News & AnalysisSri Lanka

பேராயர் மல்கம் ரஞ்சித் குத்துக்கரணம் – உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பில்லையாம்

பேராயர் மல்கம் ரஞ்சித் நேற்று பொரளை மயானத்தில் கூறிய வார்த்தைகள் திரிபுபடுத்தப்பட்டுவிட்டன எனவும், 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கள் அரசியல் காரணங்களுக்காக நடைபெறவில்லை எனவும் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள், சில அரசியல்வாதிகளின் தமது அரசியல் இலாபங்களுக்காக மத தீவிரவாதிகளைக் கருவிகளாகக் கொண்டு நடத்தப்பட்டவை என்ற கருத்துப்பட தான் கூறியிருந்தமை உள்ளூர் அரசியல்வாதிகளைக் குறிப்பதாகச் சில ஊடகங்கள் கருத்துத் தெரிவிதிருந்தமை தவறு எனவும், தன் குறிப்பிட்டது வெளிநாட்டு அரசியல் சக்திகளையே எனவும் இன்றைய ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

“எநது கருத்துக்கள் தவறான அர்தத்துடன் பார்க்கப்படுகின்றது. நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் இல்லையென்றோ அல்லது அதன் பரவல் இல்லயென்றோ நான் ஒருபோதும் கூறவில்லை. அரசியல் சக்திகளுக்கும் அதற்கும் தொடர்பிருப்பதாகவும் கூறவில்லை. எப்படி வெளிநாட்டு சக்திகளால் வஹாபிசம் ஒரு கருவியாகப் பாவிக்கப்படுகிறது எனவே நான் கூறியிருந்தேன். உள்ளூர் அரசியல் சக்திகள் பற்றி நான் குறிப்பிடவில்லை” என அவர் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார். இந்த மாநாட்டில் நாட்டிலுள்ள பல ஆயர்களும் பங்கெடுத்திருந்தார்கள்.

2019 குண்டுவெடிப்பு சம்பவங்களின்போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களது நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னமொன்றைத் திறந்துவைக்கும் வைபவம் நேற்று பொரளையில் நடைபெற்றது. இதில் பேசிய பேராயர் “இச் சம்பவங்களின் பின்னால் மத தீவிரவாதமமோ அல்லது தீவிர மதப் பற்றோ இல்லை, மாறாக தமது அதிகாரங்களைத் தக்கவைக்க சிலர் எடுத்த அரசியல் முயற்சிகளே இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

தற்போதைய அரசுடன் மிக நெருங்கிய தொடர்புடைய அரசியல் சக்திகளுக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கும் தொடர்புண்டு எனப் பல எதிர்க்கட்சிகள் கொண்டுள்ள கருத்துக்களையே பேராயருன் நேற்று எதிரொலித்திருந்தார் எனப் பரவலாகப் பேசப்பட்டது.

பேராயரின் சர்ச்சைக்குள் ஈடுபடுவது இது முதல் தடவையல்ல. ஏப்ரல் 21, 2019 இல் நடைபெற்ற குண்டுத் தாகுதல்களைத் தடுக்க முந்நாள் ஜனாதிபதி தவறிவிட்டார் எனவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் சில வாரங்களுக்கு முன்னர் பேராயர் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, கத்தோலிக்க சபை விளக்கமளிக்கவேண்டி ஏற்பட்டிருந்தது. “பேராயரின் கடுமையான சொற்பிரயோகம் எவரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காகக் கூறப்பட்டவையல்ல” என அருட் தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ அப்போது தெரிவித்திருந்தார்.

கடந்த பெப்ரவரியிலும் ” இச்சம்பவங்களின் பின்னணியிலுள்ளவர்களை இலங்கை அரசாங்கம் இனம்காணத் தவறினால் சர்வதேச சட்ட உதவிகளைத் தேடி நாம் போகவேண்டியிருக்கும்” என அவர் தெரிவித்திருந்தார்.