Spread the love

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடும்போது தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளும் 100% கொள்ளளவில் செயற்பட அனுமதிக்கவேண்டுமென நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதை எதிர்த்து பலரும் தமது சமூக வலைத் தளங்களின் மூலம் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பல நடிகர்களும், திரையரங்குகளின் சொந்தக்காரர்களும் இவ்வறிவித்தலை வரவேற்றிருப்பினும், இதன் மூலம் கோவிட்-19 தொற்று மிக வேகமாகப் பரவப் போகிறது எனவும் அதனால் பொதுமக்களும் முன்னணி மருத்துவப் பணியாளர்களும் ஆபத்துக்குள்ளாக்கப்படுகிறார்கள் எனவும் வலைத்தளங்களின் மூலம் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்துத் திரையரங்குகளும் அரைவாசி (50%) இருக்கைகளையே நிரப்பிக்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பொங்கல் தினத்தன்று வெளிவரும் தனது மாஸ்டர் படத்திற்காகத் திரையரங்குகளை 100% இருக்கைகளுடன் செயற்பட அனுமதிக்கும்படி நடிகர் விஜய், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்துக் கேட்டிருந்தார். அதற்கமைய திரையரங்குகள் 100% இருக்கைகளை அனுமதிக்கலாமென அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

நடிகர் சிலம்பரசனின் ஈஸ்வரன் படமும் பொங்கலன்று வெளிவருவதால் தமிழக அரசின் இந்நடவடிக்கையை அவரும் ஆதரித்துள்ளார். நடிகைகள் ராதிகா, குஷ்பு ஆகியோரும் அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.



இருப்பினும் செயற்பாட்டாளர்கள், மருத்துவ சமூகம், சமூகவலைத்தளப் போராளிகள் எனப் பலரும் இந் நடவடிக்கைக்குப் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.

நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜையின் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதற்காக முதல்வர் பழனிச்சாமி இதற்குத் துணை போகிறார் எனவும், நடிகர் விஜய் போன்றோர் மக்களின் நலன் மீது அக்கறையில்லாமல், தமது வருமானத்தை மட்டுமே குறியாகக் கொண்டு சுயநல நோக்கத்தோடு செயற்படுகிறார்கள் எனவும் வலைத்தளங்கள் மூலம் மக்கள் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email