பொன்னியின் செல்வன் -2 | சுவை பிடிபட வேண்டும்
மாயமான்
‘லைக்கா’வின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் – பாகம் 2 ஏபரல் 28 அன்று வெளிவரவிருக்கிறது. தமிழர்கள் பெரும்பாலும் அள்ளுப்படுவார்கள். கல்கியில் தொடர் கதையாக வந்த நாட்களிலும் இப்படித்தான் சனம் அடிபட்டு கல்கியை வாங்கியது என்பார்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வருகைக்குப் பிறகு தமிழ் இளைய தலைமுறையினர் மத்தியில் சோழர் மீதும், தமிழ் மீதும் தாகம் அதிகரித்திருக்கிறதா எனத் தமிழ்நாட்டு கட்டுரையாளர் ஒருவர் கனடிய நண்பர் ஒருவரைக் கேட்டிருப்பாதாக அந்நண்பர் கூறினார். இது பற்றி நான் சந்தித்த, கனடாவில் பிறந்த தமிழ் சந்ததியினர் சிலரிடம் கேட்டேன். “No not at all” எனப் பதில் வந்தது. அதே வேளை அமெரிக்காவில் வாழும் நண்பர் ஒருவரின் பிள்ளைகள் பொ.செ. 2 ஐப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக அறிந்தேன்.
சமூக வலைத்தளங்கள் எப்படித் தமது கவர்ச்சியான தலைப்புகளுடன் இறந்துபோன மஞ்சள் பத்திரிகைகளின் மறுபிறப்புகளாக உலாவருவதன் மூலம் உண்மையான செய்திகளின் நம்பகத்தன்மையை மழுங்கடிக்கின்றன்வோ அதே போன்று ஹொலிவூட், பொலிவூட் திரைப்படத் தொழிற்சாலைகள் டிஜிட்டல் பிரமாண்டங்களை வடித்துத் தள்ளுவதன் மூலம் உண்மையான கதைகளையும் கற்பனைகளாக்கி விடுகின்றன. இதில் இந்தியா இன்னுமொருபடி மேலே போய் ‘pan indian’ என்று ஒரே தயாரிப்பில் பலமொழிகளில் ஒரு படத்தை எடுத்து பணம் பண்ணுவது இந்த இளசுகளின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.
பொ.செ. 1 ஒரு எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனானப்பட்ட கமல்ஹாசன் போன்ற ஜாம்பவங்களாலேயே எடுக்கமுடியாமல் போன இப் பிரமாண்டத்தை லைக்காவின் உதவியுடன் மணிரத்னம் செய்து முடித்திருக்கிறார் என்றொரு பிம்பம் பலவருடங்களாகக் கட்டியெழுப்பப்பட்ட பின்னரே படம் சந்தைக்கு விடப்பட்டது. தற்கால சந்தை நுணுக்கங்கள் இப்படித்தான் எனக் கடந்து போனாலும் அதே hype ஐ பொ.செ. 2 இல் ஏற்றிவிட முடியாது. பொ.செ. 1 இன் மீது எழுப்பப்பட்ட அந்த பிம்பத்துக்கு ஏற்ற அளவு உலக சந்தையில் பணம் புரட்டப்பட்டு விட்டது. பொ.செ. 2 கொஞ்சம் நொண்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
கல்கியின் பொன்னியின் செல்வனும் hype ஐத் தூண்டும் வகையில் தான் இருந்தது. அத்தியாய முடிவில் “பற்றைக்குள் இருந்து இரண்டு கரிய உருவங்கள் பார்த்துக்கொண்டிருநதன” என்று கல்கி வாசகர்களை ஒவ்வொரு வாரமும் விசராக்கி விடுவார். அதற்கு ஏற்றாற்போல் மணியன் தனது ஓவியங்களால் உடுக்கடித்து உசுப்பேத்தி விடுவார். ஒவ்வொரு அத்தியாயங்களையும் சேர்த்து இணைத்து அச்சுக்கூடத்தில் கொடுத்து கட்டி வைத்தவர்கள் பலர்.
