Spread the love
பேரவையின் பொங்கல் – ஓ – பொங்கல் 2020 – ஒரு அலசல்
பொங்கும் சொம்புகள் | கெஞ்சாதே-10 1
கனடா மூர்த்தி
கனடா மூர்த்தி

கனடியத் தமிழர் பேரவை CTC தனது 13வது வருடாந்தப் பொங்கல் (Annual Gala Dinner) விழாவின்போது “கெஞ்சாதே” என  தமது நாடுகளில் பணியாற்றிய இருவருக்கு விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது.
ஒருவர் “நல்ல மருத்துவம் தேடி வேறு நகரங்களுக்குப் போய் கெஞ்சாதே.. உனக்கு யாழ்ப்பாணத்திலேயே நல்லதொரு மருத்துவமனையை அமைத்துத் தர நான் பணிபுரிகிறேன்” என வடமாகாணத்து மருத்துவ மேம்பாட்டிற்காக பணிபுரியும் டொக்டர் சத்திய மூர்த்தி. இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தரப்பட்டிருக்கிறது.

பொங்கும் சொம்புகள் | கெஞ்சாதே-10 2
‘கீழடி’ யை மேலே கொண்டுவந்த கனிமொழி

மற்றவர் தமிழகத்து கீழடி தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று, அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்தும் வகையிலும், அகழ்வினை நிறுத்தும் வகையிலும் இந்திய மத்திய தொல்லியல் துறையினர்  செய்த சம்பவங்கள் தொடர, என்ன செய்வதென்று தெரியாத கையறு நிலையில் தமிழ் மக்கள் நின்று ‘யாரிடம் கெஞ்சுவது’ என நினைத்துக் கொண்டிருந்தபோது, “யாரிடமும் கெஞ்சாதே.. எனது சட்ட அறிவை வைத்து கீழடி ஆய்வுகளை நான் தொடர வைக்கிறேன்” என நீதிமன்றம் சென்று வழக்குத் தொடர்ந்த தமிழகத்து கனிமொழி மதி. தமிழர் வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்ட  இவருக்கு மாற்றத்திற்கான தலைமைத்துவ விருது தரப்பட்டிருக்கிறது.

அன்று Saturday, January 18, 2020 கடுமையான பனிப்பொழிவு. 15 சென்ரிமீற்றர் வரை ‘ஸ்னோ’ கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்ந்திருந்தது. வெள்ளையோடு வெள்ளையாகப் புதைந்திருந்த எனது காரை கீழடியில் புதைபொருட்களை மீட்டதுபோல மீட்டெடுத்து…   பனிவிழும் மலர்வனங்களை தாண்டி ஓடி.. 
ஐந்து நட்சத்திர ஹோட்டலான  Hilton Toronto / Markham Suites Conference Centre  மண்டபத்துள் நுழைந்து கொன்ஸவேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் (மார்க்கம் யூனியன்வில் தொகுதி) எனது நண்பராயும் அமைந்திட்ட Bob Saroya அவரகளுடன் மண்டபத்துள்ளே போய் அமர்ந்திருந்தேன். (நடந்து முடிந்த 2019பாராளுமன்றத் தேர்தலின்போது Bob Saroyaவின் வெற்றிக்காகத்தான் தேர்தல் பணியாற்றினேனுங்கோ..)  சரி… நிகழ்ச்சி எப்படி?

பொங்கும் சொம்புகள் | கெஞ்சாதே-10 3
கனிமொழி மதியுடன் கனடா மூர்த்தி

வந்திருந்தோருக்கெல்லாம் கனடியத் தமிழர் பேரவை CTC மீதும், தமிழ் கனடியர்கள்மீதும் பெரும் மரியாதை வர வைக்கும் மறைமுக நோக்குடன் விழா நடந்தேறியது. கனடாவின் அரசியல்வாதிகள் (மார்க்கம் மேயர், ஸ்ரோவில் மேயர் உட்பட) பல நிலைப்பட்ட அரசியல் பிரமுகர்கள் , மந்திரிகள், மனித உரிமையாளர்கள், கவுன்சிலர்கள், எம்பிக்கள், எம்பிபிக்கள், கல்விச்சபை உறுப்பினர்கள் மட்டுமல்ல போலிஸ் படையிலிருந்து பலரும், CTCயின் அபிமானிகளுமாக மண்டபம் நிறைந்திருந்தது.

