பொன்னியின் செல்வன் விவாதங்கள்: மாட்டிக்கொண்ட கமல்ஹாசன்
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் ராஜ ராஜ சோழனை ஒரு இந்துவெனக் காட்ட முனைகிறதென்றும் தமிழரின் அடையாளங்கள் வேண்டுமென்றே அழிக்கப்படுகிறதென்றும் சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துகள் தமிழ்நாட்டில் பெரும் விவாதங்களைக் கிளப்பி வருகின்றன. இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்தொன்றிற்கு சமூக வலைத்தள்ங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெற்றிமாறனின் கருத்து பற்றி கமல்ஹாசனிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நடிகர் கமல்ஹாசன் ” பொன்னியின் செல்வன் – 1 திரைப்படம் சோழர் காலத்தில் நடைபெற்றதாகக் கருதப்படும் சரித்திர சம்பவங்களைத் தழுவிய கல்கியின் கற்பனை நாவல். ராஜ ராஜ சோழனின் காலத்தில் ‘இந்து சமயம்’ என்றொரு சொல்வழக்கே இருந்திருக்கவில்லை. அப்போது வைணவம், சைவம், சமணம் ஆகிய மதங்களே இருந்தன. ‘இந்து’ என்ற பெயர் பிரித்தானியர்களால் கொடுக்கப்பட்டது. தூத்துக்குடியை அவர்கள் எப்படி ‘தூட்டிக்கோறின்’ என மாற்றினார்களோ அதுபோலத்தான் இதுவும். அவர்களுக்கு இம் மதங்களை எப்படி அழைப்பதென்று தெரியாது” எனத் தெரிவித்திருந்தார். இது இப்போது சமூகவலைப் போராளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
“எங்களது அடையாளங்கள் எம்மிடமிருந்து விரைவாக நீக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளுவர் சிலை மீது காவி போர்த்தல், ராஜ ராஜ சோழனை இந்துவாக்குதல் போன்று தற்போது தமிழரின் அடையாளங்கள் பல அழிக்கப்பட்டு வருகின்றன. நாம் எமது அடையாளங்களைப் பேண வேண்டும்” என இயக்குனர் வெற்றிமாறன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் 60 ஆவது பிறந்தநாள் விழாவில் பேசும்போது குறிப்பிட்டிருந்தார்.
வெற்றிமாறனின் கருத்துக்கள் தொடர்பாக மேலும் தெரிவித்த கமல்ஹாசன், ” நானும் அதையேதான் கூறுகிறேன். 8ம் நூற்றாண்டில் எம்மத்தியில் பல மதங்கள் இருந்தன. இவற்றையெல்லாம் ‘சன்மத ஸ்தாபனம்’ என்ற ஒரு ஒழுங்கின் கீழ் ஆதிசங்கரர் கொண்டுவந்தார். அது வரலாறு. அதை இங்கு கொண்டுவரவேண்டாம். பொன்னியின் செல்வன் – 1 என்ற சரித்திரப் புனைவைக் கொண்டாடவே நாம் இங்கு வந்திருக்கிறோம். வரலாற்றைப் புனையவோ அல்லது திரிபுபடுத்தவோ தேவையில்லை. மொழிப்பிரச்சினையையும் இங்கு இழுக்கத் தேவையில்லை” எனக் கூறியிருந்தமை பலரிடம் எதிர்ப்பைப் பெற்றுவருகிறது. “TamilsAreNotHindus” என்ற ஹாஷ்ராக் மூலம் இதுவரை 48,000 ருவீட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதே வேளை தமிழ்நாடு அரசின் இந்து அறக்கட்டளை அமைச்சை சைவ மற்றும் வைணவ அறக்கட்டளை அமைச்சுகளாகப் பிரிக்கும்படி தொல் திருமாவளவன் கேட்டிருக்கிறார்.