‘பொன்னியின் செல்வன்’ | திரையலசல் – பாகம் 2
“எப்படி எடுத்தாலும் நாவல்ல வந்த மாதிரி இல்ல”
கனடா மூர்த்தி

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி திரையலசல் – பாகம் 1இல் அலசியதற்கு பல பாராட்டுக்கள் கிடைத்தன. மூன்று தலைமுறைக்கு மேலாக தமிழில் படிக்கப்பட்டு வருகின்ற நாவல் அல்லவா.. ‘பதிவுகள்’ கிரிதரன் நம்ம அலசலையொட்டி தானும் பல சுவாரஸ்யமான தகவல்கைள பகிர்ந்தார். ‘தேசியம்’ பத்திரிகையின் ஆசிரியர் லங்காதாஸ் நம்ம அலசலை தன் முகப்புத்தகத்தில் பகிர்ந்தது மட்டுமல்லாமல் மணிரத்தினத்தின் படம் குறித்து சில கேள்விகளை தொடுத்தார். அருண் செல்லப்பா நாவலின் இனிமைபொங்கும் பகுதி திரைப்படத்தில் வரவேண்டும் என ஆதங்கப்பட்டார். ஊடகவியலாளர் விஜய் குலோத்துங்கம் ஒரு வரலாற்றுப் படமாக அது வெளிவரவேண்டும் என கருத்திட்டார். பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிலாகித்து தன் கருத்தை சுருக்கமாக இட்டார். இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் சிலாகித்துக் கருத்திட்டனர்.

அந்த அளவிற்கு நம்மவர்களில் பலருக்கும் கல்கியின் அந்தப் பொன்னியின் செல்வனில் ஒரு காதல்.
மோதலும் இருந்தது. வெள்ளைத்தாளில் கறுப்புப் புள்ளி தெரிவதுபோல, அலசலை அலசியவர்களும் இருந்தார்கள். நண்பன் ஒருவன் ‘இதைவிட்டா உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா” என்றுவிட்டான். உடனே அதற்கு இலங்கையில்ருந்து எதிர்வினை கிட்டியது. இன்னொருவர் “உங்களுக்கு இருக்கிற தமிழ் சினிமா பைத்தியம் எனக்கில்லையே..” என்று தன்னையிட்டுக் குறைப்பட்டுக் கொண்டார்.
‘வந்தியத்தேவன் எப்படி இருப்பான் திரைப்படத்தில் ஏமாற்றிவிடுவானோ?’ என்ற கவலை பலருக்கும் இருந்தது. அது ‘கல்கியின் பாத்திரங்களுக்கு அவர் கொடுத்திருந்த உயிரை இவர்களெல்லாம் சேர்ந்து திரையில் காட்சிப்படுத்துவார்களா என்ற சந்தேகத்தில் வந்தது. மறுமொழி ஆசிரியரும் களத்தில் குதித்து “வந்தியத் தேவனைச் சரியாகப் பிரதிபலிக்கக்கூடியவர் பாகுபலி புகழ் பிரபாஸ் மட்டுமே” என்றார். பாரீசில் இருந்து கவிஞர் சுகன் “கார்த்தி வந்தியத் தேவனுக்கு கொஞ்சமும் பொருந்திவராது.” என்றார்.

‘பதிவுகள்’ கிரிதரன் “கார்த்தியை விட சூரியாவின் முகப்பொலிவு நன்கு பொருந்தும். ஐஸ்வர்யராய்க்கு நந்தினி, மந்தாகினி பாத்திரங்கள் சரியான தேர்வு. குந்தவைக்கு என்னால் திரிஷாவைக் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க முடியாது. ஆனால் படம் வந்ததும் அவரது நடிப்பைப்பார்த்து இயக்குநர் எவ்விதம் அவரை உருமாற்றியிருக்கின்றாரென்பதைப்பொறுத்து முடிவு செய்யலாம். ஆனால் பொருத்தமானவர்கள் நயனதாரா அல்லது கீர்த்தி சுரேஷ். குந்தவையின் நிதானமான மதிநிறைந்த கம்பீரம் இவர்களிருவருக்கும் நன்கு பொருந்தும். விக்கிரமுக்கு ஆதித்த கரிகாலன் நன்கு பொருந்தும். பொன்னியின் செல்வனுக்கு ஜெயம் ரவி பொருத்தமில்லை’ என்று ரசனையுடன் பதிவிட்டார்.
கவனித்துப் பாருங்கள்.. இந்த அலசல்கள் எல்லாம் எதைச் சொல்கின்றன? ஒரு நாவலைப் படிக்கும்போது அது எப்படி எப்படியெல்லாம் நம் மனதில் அழகிய பிம்பங்களை உருவாக்கிச் செல்கிறது என்பதற்கு இவை உதாரணங்களன்றோ..?!!! இவற்றைப் படிக்குமபோது “பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு” என்ற “வராக நதிக்கரை ஓரம்” சினிமாப் பாடல் வரி நினைப்புக்கு வந்தது. ஆம்.. அந்த அஞ்சு வர்ணமும் ஒரு நாவல் திரைப்படம் ஆகுகிறது எனும்போது ரசனை மிகுந்தோர்க்கு தோன்றும் ரசிகமன எண்ணப்பாடுகள்தானன்றோ… “கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்!”