மேடைப்பேச்சுகள், மேடையில் காட்டப்பட்ட வீடியோக்கள் எல்லாமே ஒரு ‘நோக்கத்தின்பாற்பட்டவை’ என்பது நன்றாகவே புரிந்தது. அதென்ன நோக்கம்? கனடியத் தமிழர் பேரவையின் பொறுப்பான பணி அனைத்தும் வந்திருந்தோருக்கு நன்கு புரியவேண்டும் என்பதுதான். (அந்த நேர்த்தியைக் கவனித்தபோது CTC எதிர்ப்பாளர்களும், அவர்களது ‘சொம்பு’களும் வந்திருந்து அவற்றைப் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றுதான் தோன்றியது.)

கடந்த 2019 ஆண்டு CTC செய்த சேவைகள் அனைத்தையும் சுருக்கமாக வீடியோ பட வடிவில் விபரித்தார்கள். மேடைக்கு வந்த அனைவரும் கனகச்சிதமாக நடந்து கொண்டார்கள். கருத்தாழம் மிக்க சுருக்கமான பேச்சுக்கள். நாட்டியங்கள், இளைஞர் நிகழ்ச்சிகள்… (Scarborough—Rouge Park தொகுதி Liberal எம்பியான கரி ஆனந்தசங்கரிக்கு மேடையில் பேச நேரம் தரப்படவில்லை என்று ஒரு சமூகத் தலைவர் கடுமையாக கவலை தெரிவித்துச் சென்றார்.  “அப்படியா? CTCயின் மேடைக்கு வர Liberal கரிக்கு விருப்பமில்லையாக்கும்” என்றேன் நான்.)

பொங்கும் சொம்புகள் | கெஞ்சாதே-10 4
ஈழத்தின் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் கைத்தறி ஆடைகள் விற்பனையில்

மண்டபத்திற்கு வெளியே… ஈழநிலப்பகுதியில் இருந்து கையால் நெய்யப்பட்ட கைத்தறி சேலைகளும், வேறு கைத்தறி உடைகளும் பிரத்தியேகமாக தருவிக்கப்பட்டு, அவற்றை மண்டபத்தில் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். அழகான சேலைகள். தரமான சேலைகள்… தாயகத்து பெண்கள் முன்னேற்றத்திற்காக செய்யப்பட்ட விற்பனை அது! (அதைத்தான் “சீலை வித்து CTCக்காறங்கள் காசு அடிக்கிறாங்கள்” என்று சில சொம்புகள் புலம்புகின்றன.)

கையால் நெய்யப்பட்ட அந்த கைத்தறி உடைகளை அணிந்தவாறே, கட்டுடலும், கட்டழகும் கொண்ட ஆணகள் பெண்கள் கலந்து கொண்ட  Fashion show நிகழ்வொன்றையும்   – நிகழ்ச்சிகள் ஆரம்பமாகுமுன்-  நடத்தினார்கள். பொதுவாக தமிழ் ஆண்கள் நாம் ‘வண்டி’யும் ‘தொந்தி’யுமாக அலைவோம். மாறாக இந்த Fashion showவில் இரண்டு ஆண் மகன்கள் “தமது கட்டுடலுக்கு ஈழத்து தாய்மார்கள் கையால் நெய்து அனுப்பிய கைத்தறி உடை எத்தனை பொருத்தம்” என்பதுபோல கம்பீரமாக நடந்து காட்டினார்கள். (‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சோழர் படை வீரர்களாக நடிக்க அனுப்பலாம்.) அவர்களில் கட்டுடல் கொண்ட ஒருவர் Mr. Tamil-Canada 2019 வெற்றியாளர். 

பெண்களும் தமது சகோதரிகள் நெய்தனுப்பிய கைத்தறி சேலைகளை உடுத்து ஆண்களின் கண்களை மட்டுமல்ல பெண்களின் கமெராக்களையும் கிளிக் செய்ய வைத்துக் கொண்டிருந்தார்கள்.  எதிர்கால தமிழ்க்கனடியர்களாகத் திகழவிருக்கும் இளைஞர்களால் நடத்தப்பட்ட  அந்த கைத்தறி Fashion show  = நல்லதொரு முயற்சி.

பொங்கும் சொம்புகள் | கெஞ்சாதே-10 5
கைத்தறி சேலையணிந்து மார்க்கம் தோர்ண்ஹில் பா.உ. மேரி இங்

