காட்டுகிறது.

யாழ்ப்பாணத் தீபகற்பம் ராஜஸ்தான் பாலைவனம் போலக் காட்சியளிக்கிறது. ‘யாழ்ப்பாணம் வரவேற்கின்றது’ என்றொரு பதாகை மட்டும் வானத்தைப் பார்த்தபடி தேவனின் மீள்வருகைக்காக இன்னும் அப்படியே கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் மிருகங்களினதும் மனிதர்களினதும் எலும்புக்கூடுகள். வீடுகள், கட்டிடங்களின் இடிபாடுகள் அங்குமிங்குமாகக் தெரிகிறது. கடற் பறவைகள் மட்டுமே தரையில் காணப்படும் உயிரினங்கள் (கிராஃபிக்ஸ் அல்ல). ஒரு காலத்தில் கண்ணாடி போன்ற குருகு மணல் இருந்தமைக்கான தடயம் எதுவுமில்லாது வெறும் முருகைக்கல்லுடன் தனித்து விடப்பட்டிருக்கிறது யாழ்ப்பாணம்.

வந்தியத் தேவியிடமிருக்கும் கைத்தொலைபேசி போன்ற கருவி படத்தை எடுத்தவுடன் அவ்விடம் பற்றிய பூர்வீகங்கள், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த புவியியல் நிலைகள் எல்லாவற்றையும் கண்முன்னால் நிறுத்தும் வல்லமை கொண்டிருந்தது. தொண்டமானாற்றில் பலநூறு வருடங்களுக்கு முன்னர் நீரோடிய அடையாளம் தெரிந்தது. மண்கும்பானில் ஒருகாலத்தில் இருந்த மண்மேடுகள் இப்போது கடல் நீர்த் தேக்கமாக இருப்பது தெரிந்தன. அங்கிருந்த மண் எல்லாவற்றையும் சீனா எடுத்துச்சென்றுவிட்டதாக வந்தியத் தேவியின் அற்புதக் கருவி காட்டுகிறது.

சிறிது நேரத்தில் இரண்டு ரோபோட்டுகள் பறந்து வந்து வந்தியத் தேவியின் தாகத்தைத் தீர்த்து வைக்கின்றன. பயணம் தெற்கு நோக்கி நகர்கிறது.

கிளிநொச்சியில் ஒரு பாரிய சுவர். “யாழ்ப்பாணிகளுக்கு இங்கு இடமில்லை” என்ற வாசகம் அச்சுவரில் பொறிக்கப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. சுவருக்கப்பால் பசும் சோலைகள். மனிதர்கள் விலங்கினங்கள் எல்லாம் கொழு கொழுவென்றிருக்கின்றன. இரணைமடு போதுமான நீரை வழங்குகிறது. கரியதும் மஞ்சள் நிறமானதுமான குள்ளமான மக்கள் புதுமையான வாகனங்களில் திரிகிறார்கள். அவர்கள் பேசும் மொழி சீனர் பேசும் மொழியை ஒத்திருக்கிறது.

வந்தியத் தேவியின் வருகையை அறிந்ததும் இரண்டு இயந்திரப் பறவைகள் வந்து இறங்குகின்றன. அதிலிருந்து இறங்கிய இரண்டு சீனர்கள் துப்பாக்கிகளை நீட்டியபடி முன்நகர்கின்றனர். இமைப்பொழுதில் இரண்டு றோபோட்டுகள் வந்திறங்குகின்றன. ரோபோட்டுகளிலிருந்து மைக்கிரோவேவ் அலைகள் பீரிடுவது எச்சரிக்கையுடன் காட்டப்படுகிறது. இரண்டு சீனர்களும் வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஓடிவிடுகின்றனர். வந்தியத் தேவியின் சிரிப்பு வாரிவிடுகிறது.

வந்தியத் தேவியின் அடுத்த தரிப்பு வவுனியா. வவுனியா நகரத்தில் கடைத்தெருக்கள் பகலில் தெருக்கடைகளாக மாறிவிடும். அங்கிங்கு காணப்படும் பணியாட்கள் கருப்பு நிறத்தவராகவும் கடைச்சொந்தக் காரர்கள் சீனராகவும் காட்டப்படுகிறது. பெயர்ப்பலகைகளில் சீன எழுத்துக்கள் மட்டுமே தெரிகின்றன. இரவிரவாகப் பாரவண்டிகள் யாழ்ப்பானத்து மண்ணைத் தெற்குக்குக் கொண்டுசெல்வதும் நகர மத்தியில் அவர்கள் உணவுக்காக இளைப்பாறுவதுமென பகல் இரவு முழுதும் வவுனியா விழித்திருப்பது தெரிகிறது.