கல்கியின் பொ.செ. கதை கற்பனையுடன் சேர்த்து சோழர்களின் வரலாற்றைப் புள்ளி புள்ளிகளாகத் தொட்டுக் காட்டியிருந்தது. இது உருவாக்கிய hype இனால் ஏறாளமான தமிழாய்வாளர்கள் சோழரின் வரலாற்றை மேலும் கிண்டி எடுத்தனர். பல்கலைக்கழகங்கள், தொல்லியல் திணைக்களங்கள் சோழர் வரலாற்றை மட்டுமல்ல தமிழக வரலாற்றையே காட்சிக்கு வைத்தனர். இணைய உலகில் இது நிரம்பிக் கிடக்கிறது. ஆர்வமுள்ள தமிழ் இளையோருக்கு சோழரைப் பற்றிச் சொல்ல பொன்னியின் செல்வன் தேவையில்லை. ஆனால் பிரமாண்டப்படுத்துவதும் ஒரு வகையில் branding தான் என்ற வகையில் பொ.செ. படம் சோழர் மீதான தேடலை அதிகரித்ததன் மூலம் தன் கடமையைச் செய்திருக்கிறது. ஆனால் அதுவல்ல சோழர் வரலாறு. இதையே தான் “no not at all” என்று இளையோர் கூறியதாக இருக்கலாம்.
பொ.செ. 1 இல் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மணிரத்தினத்தின் கோத்திரம் அதிலொன்று. இலங்கை அரசைச் சிரமத்துக்குட்பதுத்தக்கூடாது என்பதற்காகச் சில தேவையற்ற புனைவுகள் புகுத்தப்பட்டன எனவும் கூறப்பட்டது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தமிழ் அகதிச் சிறுமிக்கான பாத்திரத் தேர்வில் அது பளிச்சென்று தெரிந்துவிட்டது. ஆனால் வியாபாரத்தை முன்னிலைப்படுத்திப் படங்களைத் தயாரிக்கும் தமிழ்த் திரையுலகில் தமிழ் நேசர்கள் எனக்கூறும் சேரன் போன்ற இயக்குனர்களும் இதையேதான் செய்தார்கள். தமிழ் ரசிகர்களின் தலைகளில் எல்லாவற்றையும் போட்டுவிட்டுப் பணத்தை வாரிச்செல்லும் திரையுலகிடம் அறத்தை, நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. பணத்தைக் கொடுத்து பொழுதுபோக்கை வாங்குகிறோம் என்பதோடு நழுவிவிடவேண்டியதுதான். பொ.செ. படமும் இதே genre தான். நட்சத்திரங்களைப் பார்த்து கொஞ்ச நேரம் சிலிர்த்துப்போயிருக்க ஒரு சந்தர்ப்பம்.
பொ.செ. 2 இந்தத் தடவை தயாரிப்பாளர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாரி இறைக்காது என இப்போதே தமிழரல்லாதோர் ஆரூடம் கூறத் தொடங்கி விட்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளிவந்த பொ.செ. 1 இந்தியா முழுவதிலும் ஓடி வாரி இறைத்துவிட்டது. ஆனால் இந்தத் தடவை அப்படி நடைபெறக்கூடாது என்று தமிழைத் தவிர்ந்த இதர மொழி மாநிலங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொ.செ. 2 வெளியிடப்படும் அதே நாளில் தெலுங்கு நட்சத்திரம் அக்கினேனியின் Agent என்ற படமொன்றைத் திரையிடவிருக்கிறார்கள். கன்னட, தெலுங்கு மாநிலங்களில் இது பலத்த போட்டியை உருவாக்கும். இதற்காக பொ.செ. நட்சத்திரங்கள் பல தலைநகர்களுக்கும் சென்று promotional நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கேள்வி. தமிழரல்லாத மாநிலத்தவர் கல்கியின் கதையை வாசித்திருக்காமையால் சோழரின் பெருமை தெரிந்திருக்கவில்லை. பொ.செ. 1 சோழரை மட்டுமல்ல தமிழரையும் மிகைப்படுத்திக் காட்டிவிட்டது. அந்த வகையில் பொ.செ.2 இற்கு எதிர்ப்புத் தோன்றுவது இயற்கை தான். மற்றது சுபாஸ்கரனின் பூர்வீகம் இழுத்துவரும் எதிர்ப்பு.
நண்பரின் நண்பர் கேட்டதற்கமைய – பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழரின், தமிழரின் பெருமையை உயர்த்திக் காட்டியிருக்கிறது ஆனால் அது தமிழரல்லாதோருக்கு. இனிவரும் பற்றுள்ள தமிழர் சந்ததிகளுக்கு பொன்னியின் செல்வன் படம் மதுவிற்பனை நிலையங்களில் கொடுக்கப்படும் sample மாதிரி. சுவை பிடிபடவேண்டும் என்பதே எமது விருப்பமும்.