சிரி லங்கா (4): பொன்னர் பாட்டியும் 13ம்
கிசு கிசு கிருஷ்ணானந்தா
“சரி அப்ப நீ என்ன சொல்லுற? பொன்னற்ற பெடி இத்தனையாயிரம் பேரை பஸ் பஸ்சாக் கொண்டந்து இறக்கினது சும்மா பூச்சாண்டி காட்டிறதுக்கெண்டு சொல்லுறியோ”? என்றார் வடிவேலர்.

“அப்பிடி நான் சொல்லேல்ல வடிவேலர். இந்த ஊர்வலத்தை இப்ப நடத்திறதுக்கு என்ன தேவை? சரி 87 இல தமிழ்த்தரப்புகள் 13 ஐ நிராகரிச்சதெண்டு பொன்னர் சொல்லுறேர். அதால என்ன கிடைச்சது? அப்பவேனும் இயக்கங்கள் பலத்தோடு இருந்தன. இப்ப பொன்னர் என்னத்தை வச்சுக்கொண்டு நிராகரிக்கச் சொல்லுறேர்? திருகோணமலை முக்காவாசி போயிட்டுது, அம்பாறை அரைவாசி போயிட்டுது. வவுனியா தளம்பிக்கொண்டு நிக்குது. இதையெல்லாம் சிங்களமயமாக்கிறதை நிப்பாட்டிறத்துக்கு பொன்னர் என்னத்தை வச்சிருக்கிறேர்? சொல்லுங்க பாப்பம்?”
“கிருசு, சரி பொன்னரட்டத்தான் ஒண்டுமில்லை, இப்ப இந்த ஏழு கட்சியும் சேர்ந்து கையெழுத்துப் போட்டுக் குடுத்தத்தால மட்டும் 13 கிடைச்சிடுமே?
“வடிவேலர், இந்த ஏழு கட்சிகளும் தமிழ் மக்களின்ர பிரச்சினைகளைத் தீர்க்க ஓடோடிவந்து, அதுவும் ஒத்தக்கரட்டையைக்கூட ஒழுங்கா இழுக்காத இந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், ஏழு குதியளைப் பூட்டின இந்த வண்டிலில ஒழுங்கா இழுக்குமெண்டு நினைக்கிறியளோ? இது இந்தியாவின்ர வேலை. அதின்ர ஸ்கிறிப்ட்டில தான் இது எல்லாம் நடக்குது. எங்களை வைச்சு அது இலங்கையைத் தன்ர காலில விழ வைக்கப் பாத்து அதில வெற்றியும் கண்டிருக்குது. தமிழ்நாட்டில புலியள மீள உருவாக்கும் முயற்சிகள் நடக்குது எண்டு சும்மா வெளிநாட்டுக்குப் போக அங்க நிண்ட சனங்களையும், தூள் கடத்தல்காரங்களையும் பிடிச்சுப்போட்டு இவங்கள் ‘புலியள்’ எண்டு இந்தியா விடுகிற விடுகையெல்லாம் இலங்கையை வெருட்டுறதுக்கு. இல்லையெண்டு சொல்லுவியளோ?
“எனக்கு விளங்கேல்ல கிருசு”
“இப்ப பாருங்கோ வடிவேலர், என்னத்தைச் சொன்னாலும் சிங்கள மக்களுக்கும் போர் வெறுத்துப்போயிட்டுது. அதுவும் இப்ப இருக்கிற பொருளாதாரச் சூழலில, ராஜபக்ச குடும்பம் போரை வைச்சு உழைச்சிட்டுது எண்டு தெரிஞ்சபிறகு அவைக்கு இன்னொருக்காப் புலியள் சண்டை தொடங்கிறது ஒத்துவரக்கூடிய விசயமில்லை. 13 ஓ அல்லது என்ன சனியனோ குடுத்து பிரச்சினையை முடிச்சுவிடுங்கோ எண்ட நிலைமைக்கு இப்ப அதுகள் வந்திட்டுது. இந்தியாவுமோ “நீங்க இதைக் குடுத்துவிடுங்கோ புலி திரும்பவும் வாறத்தை நாங்க பாத்துக்கொள்கிறம்” எண்ட வகையில கேம் விளையாடுது. நாங்களும் பலமிழந்து போயிருக்கிற நிலைமைக்கு, அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் விளையாட்டுகள் இப்ப ரஷ்யாவோட தனகிக்கொண்டிருக்கிற நிலைமையில, எங்களுக்கு இந்தியாவோட, அதின்ர கேமோட கேமாக விளையாடுவதைத் தவிர வேறு வழியில்லை. இது சுமந்திரன் பாட்டிக்குத் தெரியாமக் கையெழுத்து வைக்கேல்ல. அந்தாளைத் தெரியும்தானே கொடுப்புக்குள்ள சிரிச்சுக்கொண்டு இந்த ஏழுபேரின்ர கையெழுத்தையும் வாங்கிக்குடுத்திருக்கும். இல்லாதுபோனா, மற்றதுகளை விடுங்கோ மாவையைக் கொண்டாறதே கஷ்டமா இருந்திருக்கும்”
“நீ சொல்லுறதிலயும் ஞாயம் இருக்குத்தான் கிருசு. அப்ப ஏன் இந்த பொன்னர் பாட்டி 13 ஐக் கண்டாச் சிம்ம சொப்பனம் கண்டமாதிரித் தொண்டை கிழியக் கத்துது?”