அனுராதபுரத்தை வந்தியத்தேவி எட்டியதும் பாரிய ஆயுதப்படையொன்று அவளை எதிர்கொள்கிறது. கனரக வாகனங்கள் அவளைச் சுற்றி வளைக்கின்றன. பலத்த போருக்கான தயாரிப்புகளுடன் அவர்கள் முன்நகர்கிறார்கள். சில விநாடிகளில் வானம் இருள்கிறது. பலநூற்றுக்கணக்கான ரோபோட்டுகள் சீனப்படைகள் மீது குடை விரிக்கின்றன. லேசர் கற்றைகளும், அல்ட்றாசவுண்ட் கற்றைகளும் சீனர்களைத் துளைக்கின்றன. சத்தமின்றி ரத்தமின்றி சீனர்களின் சுற்றிவளைப்பு முடிகிறது. விழுந்தவர்களை விட்டு விட்டு எஞ்சியவர்கள் வயிறுகளைப் பிடித்துக்கொண்டு ஓடிவிடுகிறார்கள். வாகனங்கள் உருகி வழிகின்றன.

தலைநகர் கொழும்பை அடைந்ததும் வந்தியத் தேவிக்குப் பெரிய வரவேற்புக் காத்திருக்கிறது. ஏராளமான சீனர்கள் செங்கம்பளத்தில் உட்கார்ந்திருக்க பல கரிய மனிதர்கள் பணிவிடை செய்கிறார்கள். மஞ்சள் அழகிகள் அலங்கார வளைவுகளை அலங்கரிக்கிறார்கள். வந்தியத் தேவிக்குப் பின்னால் பல ரோபோட்டுகள் அணிவகுத்து நிற்கின்றன. அரியாசனத்தை நோக்கி வந்தியத் தேவி அழைத்துச் செல்லப்படுகிறாள். எங்கும் ஒரே நிசப்தம்.

திடீரென வானம் பிரகாசிக்கிறது. காதைப் பிளக்கும் சத்தத்துடன் வானூர்தி ஒன்று வட்டமிட்டுவிட்டு செங்கம்பளத்தில் இறங்குகிறது. அழகிய பெண் ஒருத்தி இறங்கி மெதுவாக நடந்து வருகிறாள். வந்தியத்தேவி அவளைத் தலைகுனிந்து வணங்கி வரவேற்கிறாள். மீண்டும் நிசப்தம். “இவர்தான் இனிமேல் இந்நாட்டின் அரசி. சோழ இளவரசி குந்தவை” வந்தியத் தேவி உரத்த குரலில் அறிவிக்கிறாள். சகலரும் எழுந்து நின்று கரகோஷமெழுப்புகின்றனர்.

குந்தவை மெதுவாக நடந்துசென்று அரியணையில் அமர்கிறார். அருகே இரண்டு ரோபோட்டுகள் அமைதியாக நிற்கின்றன. மண்டபத்தைச் சுற்றிப் பல ரோபோட்டுகள் காவல் நிலையில் நிற்கின்றன. திடீரென எல்லா ரோபோட்டுகளிலிருந்தும் ஒலிபெருக்கிகள் பேச ஆரம்பிக்கின்றன. குந்தவையின் குரல் அவற்றில் ஒலிக்கிறது.

“வளம் கொண்ட இலங்கை நாட்டு மக்களே. இன்று முதல் இங்கு வாழும் அனைத்து மக்களும் சம உரிமைகளோடு வாழ்வார்கள். அவரவர் அவரவர் மதங்களைப் பின்பற்றும் உரிமையுண்டு. தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளுக்கும் சம அந்தஸ்து உண்டு. சீன மொழிக்கு வியாபார அந்தஸ்து உண்டு. ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தமிழரும் சிங்களவரும் மாறி மாறி அதிகாரத்திலிருப்பர். நாட்டின் வளங்கள் அனைத்தும் சகல மக்களுக்கும் பொதுவானவை. அருகில் தமிழ்நாட்டில் சோழராட்சி நடைபெறுவதை நீங்கள் கருத்தில் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்”

பத்து வருடங்களின் பின்னர் வந்தியத் தேவி மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதைக் காட்டுகிறார்கள். அப்போது யாழ்ப்பானத் தீபகற்பம் மீண்டும் சோலையாக மாறியிருக்கிறது. இப்போதும் வந்தியத் தேவியின் கண்கள் நீரைச் சொரிகின்றன. அது ஆனந்தக் கண்ணீர்.

படத்தில் கொடிகள் எதுவும் துலாம்பரமாகக் காட்டப்படவில்லை என்பது சிலருக்கு வருத்தத்தை அளிக்கலாம். ஆனால் அதை விட்டுப் பார்க்கும்போது படம் விறுவிறுப்பாகத் தளர்வின்றிச் செல்கிறது. பாடல்கள் எதுவுமில்லை. திரைகள் கிழிக்கப்படாவிட்டால் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.