பொன்னியின் செல்வன்-1
பொறுக்கியதிலிருந்து…
மாயமான்
படம் இன்னும் பார்க்கவில்லை. திரைகள் ஓட்டைகளாக்கப்பட்டதால் வசதி கிடைக்கவில்லை. எல்லை கடந்து இன்பம் காணலாமென்ற யோசனை. அதற்குள் வாசித்த விமர்சனங்கள் / விளம்பரங்களை வடிகட்டி இது.
பொன்னியின் செல்வன் படம் வெளிவருவதற்கு முன்னரே, கடந்த ஐம்பது வருடங்களாக கல்கியின் நாவல் ஒரு அதிசய பொக்கிஷமாகவே பார்க்கப்பட்டு வந்தது. அதில் கைவைக்க எவருக்கும் துணிச்சல் வரவில்லை. எகிப்திய பிரமிட்டுகளில் கைவைப்பவர்களுக்கு துட்டன்காமன் சாபம் கிடைக்கும் என்பது போல் ஒரு பயமோ தெரியாது. மார்வாடிகள் தேவைப்படாத லைக்கா அல்லிராஜாவுக்கு அசாத்திய துணிச்சல். அவர் இப்போ வானளாவிய சோழன்.
மணிரத்னமும் அதேயளவு துணிச்சலானவர். ராஜமெளலியைப் போல crowd pleasing தேவைகளுக்காக கதையை மாற்றுபவர் அல்ல. ராஜமெளலி பா.ஜ.க.வின் இந்துத்துவ ஏஜண்ட்டா அல்லது வெறும் காசுப் பிசாசா தெரியாது. பொ.செ. யில் மணிரத்னம் கல்கிக்குத் துரோகம் செய்யவில்லை என்கிறார்கள். கதையை வாசித்தவர்கள் ஏமாறாது போனால் மணிரத்னம் ஒரு great. கதையை வாசிக்காதவர்கள் குழம்புவார்கள். அதனாலென்ன புத்தகம் இன்னும் அதிகமாக விற்கப் போகிறது.
பொ.செ. வைப் படமாக்குவதற்கு எம்.ஜி.ஆர். முதல் பல நட்சத்திர நடிகர்களும் கனவு கண்டார்கள். குதிரை மீது குலுங்கக் குலுங்க ஓடும் வந்தியத்தேவனாகப் பலரும் கற்பனைபண்ணிப் பார்த்தார்கள். அப்பாத்திரம் தனக்கு வேண்டுமென்று ரஜினி மணிரத்னத்திடம் வாய்விட்டுக் கேட்டதாகவும் வதந்தி. அதைக் கார்த்திக்குக் கொடுத்ததன் மூலம் மணிரத்னம் சமரசத்துக்குத் தயாரில்லை என நிரூபித்துவிட்டார். அதனால் படத்தை நம்பிக்கையாகப் பார்க்கலாம். புதையுண்டு கிடந்த இப் பொக்கிசத்தை வெளிக்கொணர்ந்ததன் மூலம் தமிழரின் அடையாளப் பெருமிதம் புத்துணர்ச்சி பெறுகிறது. அல்லிராஜாவுக்கும் மணிரத்னத்துக்கும் நன்றி.

பொ.செ. 1 இன் கதையை எழுத்தாளர்கள் ஜெயமோகனும் இளங்கோ குமாரவேலும் எழுதியிருக்கிறார்கள். காதல், மோதல், சதி என்று நாவலுக்குரிய அம்சங்கள் குலையாமல் படத்திலும் நகர்கிறது என்கிறார்கள். சோழர் காலத்து உண்மையான சம்பவங்களிடையே பாரிய கற்பனை இடைச்செருகல்களுடன் நாவலை எழுதியிருந்தார் கல்கி. வாரா வாரம் வாசகனின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக “பற்றைக்குள் இரண்டு கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன” என்றவாறு முடிப்பார். அடுத்த வாரம் மட்டும் வாசகனுக்கு anxiety and depression.
