World

பைடன் நிர்வாகத்திடம் ஆட்சியைக் கையளிக்க ட்றம்ப் இணக்கம்!


அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் நிர்வாகத்திடம் ஆட்சியைக் கையளிக்க டொனால்ட் ட்றம்ப் இணக்கம் தெரிவித்துள்ளார் என நிர்வாக மாற்றத்தை நிர்வகிக்கும் ஆனையம் அறிவித்துள்ளது.

இத் தேர்தலில் ஜோ பைடனே வெற்றி பெற்றவர் எனபதை உத்தியோகபூர்வாமாக அறிவித்த அமெரிக்க பொதுச் சேவைகள் நிர்வாக நிர்வாகம் (General Services Administration (GSA)) எனப்படும் சுதந்திரமாக இயங்கும் ஆணையம், ஜனவரி 20 இல் பதவியேற்பு நிகழ்வுக்கான தயாரிப்புக்களைச் செய்யும்படி பைடனுக்கு அறிவித்துள்ளது.

சனியன்று பென்சில்வேனியாவில் மதிய அரசின் நீதிபதி ட்றம்ப் தரப்பின் விண்ணப்பத்தை நிராகரித்ததும், அதைத் தொடர்ந்து திங்களன்று மிச்சிகன் மாநிலம் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியதும் ட்றம்ப் தரப்பின் முயற்சிகளுக்கு இறுதி ஆணி அடித்துவிட்டது. இதைத் தொடர்ந்து ட்றம்ப் தனது தோல்வியை ஒத்துக்கொண்டு நிர்வாக மாற்றத்துக்கு இணங்கியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து பைடன் அணி தனது அமைச்சரவை நியமனங்களை இன்று ஆரம்பித்துவைத்தது.



பைடன் நிர்வாக அமைச்சரவை

இன்று (திங்கள்) பைடன் நிர்வாகம் தனது வெளிநாட்டு, தேசிய பாதுகாப்பு பதவிகளுக்கான நியமனங்களை அறிவித்துள்ளது. இதில் பல ‘முதல் தடவை’ அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க புலனாய்வு விவகாரங்களைக் கையாளும் ஆணையத்தின் தலைவராக முதல் தடவையாக, அவ்றில் ஹெய்ன்ஸ் எனப்படும் ஒரு பெண் நியமிக்கப்படுகிறார். இவர் முன்னாள் சீ.ஐ.ஏ. பணியாளராகவும் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். உள்நாட்டுப் பாதுகாப்பு (Homeland Security) ஆணையத்தின் தலைவராக கியூபாவில் பிறந்த, லத்தீனோ சமூகத்தைச் சேர்ந்த, அளஹாந்திரோ மயோர்க்காஸ் நியமிக்கப்படுகிறார். யனெற் யெலென் திறைசேரிச் செயலாளராக நியமிக்கப்படும் முதல் பெண்ணாவார். அந்தோனி பிளிங்கென் ராஜாங்கச் செயலாளராகவும் கறுப்பினப் பெண்ணான லிண்டா தோமஸ்-கிறீன்ஃபீல்ட் ஐ.நா.வுக்கான தூதுவராகவும் ஜேக் சுலிவன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

அடுத்துவரும் சில நாட்களில் நிர்வாக மாற்றத்தைக் கண்காணிக்கும் GSA, கோவிட் தடுப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் சம்பந்தப்பட்ட ஆணையங்களின் அதிகாரிகளுடன் பேசி மாற்றங்களை இலகுவாக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.