Spread the love

பொதுவிடங்களில் சஞ்சரிக்கும் அனைவரும் முகவாய்க்கவசமணிதல் வேண்டும் என அமெரிக்க நோய்க் கட்டுபாட்டு மையம் பரிந்துரைக்கின்றது.

கொறோனாவைரஸ் நோய்த் தொற்று அமெரிக்காவை உலுப்பிக்கொண்டிருக்கும் இவ் வேளையில், முகவாய்க் கவசம் அணிவதிலுள்ள பயன்பாடு பற்றி நிபுணர்கள் மத்தியில் பல முரண்பாடான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந் நிலையில், நோய்க் கட்டுப்பாட்டு மையம் இப்பரிந்துரையைச் செய்திருக்கிறது.

கொறோனாவைரஸ் நோய்த்தொற்று விடயத்தில் உலகம் முழுவதும், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளையே பின்பற்றி வருகிறது. நோய்த் தொற்று இல்லாத சுகதேகிகள் முகவாய்க் கவசம் அணியத் தேவையில்லை என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடு. கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் அது தனது நிலைப்பாட்டில் உறுதியாயுள்ளமை பற்றி விளக்கியிருந்தது.

முகவாய்க் கவசங்களின் தட்டுப்பாட்டினால் முன்னணி சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறதென்பதும் அதே வேளை சுகதேகிகள் பெருமளவு வாங்கிப் பதுக்கிக் கொள்தலும் இம் முடிவை எடுப்பதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இப்போதுவரை, நோய்க்கட்டுப்பாட்டு மையமும் இதே நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்திருக்கிறது. ஆனால், மருத்துவ ரீதியாக முகவாய்க்கவசம் ஒருவரைத் தொற்றிலிருந்து காப்பாற்றுகிறது என்ற நம்பிக்கையில் அவர் நோய்த் தடுப்பு விடயங்களில் அசமந்தப் போக்கைக் காட்டிவிடக்கூடும் என்ற கரிசனையே, சுகதேகிகளின் கவசப் பாவனைக்கு எதிராகப் பல நிபுணர்களாலும் எழுப்பப்பட்டு வந்துள்ளது.

அமெரிக்காவில், குறிப்பாக நியூ யோர்க்கில் பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) தட்டுப்பாடு அதிகமாயிருப்பதனால், இக் கவசங்களைத் தயாரிக்கும் பிரதான நிறுவனமான 3M, வெளிநாடுகளுக்கு கவசங்களை விற்பனை செய்யக்கூடாது என நேற்று ஜனாதிபதி ட்றம்ப் உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையைத் தாம் சட்டை செய்யப் போவதில்லை எனவும், சகலரும் பொது இடங்களில் முகவாய்க் கவசங்களை அணியவேண்டுமெனவும் பணித்துள்ளார். அவரது வாதத்துக்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருந்த போதிலும், அவர் தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாகவுள்ளார்.

நோய்க் கட்டுப்பாட்டு மையமும் ஜனாதிபதியின் பணிப்பைப் பிரதிபலித்து இன்று இப் பரிந்துரையைச் செய்திருக்கிறது. ஆனால், அதன் பரிந்துரையில், பொதுமக்கள், மருத்துவ தர கவசங்களைத் தவிர்த்து சாதாரண தரத்திலானவற்றை அணியும்படி கூறியிருக்கிறது.

“பொதுமக்கள், தாமாகவே எந்தவொரு துணியைக் கொண்டும் முகவாய்க் கவசத்தைத் செய்துகொள்ளலாம். அது இலகுவாகச் செய்யக்கூடியது. தனிப்பட்ட முறையில் நான் அதைச் செய்யப் போவதில்லை ஆனால் அதை நான் பரிந்துரைக்கிறேன்” என ஜானாதிபதி ட்றம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சேர்ஜன் ஜெனெரல் டாக்டர் ஜெறோம் அடம்ஸ், அரசாங்கத்தின் பரிந்துரைக்கு இணங்கிப்போகிறார். “கவசங்களின் பாவனை மக்களைக் குழப்பியிருக்கிறது” என்பதையும் அவர் ஒத்துக்கொள்கிறார்.

இதுவரை காலமும், சுகாதார சேவைப் பணியாளர்களும், நோய் அறிகுறிகளைக் கொண்டவர்களும் மட்டுமே முகவாய்க் கவசங்களை அணியவேண்டுமென நோய்க் கட்டுப்பாட்டு மையம் அறிவித்து வந்தது.

Related:  100 மில்லியன் அளவுகள் (doses) ரஷ்யாவின் கோவிட்-19 தடுப்பு மருந்தை இந்தியா வாங்குகிறது

சுகதேகிகள், நோய்த்தொற்றுள்ளவர்களைப் பராமரிக்க வேண்டி ஏற்படும் பட்சத்தில் மட்டுமே கவசங்களைப் பாவிக்கவேண்டுமென அது பரிந்துரைத்து வந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடும் அதுவே.

தற்போது, அமெரிக்க அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டது.

அதே வேளை,கொறோனாவைரசைப் பற்றியும், அதன் நோய்ப்பரவல் திறனைப் பற்றியும் மேலும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. ஏறத்தாள 25% வீதாமனவர்கள் எவ்வித நோயறிகுறிகளையும் காட்டுவதில்லை எனவும், அவர்களாலே நோய் பரம்புதல் வேகமடைகிறது எனவும் தெரியவந்துள்ளது. அத்தோடு, நோயின் அறிகுறிகள் குறைவாக உள்ளபோதே வைரஸின் பலமும் அதன் பரவும் வேகம் அதிகரிப்பதும் நடைபெறுகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது.

இன்று நோய்க்கட்டுப்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில், “பொதுவிடங்களில் சஞ்சரிக்கும் மக்கள் தங்களது மூக்கையும், வாயையும் மறைக்கும் கவசங்களை, அவை சாதாரண துணிகளாயிருந்தாலும் கூட, அணிதல் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

அதே வேளை, மருத்துவதர முகவாய்க் கவசங்களின் தட்டுப்பாட்டினால், அமெரிக்காவில், சுகாதாரப் பணியாளர் N95 வகையான கவசங்களை எறிந்து விடாமல் மீண்டும் மீண்டும் பாவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பொதுமக்கள், தாம் சுயமாகத் தயாரித்த கவசங்களை அணிந்தாலும், அடிக்கடி கைகளைக் கழுவும் பழக்கத்தை விட்டு விட வேண்டாம் என அறிவுறுத்துகிறார் சேர்ஜன் ஜெனெரல்.

Print Friendly, PDF & Email
பொதுவிடங்களில், சகலரும் முகவாய்க் கவசமணிதல் வேண்டும் – நோய்க் கட்டுப்பாட்டு மையம்

பொதுவிடங்களில், சகலரும் முகவாய்க் கவசமணிதல் வேண்டும் – நோய்க் கட்டுப்பாட்டு மையம்