வானில் தூமகேது தோன்றுகிறது. ராஜகுடும்பத்தில் இழப்பு நிச்சயம். சுந்தர சோழரும் (பிரகாஷ் ராஜ்) படுக்கையில். முடி அடுத்து யார் தலையில் குந்தப் போகிறது? போட்டி, சதி.. என்று மர்மங்களுடன் கதை விரிகிறது (நாவலில்). முடி இளவரசர் ஆதித்த கரிகாலன் தலையிலா (விக்ரம்) அல்லது அவருக்கு இளையவரான அருண்மொழிவர்மன் (ஜெயம் ரவி) தலையிலா? ஆதித்த கரிகால்ன் ஒரு கொதி பிடித்தவர். அருண்மொழிவர்மன் இதமாகப் பேசி மக்களை வசீகரம் செய்பவர். எனவே மக்கள் விருப்பம் அருண்மொழிவர்மனுக்கே முடி போகவேண்டுமென்பது. இந்த இரண்டு பேருமே (விக்ரம், ஜெயம் ரவி) அவரவர் பாத்திரங்களுக்குப் பொருத்தமானவர்கள். ட்றெயிலரில் பார்த்தபோது ஜெயம் ரவிவின் குரலில் கடுமை (base) போதாது என அதிருப்தி கொண்டிருந்தேன். ஆனால் இப்போது புரிகிறது மணிரத்னத்தின் attention to details. மதுராந்தகனும் (ரஹ்மான்) முடிக்கான மூன்றாவது போட்டியாளர். உலகம் முழுவதும் அரச குடும்பங்களில் நடக்கும் அதிகாரப் போட்டிதான் இங்கும். காட்டிக் கொடுப்பு, முதுகுக் குத்தல் என்பன இல்லாது கதையை ஓட்டமுடியாதுதானே.
பாத்திரங்களில் வந்தியத் தேவன் (கார்த்தி) ரசிகர்களின் favourite. குறிப்பாக பெண்களின். நாவலை வாசிக்கும்போது கூட மணியனின் சித்திரத்தால் விசர் கொண்டு திரிந்த பெண்கள் பலர். இதற்குள் படத்தில் கார்த்தியைக் கொண்டுவந்து போட்டால்? வந்தியத் தேவனுக்கு மூடிசூடும் தேவையில்லை. அதனால் முடிக்குரிய ஒழுக்கங்களைப் பின்பற்றவேண்டுமென்பதில்லை. ஒரு carefree character. குறும்பு, காதல், வீரம் என ரசிகர்களை மகிழ்விக்கிறாராம் கார்த்தி. ரஜினியை இந்தப் பாத்திரத்தில் கற்பனை பண்ணிப் பார்க்க ஏனோ கஷ்டமாக இருக்கிறது. பாவம் மணிரத்னம் கொஞ்சம் காசு கூட உழைத்திருக்கலாம். எனக்கு ஒரு பயம் ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் திரைகளைக் கிழித்துவிடுவார்களோ என்று!
குந்தவை பாத்திரத்தில் திரிஷா கலக்குகிறாராம். பிரித்தானிய நடிகர் மைக்கேல் கெய்ன் நடிப்பைப்பற்றி ஒருதடவை பேசும்போது கூறினார் ‘குடிகாரனாக நடிப்பவர் குடிகாரனைப் போல நிதானமின்றிக் காட்ட முற்படக்கூடாது. மாறாக தனக்கு வெறியில்லை என நிதானமாக நிற்க முயற்சிப்பதுபோலக் காட்டவேண்டும். அதுவே உண்மையான நடிப்பு” என்றார். திரிஷாவும் தான் நடிக்கவில்லை எனக் காட்டினாலே போதும். அவரது அம்மாவின் படைப்பு அப்படி.
நந்தினி (ஐஸ்வர்யா ராய்) பாவம். அவரை ஒரு பெண் நாகம் என்பதாகவே கல்கி படைத்திருக்கிறார். வழக்கமான தமிழ் மசாலாப் படங்களில் வரும் வில்லி பாத்திரம்போலல்லாது அழகிய வில்லியாக வந்து போனாலும் அந்த அழகுக்குப் பின்னாலுள்ள விஷத்தை மிகவும் சாதுர்யமாக வெளிப்படுத்துவதன் மூலம் அவரும் ஒரு சிறந்த நடிகையாக மிளிர்கிறார் எனப்படுகிறது.
நாவலைப் போலவே திருப்பங்களுடனும், எதிர்பார்ப்புடனும் பொ.செ. 1 முடிகிறதாம். நாவலை வாசிக்காதவர்களுக்கு ஒப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதால் சிலவேளைகளில் பாகுபலி போன்ற எதிர்பார்ப்பை மனதில் நிறுத்தலாம். பாகுபலியின் பிரமாண்டம் அதன் பாத்திரங்களில் மிளிரவில்லை. Graphics compromised. பொ.செ. 1 அப்ப்டியில்லை. அது ஒரு crowd pleasing வகையானதல்ல, சரித்திரத்தையும், கல்கியையும் அது அடகுவைக்கவில்லை என்கிறார்கள்.
‘தியேட்டருக்குப் பின்னால் இரண்டு உருவங்கள் கத்திகளை உருவியபடி நிற்கின்றன’ என்று முடிக்க ஆசைதான். ஆனால் நான் கல்கியல்ல. பாருங்கள், பரவசமடையுங்கள், பிள்ளைகளையும் கூட்டிப் போங்கள்…