“அதுக்கு வேற காரணமிருக்கு. பாருங்கோ இந்த பொன்னர் பாட்டியின்ர விளையாட்டை. ஒற்றையாட்சிக்குள் தீர்வு வேணாம் எண்டு 1,500 பேரைக் ஒண்டு கத்துறாங்கள். ஆனா அங்க பாராளுமன்றத்தில இந்த ஒற்றையாட்சி சொன்னபடி சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டுதானே போய் நித்திரகொண்டிட்டு வாறாங்கள்? சரி அதை விடுவம் இவை சொல்லுறபடி ஒத்தையாட்சி வேணாமெண்டால் அவை சொல்லிறமாதிரி ஒரு நாடு இரு தேசம் எண்ட, இரட்டை ஆட்சியை எடுக்கிறதுக்கு இவையிட்ட என்ன பொறிமுறையிருக்கு? இப்ப தயாராயிருக்கிற புது அரசியலமைப்பில 13ம் இல்லை, மாகாணசபைகளுமில்லை. அந்த ஒத்தையாட்சி வரேக்குள்ள இவை என்ன செய்யப்போகினம்? திரும்பி ஆயுதம் தூக்கப் போயினமோ?. இல்ல தெரியாமத்தான் கேக்கிறன்”
“இதுக்கேன்ராம்பி உனக்கு ஏறுது. சும்மா கேட்டன். என்ன இருந்தாலும் இவங்களை நம்பி 1,500 சனம் வந்திருக்குத் தானே. அது தான்….”
“அண்ண, உங்களுக்கு ஞாபகமிருக்கே பிரிட்டிஷ் பிரதமர் யாழ்ப்பாணம் வந்தபோது சம்பந்தன் ஐயாவின்ர காரைத் திறந்து அவரைத் தூசணத்தால பேசிக் கலைச்சதுகள் எங்கட சனம். அதே வேளை தங்கட பிள்ளையளைக் கொண்ட ஆமிக்காரனின்ர காலிலை விழுகிறதும், மைத்திரிபால சிரிசேனவின்ர காலில விழுகிறதும் என்னத்துக்கெண்டு நினைக்கிறியள்? பிள்ளையளைப் பறிகொடுத்த தாய்மாரின்ர மனம் அப்பிடித்தான் உணர்ச்சிவசப்படும். இந்த ஊர்வலமும் காணாமற்போனவர்களை முன்வைச்சு ஒழுங்குசெய்த ஒண்டுதான். 13 கிடைத்தால் காணாமற்போனவர்கள் பற்றி அழுத்தம் கொடுப்பதை தமிழ்க் கட்சிகள் விட்டுவிடுமெண்ட ஒரு பயத்தை பொன்னர் பாட்டி சொல்லிக்கொண்டுவருகுது. அதனால தான் இவ்வளவு சன்மெண்டு நான் நினைக்கிறன். அதுகளையும் பிளைசொல்லேலாது”
“அதுசரி, பொன்னர் பாட்டி இலங்கை அரசின்ர திட்டங்களுக்கு அமையவே செயற்பட்டு வருகுது எண்டு எங்கட சுரேசர் சொல்லுறார். அதில ஏதும் உண்மை இருக்குமெண்டு நினைக்கிறியோ?”
“அதில கொஞ்சம் சாடை மாடையான உண்மை இருக்கிறது போலத்தான் தெரியுது. இந்த கூட்டம் நடந்த இடத்துக்குப் பக்கத்தில இருந்த செண்ட் ஜேம்ஸ் சேர்ச்சில் பூசை நடந்தபோது இவங்கள் ஒலிபெருக்கியில சத்தம் போட்டதைக் கொஞ்சம் நிப்பாட்டச்சொல்லி சேர்ச் காரர் கேட்டவையாம். அதை இவங்கள் உதாசீனம் செய்ததால பொலிசில கொம்பிளெயிண்ட் குடுக்கப் போக அவங்கள் “இதுக்கு அனுமதி குடுக்காவிட்டா அதை வேற விதமாக அவங்கள் திருப்பி விடுவாங்கள்” எண்டு சொல்லி அனுப்பிப்போட்டுதாம். முள்ளி வாய்க்கால் மற்றது இந்த காணிபிடிக்கிற இடங்களில நாலைஞ்சுபேர் கூடிறத்தையே அனுமதிக்காத பொலிஸ் தமிழ்த் தேசியக் கொடிகளோட நடந்த இந்தப்பெரிய கூட்டத்தை அனுமதித்ததற்குக் காரணம் 13 ஐ எதிர்க்கிற விடயத்தில அரசாங்கமும் பொன்னர் பாட்டியும் ஒரு பக்கம் தானே. அதைச் சுரேசர் சொன்னபடியால அதுக்கு அவ்வளவு வெயிட் இருக்காது. இதில பகிடியென்னெண்டா அண்ணை, 13ம் வேணாம் ஒண்டும் வேணாமெண்டிற பொன்னர் பாட்டி மாகாணசபைத் தேர்தல் எண்டு வந்தால் அதில தாங்க போட்டி போடுவம் எண்டும் அறிவித்திருக்குது தெரியுமோ. இந்த ஊர்வலம் அத் தேர்தலுக்கான பில்டப். சுமந்திரனுக்கு எதிரான பில்டப். அப்ப சுரேசர் எங்க நிக்கிறாரோ தெரியாது, அது வேற விசயம்” சிரித்தபடியே கிருசு சைக்கிள் சீட்டைத் தட்டினார்.
“உனக்கு சுரேசில ஒரு இது” என்றபடி வடிவேலர் வாடிக்கைக் கள்ளுக்கொட்டிலை நோக்கி அமத்திகொண்டு பறந்தார்.