பொதுஜன பெரமுன கட்சியை அரசியலிலிருந்து ஒதுக்க புலம்பெயர் தமிழர்கள் முயல்கிறார்கள் – பிரசன்னா ரணதுங்க

சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களை அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கு சமாகி ஜனபலவேகய (SJB), ஜனதா விமுக்தி பெரமுன (JVP), முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP) ஆகியனவும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் தொடர்பான சில சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து பொதுஜன பெரமுன கட்சியை ஓரம்கட்ட முயல்கிறார்கள் என அமைச்சர் பிரசன்னா ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 12) கொழும்பில் நடைபெற்ற பொதுஜன பெரமுன மற்றும் கம்பஹா மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்ட கூட்டமொன்றில் பேசும்போது ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைப் பட்டியலிலிருந்து சில அமைப்புகள் நீக்கப்பட்ட விடயம் தொடர்பாக அவர் இக் கருத்தை வெளியிட்டார்.

 “நாட்டில் இருக்கும் குழப்பகரமான நிலைமையைப் பாவித்து அடுத்த தேர்தலில் பொதுஜன பெரமுன தத்துவார்தத்தை முறியடிப்பதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சதிகாரர்கள் முயல்கிறார்கள். தொடர் போராட்டங்களால் பொதுஜன் பெரமுனவின் செல்வாக்கு சரிவடைந்திருந்தாலும் 2020 பாராளுமன்ற தேர்தலில் மக்கள் கொடுத்த ஆணையை நாம் மறுதலிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.