பொதுப் பணியாளர்கள் மத அடையாளங்கள் அணிவது தடை செய்யப்படலாம்- கியூபெக் மாகாண அரசு -

பொதுப் பணியாளர்கள் மத அடையாளங்கள் அணிவது தடை செய்யப்படலாம்- கியூபெக் மாகாண அரசு

ஒக்டோபர் 1ம் திகதி நடைபெற்ற கியூபெக் மாகாண அரச தேர்தலில் கோலிஷன் அவெனி கியூபெக் (Coalitions Avenir Quebec -CAQ) கட்சி 74 ஆசனங்களைப் பெற்று அபார வெற்றியைப் பெற்றது. 2011 இல் இருந்து இக் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வந்தாலும் இந்த தடவைதான் அது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இம் மாகாணத்தின் ஆட்சி லிபரல் மற்றும் கியூபெக்குவா கட்சி இரண்டுக்குமிடையேதான் மாறி வந்திருக்கிறது.

CAQ கட்சியின் தலைவர் பிரான்ஸுவா லெகோ (François Legault) ஒரு முன்னாள் பிரிவினைவாதி, கியூபெக்குவா கட்சியின் அங்கத்தவர். பின்னளில் அவர் கனடிய தேசிய கட்டமைப்புக்குள் கியூபெக் மாகாணம் இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் ஒருவராக மாறிவிட்டார். இருப்பினும் பிரன்ச்சு கலச்சாரம் மற்றும் மொழியைப் பேணுவதில் அவரது நிலை தொடர்ந்தும் கடும் போக்காகவே இருந்து வருகிறது.

2018 தேர்தலில் அவர்து கட்சி மாகாண குடிவரவு, கலாச்சாரம், மொழி போன்ற விடயங்கள் சம்பந்தமான சில கொள்கைத் திட்டங்களைத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்த்திருந்தனர். தாம் ஆட்சீகு வந்தால் கியூபெக் மாகாணத்துக்குப் புதிதாக வருபவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பிரஞ்சு மொழியைக் கற்றிருக்க வேண்டுமெனவும், கலாச்சார விழுமியங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமெனவும் அல்லாது போகில் அவர்கள் அம் மாகாணத்தை விட்டு அப்புறப்படுத்தப்படுவர் எனவும் அக் கட்சி அறிவித்தது. அத்தோடு, அம் மாகாணத்தில் பொதுப்பணிகளில் வேலை செய்பவர்கள் (Public Service) தமது மத அடையாளங்களைப் பகிரங்கமாக அணிய முடியாது எனச் சட்டமியற்றப் போவதாகவும் புதிய அரசு எச்சரித்திருக்கிறது. யூதர்கள் அணியும் தலைக் கவசம், முஸ்லிம்கள் அணியும் தலைக் கவசம் மற்றும் பெரிய அளவிலான சிலுவைகள் ஆகியன இந்த மத அடையாளங்களுள் அடங்கும்.

மத அடையாளங்களைத் தடை செய்ய வேண்டுமென இதற்கு முன்னரும் வேறு கட்சிகள் முன் வைத்தபோது அது கனடிய மனித உரிமைப் பட்டயத்துக்கு (Charter of Rights and Freedoms) மாறானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சமீபத்தில் ஒன்ராறியோ மாகாண அரசு எவ்வாறு பாடயத்தில் கொடுக்கப்பட்ட வழி மீறும் சலுகையைப் பாவித்து நீதி மன்றத் தீர்ப்பை மீறித் தன் சட்டத்தை நிரூபணம் செய்ததோ அதே நடை முறையைத் தானும் பாவித்து மத அடையாளங்கள் மீதான நீதிமன்றத் தீர்ப்பையும் வழி மீறப் போவதாக ப்ரான்ஸுவா லெகோ அறிவித்திருக்கிறார்.

உலகம் முழுவதும் ஆர்ப்பரித்து வரும் இனக் குழுமங்களின் தேசிய எழுச்சி, குறிப்பாக வலது சாரிகளின் செயற்பாடுகள் ஜனனாயக வழிமுறைகளைத் தம் வசப்படுத்தி ஒடுக்கப்பட்ட இனங்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக உருக்கொண்டுவிடுமோ என்ற அச்சம் நிஜமாக மாறிக்கொண்டு வருவதாகவே படுகிறது.

 

Please follow and like us:
error0