பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்கவிருக்கிறது


டக்ளஸ், பிள்ளையான், அத்தவுல்லா, ரத்தன தேரோ கட்சிகள் பங்காளிகளாகலாம்?

ஆகஸ்ட் 7, 2020: தேர்தலில் கிடைத்த பெருவெற்றியைக் கொண்டு, பங்காளிக்கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன முயற்சிகளை எடுத்துவருகிறது எனச் செய்திகள் கசிந்துள்ளன.

இந்த தேர்தலில் பொதுஜன பெரமுன 128 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 17 ஆசனங்களையும் கைப்பற்றியதன் மூலம் மொத்தம் 145 ஆசனங்களை வைத்திருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலும் 6 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், டக்ளஸ் தேவானந்தா வின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 2 ஆசனங்களையும், பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 1 ஆசனம், அத்தாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் 1 ஆசனம் மற்றும் அத்துரலிய ரத்தன தேரோவின் அப்பே ஜன பல கட்சியின் 1 தேசியப் பட்டியல் ஆசனத்தையும், அங்கஜனின் சுதந்திரக்கட்சி யாழ்ப்பாணத்தில் பெற்ற 1 ஆசனத்துடன், 151 ஆசனங்களுடனான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட தேசிய அரசாங்கமொன்றை அமைக்க பொதுஜன பெரமுன தயாராகுவதாக்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே வேளை எதிர்க் கட்சிகளில் இருக்கும் பலரும் பொதுஜன பெரமுனவுக்குத் தாவுவதற்குத் தயாராகவுள்ளதாகவும் அது கைகூடும் நிலையில் தமிழ்ப் பங்காளிக் கட்சிகள் கைவிடப்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.

சஜித் பிரேமதாசவின் சமாகி ஜன பலவேகய கட்சியிலிருந்தும், ஐ.தேசியக் கட்சியிலிருந்தும் பெரெமுனவுக்குத் தாவுவதற்கான பேரங்கள் தேர்தலுக்கு முன்பே பேசப்பட்டதாக முன்னர் பரவலாக ஊடக கருத்தாளர்கள் தெரிவித்திருந்தனர்.