அதேபோல தமிழகத்து மனித உரிமையாளர், சமூக செயல்பாட்டாளர் கனிமொழிக்கு தரப்பட்ட விருதும் சிறப்பானதொரு காரியம். கீழடி ஆய்வுகள் தடைப்பட்டிருந்த நேரத்தில் அதற்கு எதிராக வழக்குத் தொடுத்து அந்த ஆய்வுகள் தொடர வழி செய்து கொடுத்த அவரது சமயோசிதமான நடவடிக்கையினால்தான் ‘தந்திரமாக தடை செய்யப்பட்டிருந்த’ கீழடி ஆய்வுகள் மீளவும் செய்யப்பட்டன. அந்த வழக்கை இட்டதற்காகத்தான் தமிழர் பேரவையினர் இந்த விருதினை வழங்கினார்கள்.  கனிமொழி மதியின் துணிச்சலான நடவடிக்கையினால் “இந்தியாவின் மூத்த வாழும் மொழியான தமிழின் வயது இன்னும் மூன்று நூற்றாண்டுகள் அதிகம்” என்பது தற்போது ஆதாரத்துடன் நிறுவப்பட்டிருக்கிறது.. 
***
சிறப்பு விருந்தினர் கனிமொழியோடு ‘கீழடி வழக்கு விவாகாரம்’ தொடர்பான அனுபவப் பகிர்வு திங்கட்கிழமை (20-01-2020)  நடந்தது. அதற்கும் கனடியத் தமிழர் பேரவையினர் அழைத்திருந்தார்கள். போனேன். 

பொங்கும் சொம்புகள் | கெஞ்சாதே-10 6
ஈழப் பெண்கள் பின்னிய ஆடைகளைக் காட்சிப்படுத்திய கனடியத் தமிழர்கள்

அந்த வழக்கை இடுவதற்கு தனக்கு ஏற்பட்ட உந்துதல், சிரமங்கள், அசூயைகள் என பலவற்றைக் குறித்து விளக்கமாக மிகச் சிறப்பாக பேசினார் கனிமொழி. பலரும் கேட்ட பலதரப்பட்ட கேள்விகளுக்கு சமயோசிதமாக பதில் சொன்னார். Eazy News கிருபா கிருசானின் கேள்விக்குக்கூட கேள்வியை விஞ்சிநின்ற பதில் சொன்னார். ஆனால் நான் கேட்ட கேள்விக்கு ஏனோ சரிவரப் பதில் கிடைக்கவில்லை. நான் கேட்டது இதுதான்: “அகழ்வாராய்ச்சியைத் தடுத்தார்கள்… நிறுத்தினார்கள் என்கிறீர்களே.. யார் அதை செய்தது? அந்த வில்லன்கள் யார் என்ற சொல்லுவீர்களா?” 

சுமார் ஒரு மணி நேரம் கனிமொழியின் ‘உரையாடல்’ ‘கேள்வி பதில்’ நிகழ்ச்சியின்பின் ‘ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை’ குறித்த ஒரு விளக்கம் பொன்னையா விவேகானந்தனால் தரப்பட்டது. “தமிழரின் இருக்கையும் தமிழரின் எழுகையும் ஒரு கோட்டில் சந்திக்கின்றன” என்பதை அழுத்தமாக விளக்க வேண்டிய  பொ. வி., கிட்டத்தட்ட “லாபாய் லாபாய் லாபட்ட லாபாய்” என்ற தொனியில் தமிழ் இருக்கையின் ‘கல்யாணகுணங்கள்’ குறித்து பேசினார். மிகைபட ஆக்ரோஷமான தொனியில் உணர்த்தினால்தான் இந்த தமிழ்பேசும் நல்லுலகிற்கு ‘மண்டையில் உறைக்கும்’ என அவர் நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கென்னவோ “தமிழ் இருக்கை அமைந்தபின் நாம் செய்யக்கூடியவை” என அவர் பட்டியலிட்ட பலவும் பல்கலைக்கழக யதார்த்தத்தை மீறியவை என்பதாகத்தான் தோன்றுகிறது. ஒரு பல்கலைக்கழக ஆய்வு நிலையம் பற்றி பேசும்போது மிகைப்படுத்தல்கள் தேவையில்லையே.

பொங்கும் சொம்புகள் | கெஞ்சாதே-10 7
‘சைவக்’ கரும்புடன் தாஸ்

இவை ஒருபுறமிருக்க ஒரு சுவாரஸ்யமாக விடயம் பற்றி எழுதவேண்டும் போலிருக்கிறது.  ” Gala Dinner பொங்கல் விழாவின்போது Chicken, Fish உணவுகள் பரிமாறப்படுவது சரியா?” என முகப்புத்தகத்தில் பலரும் குமுறுகிறார்கள். இந்த ‘தலையாய பிரச்சனை’ குறித்து கருத்துக்கள்  முகப்புத்தகத்தில் வெடித்திருக்கின்றன. ஒரு ‘பழமைவாத ஆதரவாளனாக’   அதுபற்றி எனது கருத்துக்கள் அடுத்த கட்டுரையில்…

தொடரும் …
Print Friendly, PDF & Email