பொன்னியின் செல்வன்-2 | ஏப்ரல் 28 திரைக்கு வருகிறது

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-2’ ஏப்ரல் 28, 2023 அன்று திரைகளுக்கு வரவிருப்பதாக அதன் தயாரிப்பாளரன் லைகா புரடக்‌ஷன்ஸ் அறிவித்திருக்கிறது. நேற்று (புதன் 28) ருவிட்டர் குறுஞ்செய்தியுடன் கூடவே பொ.செ.-2 இன் முன்னோட்டம் ஒன்றையும் லைக்கா வெளியிட்டிருக்கிறது.

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் உலகமெங்கும் திரைகளுக்கு வந்த ‘பொன்னியின் செல்வன் – 1’ இதுவரை 300 கோடி இந்திய ரூபாய்களை உழைத்துத் தந்திருக்கிறது. தமிழில் தயாரிக்கப்பட்டு , இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்ட இப்படத்தின் மூலக் கதையை மறைந்த நாவலாசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். திரைப்படத்துக்கான வசனங்களை மணிரத்னம், இளங்கோ குமாரவேல் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். படத்துக்கான இசையை ஏ.ஆர். ரஹ்மான் வழங்குகிறார்.

கார்த்தி, ஜயம் ரவி, விக்ரம், திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், ஜயராம், சோபிதா துளிபாலா, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் பவுவூர் மகாராணியாகவும் மந்தாகினியாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

பத்தாம் நூற்றாண்டு காலத்தில் ராஜராஜ சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அருண்மொழிவர்மனின் ஆரம்பகால வரலாற்றை மையமாகக் கொண்டு பொன்னியின் செல்வன் – 1 திரைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது.