Spread the love

பொட்ஸ்வானா நாட்டில், இந்த வருடம் மே மாதத்திலிருந்து 350 யானைகள் வரை மர்மமான முறையில் இறந்துள்ளன. ஒகவாங்கோ சதுப்புநிலப் பிரதேசத்தில் இச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

‘எல்லைகளற்ற யானைகள்’ என்ற அமைப்பு கடந்த மே மாதத்தில் விமான மூலம் சேகரித்த தரவுகளின்படி 169 யானைகளின் உடல்கள் காணப்பட்டிருந்தன. ஜூன் மாதம் அது 356 ஆக உயர்ந்துவிட்டது. அவற்றின் உடல்களிலிருந்து தந்தங்கள் அகற்றப்படாமையால் தந்த வியாபாரிகளால் இய்யானைகள் கொல்லப்படவில்லை என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. சில யானைகள் இறப்பதற்கு முன்னர் வட்டமாகச் சுற்றிக்கொண்ட பின்னர் முகத்தை நிலத்துள் புதைத்தபடி படுத்துக்கொண்டன என சில சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.

<iframe width="400" height="500" frameborder="0" src="https://www.bbc.com/news/av/embed/p071q69x/47330414"></iframe>

யானைகளைக் கொல்வதற்கு அரசாங்கம் யோசனை

2014 இல் இயன் காமாவின் அரசு ஆட்சியில் இருந்தபோது, வனவிலங்குப் பாதுகாப்பு செயற்பாட்டாளர்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து, யானைகள் வேட்டையாடப்படுவது தடைசெய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பொட்ஸ்வானாவில் யானைகளின் எண்ணிக்கை பெருகிவந்தது எனக்கூறப்ப்டுகிறது. இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 130,000 யானைகள் வரையில் அங்கு வாழ்ந்ததாகத் தெரிகிறது.

இத் தொகை அந் நாட்டின் இயற்கைச் சமநிலையைப் பேணமுடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது என மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வந்ததால், 2018 ஏப்ரலில் ஆட்சிக்கு வந்த, ஜனாதிபதி மொக்வீட்சி மசீசியின் அரசு இத் தடையை நீக்குவது பற்றி யோசனை செய்து வந்தது. புதிய அரசின் மந்திரிசபை, யானைக்குறைப்புக்கான சில திட்டங்களையும், அவற்றில் ஒன்றாக யானைகளின் இறைச்சியைத் தகரங்களில் அடைத்து விலங்குணவாக விற்பனை செய்யலாம் என்றொரு திட்டத்தையும் பரிந்துரைத்திருந்தது.

யானைகள் கொலை செய்யப்படுவது தடைசெய்யப்பட்டது முதல் நாட்டின் சுற்றுலா வருமானம் அதிகரித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, தடை நீக்கப்பட்டால் உலக அரங்கில் நாட்டின் மீதான நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுமென வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புக்கள் அரசுக்கு அழுத்தங்களையும் கொடுத்துவந்திருந்தன.

Some of the elephants were seen walking in circles before collapsing face-first into the earth in Botswana.படம்: ‘எல்லைகளற்ற யானைகள்’ அமைப்பு

இப்படிப் பெருத்தொகையான அளவில் யானைகள் இறப்பதற்கான காரணங்கள் தெரியாதபோதும், இறந்தவற்றின் உடல்களைப் பரிசோதனை செய்தபோது அவற்றில் அந்திறக்ஸ் (anthrax) பக்டீரியத்தின் தடயங்கள் காணப்படாமையால் உயிரியல் பயங்கரவாதம் அங்கு நடைபெற்றிருப்பததுக்குச் சாத்தியமில்லை என ‘எல்லைகளற்ற யானைகள்’ அமைப்பின் ஸ்கொட் ஸ்கொல்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.இது முதல் தடவையல்ல

பொட்ஸ்வானாவில் யானைகள் கொத்துக் கொத்தாக மரணமடைவது இது தான் முதல் தடவையல்ல. 2019 இல் பொட்ஸ்வானாவின் சோபி தேசிய பூங்காவில் வரட்சி காரணமாக, இரண்டு மாதங்களில் 100 யானைகள் மரணமடைந்திருந்தன. அவற்றில் சில அந்திராக்ஸ் பக்டீரியம் காரணமாகவும் இருந்திருக்கலாம் எனவும் அப்போது பேசப்பட்டது. வரட்சி காரணமாக அந்திராக்ஸ் தெளிக்கப்பட்ட புற்களை அவை மேய்ந்தமை அதற்குக் காரணமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இந்தத் தடவை அந்திராக்ஸ் தடயங்கள் எதுவும் அவற்றின் உடல்களில் காணப்படவில்லை.