ஒரு நல்ல படைப்பை உருவாக்குகையில் படைப்பவர் மட்டுமா பரவசமடைவார்? பார்ப்பவரும்தானே.. பார்த்தாலே பரவசம்.. (‘டேய்.. இதைவிட்டா உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா’)
“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஒரு கட்டத்தில் மணிரத்னம் திரைப்படமாக எடுக்க நினைத்தார். அதற்காக ஒரு அருமையான திரைக்கதையும் செய்து வைத்திருக்கிறார். சில ஸீன்களை நான் கல்கியின் வரிகளை வைத்துக் கொண்டே எழுத ஆரம்பித்தேன். அப்போது இருவருக்கும் ஒரு சந்தேகம் வந்தது. ‘இந்தக் கதையை இதுவரை மூன்று தலைமுறைக்கு மேல் படித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் வந்தியத்தேவன் எப்படி இருப்பான்…நந்தினி எப்படி இருப்பாள்..என்று மனதில் ஒரு பிம்பத்தை வரித்திருப்பார்கள். அந்த பிம்பத்தை நிஜத்தில் நிறைவேற்றவே முடியாது. எப்படி எடுத்தாலும் ‘நாவல்ல வந்த மாதிரி இல்ல’ என்பார்கள். என்ன செய்வது என்று யோசித்தோம்.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா
ஒன்று நிச்சயம்.. வெறும் 1 டொலர் டிவிடியில் படம் பார்த்துப் பரவசமடையும் நமக்கே “வந்தியத்தேவன் எப்படி இருப்பான்..””நந்தினி எப்படி இருப்பாள்” என இப்புட்டு கரிசனம் இருக்கிறதென்றால், 800 கோடிக்குமேல் முதல் இடப்படும் ஒரு ப்ரொஜெக்ட்டை செய்து முடிப்பவர்கள் எவ்வளவு சிந்திப்பார்கள். அதுவும் மணிரத்தினம் போன்ற இன்டெலிஜன்ட் இயக்குனர் எவ்வளவு யோசிப்பார். (1) மூலக்கதையை கெடுக்காமல், (2) போட்ட முதல் திருப்பி எடுக்கும் வகையில் (3) வியாபாரத்தையும் நடத்தி (4) தனது பெயரை நிலை நிறுத்த எவ்வளவு யோசித்து யோசித்து, விவாதித்து விவாதித்து தீர்மானத்திற்கு வந்திருப்பார். நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது.
இந்த இடத்தில், பதினைந்து வருடங்களுக்கு முன்னர், இதே பொன்னியின் செல்வனை ஒருமுறை மணிரத்தினம் உருவாக்க நினைத்தபோது எழுதப்பட்ட கட்டுரையை பகிர்வது சாலப் பொருத்தமாகும். எழுத்தாளர் சுஜாதா பொன்னியின் செல்வனை மணிரத்தினத்தோடு சேர்ந்து உருவாக்க நினைத்தபோது எழுதியிருந்த கட்டுரை இது. (நன்றி: 19-06-2005 ஆனந்த விகடன்)
படித்துப் பாருங்கள்:
“கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை ஒரு கட்டத்தில் மணிரத்னம் திரைப்படமாக எடுக்க நினைத்தார். அதற்காக ஒரு அருமையான திரைக்கதையும் செய்து வைத்திருக்கிறார். சில ஸீன்களை நான் கல்கியின் வரிகளை வைத்துக் கொண்டே எழுத ஆரம்பித்தேன். அப்போது இருவருக்கும் ஒரு சந்தேகம் வந்தது. ‘இந்தக் கதையை இதுவரை மூன்று தலைமுறைக்கு மேல் படித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் வந்தியத்தேவன் எப்படி இருப்பான்…நந்தினி எப்படி இருப்பாள்..என்று மனதில் ஒரு பிம்பத்தை வரித்திருப்பார்கள். அந்த பிம்பத்தை நிஜத்தில் நிறைவேற்றவே முடியாது. எப்படி எடுத்தாலும் ‘நாவல்ல வந்த மாதிரி இல்ல’ என்பார்கள். என்ன செய்வது என்று யோசித்தோம்.

‘பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைக்க வேண்டாம். வந்தியத்தேவனின் பார்வையில் கதை சொல்வதால் ‘வந்தியத்தேவன்’ என்று வைத்துவிடலாம் என்றேன். இதனிடையே பொன்னியின் செல்வன் கதையை டிவி சீரியலாக ஒரு வழி பண்ணப்போவதாக மூன்று பேர் அறிவித்தார்கள். மணி ஒதுங்கிவிட்டார்.
மணியின் லைன் அருமையாக வந்திருந்தது. முழு நாவலின் சாரத்தை எண்பது ஸீன்களில் அடக்கியிருந்தார். எடுத்திருந்தால் நல்ல திரைப்படமாக வந்திருக்கும். எடுக்காததற்கு இன்னொரு காரணம் பட்ஜட் !!
ஓரிரு ஜட்கா வண்டிக்குதிரைகளை வைத்துக் கொண்டு படத்தை எடுக்க முடியாது. ஒழுங்காக எடுக்க நிறைய செலவாகும். அகில இந்திய அளவில் எடுத்தால்தான் கட்டுப்படியாகும். சுந்தர சோழரும், பழுவேட்டரையரும் ஹிந்தியோ, ஆங்கிலமோ பேசினால் குழந்தைகள் பயந்துவிடும் என்று கைவிட்டோம்.
அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஓபராய் போன்றவர்களை வைத்து இந்திப்படம் பண்ணத் தீர்மானிக்கலாம். பொன்னியின் செல்வன் தொடர்ந்து காத்திருக்கிறான்.
ஷங்கர் மணி ரத்னம் இணைந்து கமல், ரஜினி, விக்ரம், சூர்யா, விஜய், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், நாஸர், பசுபதி, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா, த்ரிஷா ….எல்லோரும் நடிக்க ராஜாவும், ரஹ்மானும் இசையமைக்க, ஸ்ரீராம் கேமராவை இயக்க, தோட்டா தரணி செட் அமைக்க ஒப்புக்கொண்டால் நாற்பது கோடியில் செய்யலாம்.”
படித்தீர்களா..? (எப்படி எடுத்தாலும் ‘நாவல்ல வந்த மாதிரி இல்ல’ என்பார்கள் என்கிறார் சுஜாதா.)
பதினைந்து வருடங்களுக்கு முன்னர் – அக்காலப்பகுதியில் தமிழ்பேசும் நல்லுலகெங்கும் மிகப் புகழ்பெற்ற கமல், ரஜினி, விக்ரம், சூர்யா, விஜய், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஸ்ரீராம் , தோட்டா தரணி என தமிழ்த் திரைப்பட Expensive பிரபலங்கள் அனைவரையும் வைத்து – நாற்பது கோடியில் படமாக்கலாம் என நினைத்து செய்ய முடியாமல் போனதொரு திரைப்படம் இன்று சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. செலவு 400 கோடி இந்திய ரூபாய்கள்!
“நான் படிக்கேக்க என்ரை மனதில வந்த அந்தக் கற்னைப் பாத்திரம் நான் நினச்ச மாதிரி அப்படியே இருக்க வேண்டும்” என நாங்கள் புலம்பிக்கொண்டிருக்க… ‘தன்னை நம்பிய தயாரிப்பாளரை ஏமாற்றக்கூடாது; தனது பெயரை காப்பாற்ற வேண்டும்’ என இயக்குனர் நினைப்பார். ‘இந்த வாய்ப்பு சும்மா வராது, என்னிடம் இருக்கும் ஏதோ ஒரு திறமைக்கு அங்கீகாரமாகக் கிடைத்த பெரிய வாய்ப்பை தவறவிடக்கூடாது’ என நடிகர்கள் நினைப்பார்கள். ‘பணம் மட்டும் பெரிதல்ல.. இந்த பெரும் ப்ரொஜெக்ட்டில் ஈடுபடுவதே பெருமிதமாகும் ‘என இசையமைப்பாளர், தொழில்நுட்பவியலாளர்கள் சிந்திப்பர். அவரவருக்கு அவரவர் கவலை..”சறுக்குவதற்கான சந்தர்ப்பங்கள் ஏராளம்.. ஏராளம் என்பதுதான் யதார்த்தம். அதையெல்லாம் புரிந்து கொண்டு சாதிக்கத் துடிப்பதுதான் கலைஞனின் மனம்.” என்றுதான் இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
“கதை சரியா வருமா..?” “நடிப்பு சரியா வருமா?”, “இசை சரியாவருமா?”, “இயக்கம் சரியா வருமா?” என ரசிக மனத்துடன் நாங்கள் கவலைப்பட இதையெல்லாம் புரிந்த நிலையில் சுமார் 75 மில்லியன் கனடிய டொலர்கள் பெறுதியான இந்திய ரூபாய்களை (4000000000) கொட்டி ஒரு தனிப் படத்தைத் தயாரிக்கும் லைகா சுபாஷ்கரனுக்கு என்ன தெனாவெட்டு இருக்க வேண்டும். கற்பனைப் பாத்திரமான வந்தியத்தேவனையும் மீறி நிற்கும் தெனாவெட்டு.
இவன்தான் உண்மையான ஹீரோ.