Sri Lanka

பேரா.ஹூல் சுய தனிமைப்படுத்தல் செய்யவேண்டியதில்லை – தேர்தல் ஆணையத் தலைவர்

கொழும்பு மே 22, 2020: தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராகிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் அவரது மகள் எழிலினி தொடர்பாகத் தென்னிலங்கை ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மே 04, லண்டனிலிருந்து திரும்பிய எழிலினி, இதர பயணிகளைப் போல், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட பின்னர் பரிசோதனையில் நோயில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். அதற்கான அத்தாட்சிப் பத்திரத்தில் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவும், மருத்துவ அதிகாரி அனில் ஜசிங்கவும் கையெழுத்திட்டிருந்தார்கள்.

மகளை அழைத்துக்கொண்டு, ஆணையப் பணிமனைக்குச் சென்றபோது பேரா. ஹூல் ஆணையத்தின் வாகனத்தைத் தனிப்பட்ட காரணங்களுக்குப் பாவித்தார் எனவும், எழிலினி மேலும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் செல்லாது தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது தவறு என்றும் தென்னிலங்கை ஊடகங்கள் சில குற்றம்சாட்டியிருந்தன. அதே வேளை யாழ்ப்பாணம் சென்ற பேராசிரியர் ஹூலின் வீட்டிற்குச் சென்ற காவற்துறையினரால் பேராசிரியர் ஹூல், எழிலினி மற்றும் ஹூலின் வாகனச் சாரதி அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் சென்றிருக்கவேண்டுமென நிர்ப்பந்திகப்பட்டிருந்தார்கள் எனவும், வாகனச்சாரதி தடுத்துவைக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டிருந்ததாகவும் பேரா. ஹூல் நேற்று ‘கொலொம்பொ ரெலிகிராஃப்’ பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் தேர்தல் ஆணையத் தலைவர் தலையிட்டு வாகனச் சாரதியை விடுவித்திருந்தார். இன்றய அறிக்கையில், ஆணையத் தலைவர் “எழிலினியைத் தவிர மற்றவர்கள் சுய தனிமைப்படுத்தல் செய்யவேண்டியதில்லை எனவும், ஆணைய அலுவலகத்தின் பணிப்பின் பேரிலேயே பேராசிரியர் அலுவலக வாகனத்தைப் பாவிக்கவேண்டி வந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் யாழ்ப்பாணத்தில் வசித்து வருவதால், யாழ்ப்பாண அலுவலகத்தின் வாகனத்தையே பாவிக்கும்படி அலுவலகம் அவருக்குப் பணித்திருந்தது. ஊரடங்கு நடைமுறையின் காரணமாகத் தனியார் வாகனத்தைப் பாவிக்க முடியவில்லை எனவும், பொதுப் போக்குவரத்து பாவனையில் இல்லாமையால், மே 20 கொழும்பு அலுவலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹூல், ஆணையத்தின் அனுமதியுடன் அலுவலக வாகனத்தில் கொழும்பு வந்திருந்தார். அவர் மீண்டும் யாழ் போகும்போது , அலுவலகத்தின் அனுமதியுடன், மகளையும் அவ்வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், தென்னிலங்கை ஊடகங்கள், எழிலினி சுய தனிமைப்படுத்தலில் செல்லாதமை, ஹூல் அலுவலக வாகனத்தைப் பாவித்தமை பற்றித் தவறான செய்திகளை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இன்றய அறிக்கையின் மூலம் ஆணையத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சம்பவத்தின் பின்னணியைத் தெளிவுபடுத்தியுள்ளார்.