சந்தேகம்

இறந்த யானைகளில் பலவித வயதுடையனவும் இருந்தன எனவும், 70% மான மரணங்களும் சிறிய நீர்க்குழிகளை அண்டியே நடைபெற்றிருக்கின்றன எனவும் உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர். இவற்றில் சில இறப்பதற்கு முதல் வட்டங்களில் சுற்றிக்கொண்டு பின்னர் நிலத்தில் முகத்தைக் குற்றியபடி படுத்துக்கொண்டன எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இது அவற்றின் மூளைகளில் ஏற்படும் வியாதி காரணமாகவும் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

பிரித்தானியாவைச் சேர்ந்த ‘தேசிய பூங்காப் பாதுகாப்பு’ அமைப்பைச் சேர்ந்த பணிப்பாளர் நியால் மக்கான் இம் மரணங்கள் பற்றிக் குறிப்பிடும்போது. “இய் யானைகளில் சில இறப்பதற்கு முதல் முகத்தை நிலத்தில் குத்துவதோடு வீழ்ந்து சடுதியாக அவற்றின் உயிர்கள் பிரிகின்றன; சில வட்டமாகச் சுற்றிய பின்னர் வீழ்ந்து மரணமாகின்றன. இதனால் எப்படியான நஞ்சு இவற்றைக் கொன்றது என்பதைத் தீர்மானிப்பது சிரமாமாகவிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சயனைட்

இன்னுமொரு சந்தேகம், இய்யானைகள் குடிக்கும் நீரில் சயனைட் கலக்கப்பட்டிருக்கலாமா என்பது. யானைகளை அவற்றின் தந்தங்களுக்காகக் கொலை செய்பவர்கள் பொதுவாக இம் முறையையே பாவிக்கின்றனர். இப்படி மரணமடைந்த யானைகளின் இறைச்சியை உண்ணும் மிருகங்களும் பின்னர் இறந்துபோவது அவதானிக்கப்பட்டது. பொட்ஸ்வானாவில் இப்படி நடைபெற்றிருப்பதற்குச் சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய்

கென்யாவைத் தளமாகக் கொண்ட ‘யானைகளைப் பாதுகாப்போம்’ அமைப்பைச் சேர்ந்த கிறிஸ் தூலெஸ் என்ற தலைமை ஆராய்ச்சியாளர் கருத்துப்படி, ‘என்செஃபலோமயோகார்டைற்றிஸ்’ (encephalomyocarditis) எனப்படும் வைரஸ் தொற்றுக் காரணமாக இது நடைபெற வாய்ப்புண்டு எனவும், இவ் வைரஸ்கள் பொதுவாக எலிகளினால் பரவலடைவதாகவும் தெரிவிக்கிறார். இத்தொற்று நரம்புகளைப் பாதிக்கிறதென்றும், 1990 களில் தென்னாபிரிக்காவின் குரூகர் தேசியப் பூங்காவில் 60 யானைகள் இந்நோய்க்கு மரணமாகியிருந்தன எனவும் அவர் கூறுகிறார். பொட்ஸ்வானா சமீபத்தில் தான் கடும் வரட்சியிலிருந்து மீண்டதெனவும் இதனால் யானைகள் பலவீனமான் நிலையில் இருந்திருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.மந்த கதியில் அரசாங்கம்

பொட்ஸ்வானா அரசாங்கம் இவ் விடயத்தில் மந்த கதியில் இயங்குவது அதன் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகூடப் பரிசோதனைகளை வெளியிடாமல் வைத்திருப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது. இறந்த யானைகளின் அங்கங்கள், இறந்த இடங்களில் பெறப்பட்ட மண், நீர் போன்றனவற்றின் மீதான பரிசோதனைகளை தேசிய விலங்கு ஆய்வுகூடம் தற்போது செய்துவருகிறது. “இது பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கோ அல்லது முடிவுகள் பற்றி ஊகங்களைத் தெரிவிப்பதற்கோ நாம் தயாராகவில்லை” என இதற்குப் பொறுப்பான அதிகாரி ரவோலோ தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email